Published : 02 Jan 2014 12:00 AM
Last Updated : 02 Jan 2014 12:00 AM

செவிலியர்களை கணக்கெடுக்க மத்திய அரசு முயற்சி - புதிய இணையதளம் ஆரம்பம்

நாட்டில் தற்போது பணியாற்றும் செவிலியர்களை ஒருங்கிணைக்க புதிய இணையதளம் ஒன்றை முதன்முறையாக ஏற்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு இறங்கி உள்ளது.

நாட்டிலேயே முதல் செவிலியர் பயிற்சிப் பள்ளி அன்றைய‌ சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் ஆங்கிலேயர்களால் 1871ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு 1967ல் மூன்றரை ஆண்டு கால செவிலியர் பட்டயப் பயிற்சிப் பள்ளியும், 1983ல் நான்காண்டு கால இளநிலை செவிலியர் பட்டப் படிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டது.

செவிலியர் பயிற்சி ஆரம்பிக்கப் பட்ட நாளில் இருந்து இன்றுவரை லட்சக்கணக்கில் செவிலியர்கள் பயிற்சி முடித்து முழுநேரமாகப் பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் அவர்களைப்பற்றிய மிகத் துல்லியமான எண்ணிக்கை அரசிடமோ தனியாரிடமோ இல்லை. இதனால் செவிலியர்கள் தொடர்பான மனித வள மேம்பாட்டுத் திட்டங்களைத் தீட்ட முடிவதில்லை. இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு நாடு முழுவதும் பணியாற்றி வருகிற செவிலியர்களை ஒருங்கிணைக்கும் விதமாக புதிய இணையதளம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசுக் கான செவிலியர் பிரிவு ஆலோசகர் மருத்துவர் ஜோஸ்ஃபைன்,

‘தி இந்து' நிருபரிடம் கூறிய தாவது:

"ஒவ்வொரு வருடமும் 2.2 லட்சம் செவிலியர்கள் பயிற்சி முடித்து வெளிவருகிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. ஆனால் நாட்டில் எவ்வளவு செவிலியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன, ஒவ்வொரு கல்லூரியிலும் எவ்வளவு பேர் பயிற்சி பெறுகிறார்கள், பயிற்சி முடித்தவர்களில் எத்தனை பேர் அந்தந்த மாநில செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்கிறார்கள், பதிவு செய்தவர்களில் எத்தனை பேர் பணியாற்றுகிறார்கள் என்பன போன்ற பல்வேறு தகவல்கள் அரசிடம் இதுவரை இல்லை. இதனால் அவர்களுக்கான மனித வள மேம்பாட்டுத் திட்டங்கள், அவர்களின் துறைசார் அறிவை மேம்படுத்தும் முயற்சிகள், அவர்களின் நலனுக்காக நிதி ஒதுக்குதல் போன்றவற்றைச் செயல்படுத்த இயலாத நிலை உள்ளது.

"இதை மனதில்கொண்டு சர்வதேச அளவிலான தொண்டு நிறுவனத்தின் ஆதரவுடன் மத்திய அரசு செவிலியர்களை ஒருங்கிணைக்க புதிதாக ஓர் இணையதளத்தை ஏற்படுத்த உள்ளது. நாட்டில் உள்ள செவிலியர்கள் இந்த இணைய தளத்தில் தங்களைப் பதிவு செய்துகொள்ளும்போது செவிலியர்களின் எண்ணிக்கை துல்லியமாகத் தெரிய வரும். அதன் அடிப்படையில் அரசு தகுந்த திட்டங்களைத் தீட்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x