Published : 14 Nov 2013 12:00 AM
Last Updated : 14 Nov 2013 12:00 AM

நீரழிவுக்காரர்களுக்குச் சிறப்பு காலணி ஏன்?

நீரிழிவு நோய் கால்களில் ஏராளமான பிரச்சினைகளை ஏற்படுத்திவிடுவதுண்டு. உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது நரம்புகள் மற்றும் ரத்த நாளங்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இதனால் உணர்வு இழப்புகள், குறிப்பாகப் பாதங்களில் ஏற்படும் சிறு காயங்களைக்கூட உணர முடியாமல் போகின்றன. இதன் காரணமாகப் பாதங்களில் புண்களும், தொற்றுகளும் ஏற்படுவதைத் தடுக்க முடியாமல் போகின்றன.

இதுபோன்ற பிரச்சினைகளைத் தடுக்க அதற்குரிய காலணிகளை அணியும் போது பாதங்களுக்கு ஏற்றதாகவும், பாதங்கள் காயங்கள் ஏற்படுவதிலிருந்தும் காக்கப்படுகின்றன. இதுபோன்ற சிறப்பு காலணிகளைத் தேர்வு செய்வதற்கு முன்பு எந்த வகையான சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது என்பதை மருத்துவருடன் அல்லது பாத நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவருடன் ஆலோசிக்க வேண்டும். தற்போது சந்தையில் நீரிழிவு நோயாளிக்காகச் சிறப்புக் காலணிகள் ஏராளமாக விற்கப்படுகின்றன. சிறப்பு காலணிகளை வாங்குவதற்கும் இப்போது பரிந்துரைக்கப்படுகிறது. இந்த வகையான காலணிகளைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொருட்கள் பாதங்களைப் பாதுகாக்கும் வகையிலும், நமது உயரத்துக்கு ஏற்பவும் உள்ளன.

அறிகுறிகள்:

நீரிழிவு நோயாளிகள் தங்கள் பாதங்களில் பிரச்சினைகள் உள்ளனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும். பாதங்களில் காயங்கள் ஏற்படாமல் இருக்கப் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பாதங்களில் உணர்வுகள் குறைவது, பாத வடிவத்தில் மாற்றம், கால்களில் ஏற்படும் புண்கள் அல்லது ஆறாத புண்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். நீரழிவு தற்போது எங்கும் வியாபித்திருக்கும் ஒரு நோயாக உள்ளது. எனவே விழிப்புடன் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் அதன் வீரியத்தைக் குறைத்து நம் கால்களில் ஊனம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். கால்களில் எந்தப் பிரச்சினை இல்லாவிட்டாலும்கூட மருத்துவரையோ அல்லது பாத நோய்களைக் குணப்படுத்தும் நிபுணரையோ சந்தித்து வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x