Published : 04 Mar 2014 12:00 PM
Last Updated : 04 Mar 2014 12:00 PM
புற்றுநோய்க் கட்டிகள் உள்ள இடங்களுக்கே நேரில் சென்று மருந்தை ஊட்டும் புதிய லேசர் கதிர் தொழில்நுட்பம் வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. தற்போது அளிக்கப்பட்டு வரும் கீமோதெரபி சிகிச்சையை எளிதாகவும் பயனுள்ள வகையிலும் மேற்கொள்ள இந்த உத்தி மிகவும் உதவியாக இருக்கும்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களுக்கு நேரடியாக மருந்தைக்கொண்டு செல்லும் இந்தத் தொழில்நுட்பம் காரணமாக, புற்றுநோயால் பாதிக்கப்படாத பக்கத்துத் திசுக்களுக்கு மருந்து வீணாகச் செல்வது தடுக்கப்படுகிறது. இதனால் தேவையற்ற பக்கவிளைவுகள் தடுக்கப்படுகின்றன.
ஒளிக்கற்றைகள் இந்த மருந்தைக் கொண்டு செல்வதால் உரிய கண்காணிப்புக் கருவிகள் மூலம் டாக்டர்களும் இதை எளிதாகக் கண்காணிக்க முடியும். அத்துடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உறுப்பில் உள்ள, புற்றுக்கட்டிகளுக்கு நேரடியாக மருந்து செலுத்தப்படுவதை உறுதி செய்யவும் முடியும். புற்று செல்களால் பாதிக்கப்பட்ட திசுக்களுக்கு அதிக மருந்தை உட்செலுத்தி, அவற்றை வலுவாக இறக்கச் செய்ய முடியும்.
இந்தத் தொழில்நுட்பம் கீழ்க்கண்ட வகையில் செயல்படுகிறது. கீமோதெரபி மருந்து ஆயிரக்கணக்கான சிறு குப்பிகள் போன்ற அமைப்புகளில் நிரப்பி எடுத்துச் செல்லப்படும். அதிலுள்ள மிக நுண்ணிய வால்வுகள் அந்த மருந்துகள் வெளிவராமல், பாட்டிலின் கார் மூடி போலத் தடுத்துக் கொண்டிருக்கும்.
குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றதும் ஒளியாலான லேசர் கதிர்கள் அதன் மீது வினைபுரிந்து மூடிகளைத் திறந்து புற்று செல்கள் மீது மருந்தைப் பாய்ச்ச உதவும். தோலிலிருந்து 4 சென்டிமீட்டர் தொலைவுக்குள் இது செயல்படுவதால் புற்றுக்கட்டிகளைக் கரைக்க இது வலுவான, பயனுள்ள வழிமுறையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்பு, வயிறு, கருஅணுவகம், பெருங்குடல் போன்ற பகுதிகளில் ஏற்படும் புற்றுக் கட்டிகளைக் கரைக்க இந்தத் தொழில்நுட்பம் வெகுவாகப் பயன்படும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஜெஃப்ரி ஜிங்க், பியு தமனோய் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT