Published : 28 Oct 2014 12:51 PM
Last Updated : 28 Oct 2014 12:51 PM
ரத்தத்தில் உள்ள மொத்தக் கொலஸ்ட்ரால் அளவு 200 மில்லி கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதில் 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதம்வரை ‘நல்ல கொழுப்பாக 'அமைய வேண்டும். அதாவது 40-50 மில்லி கிராம் அளவுக்காவது நல்ல கொழுப்பு இருக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் ஹெச்.டி.எல். கொழுப்பு (High-density lipoprotein - HDL) என்கிறார்கள்.
இயல்பாகவே பெண்களுக்கு மாதவிடாய் நிற்பதற்கு முன்பு அவர்களுடைய உடலில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் காரணமாக, சரியான விகிதத்தில் ஹெச்.டி.எல். அமைவதால் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது.
ஹெச்.டி.எல். கொழுப்பு ஒரு போலீஸ்காரரைப் போல் செயல்பட்டு ரத்தக் குழாய்களில் ஆங்காங்கே படிந்த கெட்ட கொழுப்பை (இதை low-density lipoprotein - LDL என்கிறார்கள்) கல்லீரலுக்கு இழுத்து வந்து பித்த நீர் வழியாக வெளியேற்றிவிடுகிறது. பொதுவாக ஹெச்.டி.எல். கொழுப்பு 35 மில்லி கிராமுக்குக் கீழே இருப்பது உடலுக்கு நல்லதல்ல.
நல்ல கொழுப்பை அதிகரிக்க வேண்டுமென்றால் முடிந்தவரை மாமிச உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். முட்டையின் மஞ்சள் கரு, கோழிக்கறியின் தோல், மூளை, ஈரல் முதலியவற்றைச் சாப்பிடக் கூடாது.
நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். டாக்டரின் பரிந்துரையின் பேரில் குறிப்பிட்ட சில மாத்திரைகளைச் சாப்பிடுவதன் மூலமும் நல்ல கொழுப்பை அதிகரிக்கலாம். மாதவிடாய் நின்ற பெண்கள் ஹார்மோன் மாத்திரை (HRT) சாப்பிடுவதின் மூலம் ரத்தத்தில் நல்ல கொழுப்பு குறையாமல் பார்த்துக்கொள்ளலாம். மாரடைப்பைத் தவிர்க்கலாம்.
‘நலம் தரும் மருத்துவம்’ என்ற நூலிலிருந்து
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT