Published : 10 Jun 2017 11:15 AM
Last Updated : 10 Jun 2017 11:15 AM

வாசகர் அனுபவம்: அக்கறையான பேச்சே பாதி மருந்து

மருத்துவர்கள் நோயின் தன்மையை மருத்துவரிடம் விவரிக்கும்போது அவர்களை பீதிக்கு உள்ளாக்கி மனம் ரீதியான தாக்குதலை பெரும்பாலான மருத்துவர்கள் கையாள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். நோயாளி சிகிச்சைக்கு தன் முன்னே அமர்ந்தவுடன் அவர்களை குசலம் கூட விசாரிக்கத் தேவையில்லை. இதமாகப் பேசி நோயின் விவரம் கேட்டறிந்து சிகிச்சை முறைகளை பதமாக எடுத்துக் கூறினாலே, நோயின் பாதிப்பு பாதியளவு குறைய வாய்ப்புண்டு. காரணம், மனரீதியான உளவியலே. சில மருத்துவர்கள் நோயாளி வந்தவுடன் அவசர அவசரமாகப் பரிசோதித்து, மருந்து, மாத்திரைகளை எழுதி அவரை அனுப்புவதில் குறியாக இருப்பார். ஏனெனில், அடுத்தடுத்த நோயாளிகள் காத்திருக்கிறார்களே என்ற எதிர்பார்ப்புதான். இதையெல்லாம் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டிருப்போர் தவிர்த்து சேவை செய்தால்தான், மருத்துவர் -நோயாளி இடையே எழும் ஆரோக்கியமற்ற இடைவெளியை குறைக்க இயலும்.

- ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

மருத்துவர் ஒருவரே, மருத்துவர்களுக்கு அவசர சிகிச்சை வேண்டுமென எழுதியிருப்பது சிந்திக்க வேண்டிய விஷயம். பெரும்பாலான மருத்துவர்கள் பணம் பிடுங்கிகளாக உள்ளனர். தோல் அரிப்புக்கு ஒருவர் மருத்துவரிடம் சென்றார். மருத்துவ சோப், ஆயின்மென்ட், மாத்திரை எழுதித் தந்ததோடு ஒரு இன்ஜெக்ஷனும் போட்டுவிட்டு, பீஸை வாங்கிக் கொண்டார். அதோடு ரூபாய் 600 அளவுக்கு பரிசோதனை செய்யச் சொன்ன அனுபவம் மிக்க அபத்த மருத்துவரை எப்படி அழைப்பது? சிகிச்சைக்கு முன்னர் அல்லவா டெஸ்ட் எடுக்கச் சொல்லவேண்டும்? மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் போல, மருத்துவர்களுக்கும் எதிரான போராட்டம் விரைவில் வரும்.

- டி.கே.மூர்த்தி, தலைஞாயிறு.

மருத்துவர்களுக்குத் தேவை அவசர சிகிச்சை எனும் கட்டுரை, அந்தக்கால குடும்ப டாக்டர்களின் அருமையை உணரச் செய்தது. குடும்ப டாக்டர் என்பவர் நோயாளிகளின் பின்னணியைத் தெரிந்து வைத்திருப்பார். நகைச்சுவை உணர்வோடு அணுகுவார். ரேஷன் கார்டில் இல்லாத குடும்ப உறுப்பினர் அவர் என்றால் மிகையாகாது. இப்போது அப்படிப்பட்டவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். காரணம், `சுத்தி மத்தி சோத்துப்பானைக்குள்ளே’ என்பார்கள் கிராமத்துப்பக்கம். வளர்ப்பு முறை மாறிவிட்டது. பிள்ளையை, பயோ மேத்ஸ் எடுத்த நாளிலிருந்து உறவுகளின் கண்களிலேயே காட்டாமல் வளர்ப்பது, பொழுதுபோக்கு அம்சங்களை தவிர்ப்பது. டாக்டர் ஆக்குவதற்கு ஆகச் சிறந்த முயற்சிகள் மேற்கொள்வது, மருத்துவராக ஆன பிறகு, அவரை ஒரு வெளி கிரகத்து ஆசாமியைப் போல் பாவித்து பெற்றோரே, `அய்யா, மாடியில இருக்காரு…’ என போலி மரியாதை கொடுப்பது. இவையெல்லாம் மருத்துவர்களையே மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் விஷயங்கள். எனக்குத் தெரிந்த மருத்துவர், உறுவுகளைப் பேணும் நற்பண்பாளர். அவர் விசேஷம் ஒன்றிற்கு வந்துவிட்டால் போதும். அனைவரும் கும்பல் கூடி அந்த இடத்தையே கிளினிக் ஆக்க முயல்வர். பாவம் அவர் ஒரு கட்டத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் விசேஷ நாளுக்கு மூன்று நாட்களுக்கு முன்போ, பின்போ வந்து பரிசுப் பொருளை வழங்கிவிட்டுப் பறந்துவிடுகிறார்.

- தவமணி கோவிந்தராசன், சென்னை.

எல்லாமே பேக்கேஜ்தான்

என் கணவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரே சென்னைக்குக் குடி வந்தோம் மருவருடமே காலிலும் இடுப்பிலும் ஒரு விதமான வலி இருந்தது. ஆர்த்தோ டாக்டரைப் பார்க்கச் சென்ற போது எலும்புக்குத் தேய்மானம் ஏற்பட்டிருக்கிறதென்று கணித்து, தேய்மானம் எந்த நிலையிலிருக்கிறதென்று பார்க்க வேறொரு மையம் விலாசத்தை எழுதித் தந்தார்.

அங்கு போய்ச் சோதனை செய்த பிறகு மீண்டும் ஆர்த்தோ நிபுணரைப் பார்க்கப் போனோம். சில மாத்திரைகளை எழுதித் தந்தார். ஒன்று, அன்றாடம் இரண்டு வேளை. வேறொன்று ஞாயிற்றுக்கிழமை மட்டும். காலை ஐந்துமணிக்கு வெறும் வயிற்றில் போட்டுக் கொள்ள வேண்டும். சில நிபந்தனைகள் வேறு. மல்லாந்து படுக்க வேண்டும். ஓரிரு மணிநேரமான பிறகுதான் நடைப் பயிற்சி.



மேற்சொன்ன மாத்திரைகளை நிபுணர் பரிந்துரையின்படி போட்டுக் கொண்டாலும் நிரந்தரக் குணம் ஏற்படவில்லை. இதற்குள், பிள்ளைக்குத் திருமணம் ஆயிற்று. மருமகளும் வந்துவிட்டதால், எனக்கு வீட்டு வேலை அதிகமாயிற்று (பணிக்குச் செல்லும் மருமகளாயிற்றே!) நன்றாக நினைவிருக்கிறது. 2013 பிப்ரவரி மாதம் சென்றபோது, ஆர்த்தோ டாக்டர் மறுபடியும் சோதனை செய்தார். படுக்கச் சொன்னார். அறையில் நடக்கச் சொன்னார். பேனாவின் மூடியால் மேசையில் குத்தினார். யோசித்தார்.



“ஒரு இஞ்செக்சன் போட்டுக் கொள்ளணும். ஆஸ்பிடலில் ட்ரிப்ஸ் மூலம் ஏற்றணும். மொத்தம் 22 ஆயிரம் ரூபாய் ஆகும்.”



நான் கணவரை நோக்கினேன். அவர் தயங்கினாற்போலிருந்தது. அவரை முறைத்துப் பார்த்தேன். அவருக்கு எலும்பு முறிவு நேர்ந்தபோது, வீட்டுக்குளளேயே தினமும் ஊசி போட்டுக் கொண்டாரே?



“சரி… ’’ என்றார் கணவர்.



``ஒரு மொபைல் எண் எழுதித் தருகிறேன், தேதி நிச்சயம் ஆன பிறகு, போன் பண்ணுங்கள்” என்றார். ஆஸ்பத்திரியையும் குறிப்பிட்டுச் சொன்னார்.



எழுந்துருக்கலானேன்.



“அவசரப்படாதீங்க… தொடர்ந்து மூணு வருடம்… கிட்டத்தட்ட அதே தேதியில்” என்றார்.



இந்த நிபுணர் மீது அபார நம்பிக்கை எங்களுக்கு. ஒப்புக் கொண்டோம். குறிப்பிட்ட தேதியன்று முகவர் ஆஸ்பத்திரி வாசலில் ஊசியுடன் காத்திருந்தார். நிபுணர் காலை 9 மணிக்கு வந்தார்.



கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் ஆயிற்று மருந்து ட்ரிப்ஸ் மூலம் ஏற. 15 நிமிடத்துக்கு ஒரு தரம் நிபுணர் கண்காணித்துக் கொண்டேயிருந்தார். எல்லாம் ஆன பிறகு, உணவு சாப்பிட்டுவிட்டு, படுத்திருந்தேன். எப்படியும் ஒரு நாள் கட்டணம். சீக்கிரம் போவானேன்?



மறுநாள் பெங்களூரிலிருந்து கூரியரில் தடிமனான உறை. காப்பீடு பாலிஸி, இரண்டு டப்பாவில் மாத்திரைகள், காப்பீட்டில், “இந்த தேய்மானம் சம்பந்தமான ஏதாவது சிக்கல் ஒரு வருடத்தில் ஏற்பட்டால்தான் நட்ட ஈடு கிடைக்கும்” என்றிருந்தது. சிக்கல் எங்கே வந்தது என்றால் மாத்திரை உட்கொண்டவுடன்!



இரண்டு நாள் கழித்து வீட்டில் விசேஷம். ஆனால் குமட்டிக் குமட்டி வாந்தி வந்தது. இதற்கான நிபுணரை மயிலையில் சந்திக்கச் சென்றேன். `இலவச’ (2) மாத்திரைகளைப் பார்த்தார்.



“இதை நிறுத்திவிடுங்கள். இது வெளிநாட்டிலிருப்பவர்களுக்குத்தான் சரிப்பட்டுவரும். ரொம்ப `ஸ்ட்ராங்’ என்றார்.



ஆனால் ஆர்த்தோ நிபுணரிடம் தொலைபேசியில் பேசின போது இரவு மட்டும் அரை மாத்திரையைச் சிபாரிசு செய்தார். அதுவும் ஏற்றுக் கொள்ளாததால், மாற்று மாத்திரைகளை உட்கொண்டேன்.



இதுபோல், 2014, 2015ம் ஆண்டும் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இதற்கான பெங்களூர் முகவரிடம், “மாத்திரைகள், இன்சூரன்ஸ் வேண்டாம். தொகையைக் குறையுங்கள்” என்றேன்.



விடாப்பிடியாக அவர், “ நோ! அது முடியாது. அது ஒரு பேக்கேஜ் மேடம்!” என்றார்.



எப்படியோ அந்த எலும்புத் தேய்மானம் முற்றுமாகக் குணமாகிவிட்டது. எங்கள் பாலிஸியில், ஆஸ்பத்தரிக்கான கட்டணம் கிடைக்கவில்லை. நிபுணர் விவரமாக எழுதித் தந்தும், `இதற்காக ஆஸ்பத்திரியில் சேர்வது அவசியமில்லை’ என்று மறுத்துவிட்டார்கள்.



இன்று 74 வயது நடக்கிறது. டயாபடீஸ், இதயக் கோளாறு, ரத்த அழுத்தம் எல்லாம் உண்டு. ஆனால் ஆர்த்தோ மாத்திரைகளை புதிதாக டாக்டர் பரிந்துரைத்ததால் இரண்டு மூன்று முறை கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வேன்

லலிதா லட்சுமணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x