Published : 27 Aug 2016 02:26 PM
Last Updated : 27 Aug 2016 02:26 PM
நடுத்தர வயதைத் தாண்டிய ஆண், பெண் இருபாலருக்கும் மிகுந்த தொல்லை தரக்கூடியது மூட்டுவலி. நடந்தால் பாத வலி, படி ஏறினால் முழங்கால் வலி எனச் சிரமப்படுவோர் பலரும் வலி மாத்திரைகள், களிம்புகள், ஸ்பிரே மருந்துகள் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனை இல்லாமலேயே தினமும் எடுத்துக்கொள்கின்றனர். இந்த முயற்சிகள் தற்காலிக நிவாரணம் தரலாம். என்றாலும், மூட்டுவலி எதனால் வருகிறது என்ற காரணத்தை முறைப்படி தெரிந்துகொண்டு சிகிச்சை பெற்றால் மட்டுமே, இது முழுவதுமாகக் குணமாகும்.
மூட்டுவலிக்குப் பல காரணங்கள் உண்டு. முக்கியமானவை இவை: 1. ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ். 2. ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ். 3. கௌட் ஆர்த்ரைட்டிஸ்.
ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் (Osteoarthritis): முழங்கால்
மூட்டுவலி வந்தவர்களில் முக்கால்வாசி பேருக்கு இந்த நோய்தான் முக்கியக் காரணமாக இருக்கிறது. மூட்டுத் தேய்மானம் காரணமாக இது வருகிறது. முழங்கால் மூட்டில் உள்ள கார்ட்டிலேஜ் எனும் குருத்தெலும்பை வழுவழுப்பாக வைத்துக்கொள்வது ‘கொலாஜன்’ எனும் புரதப்பொருள். முதுமை நெருங்கும்போது, இயற்கையாகவே இதன் உற்பத்தி குறைந்துவிடும்; குருத்தெலும்புத் திசுக்கள் தேய்ந்து மெலிந்துவிடும். இதன் விளைவால், மசகு போட மறந்த சைக்கிள் சக்கரம் கிரீச்சிடுவது போல, மூட்டுகள் உரசிக்கொள்ளும்போது, வலி ஏற்படுகிறது.
என்ன பரிசோதனைகள்?
மூட்டுகளை எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்த்தால், மூட்டின் தேய்மான அளவு தெரியும். ‘ஆஸ்டியோபைட்ஸ்’ (Osteophytes) எனும் எலும்பு முடிச்சுகள் காணப்பட்டால் நோய் உறுதிப்படும்.
ஆர்த்ரோஸ்கோப்பி (Arthroscopy) மூலம் மூட்டின் உட்புற மாற்றங்களை நேரடியாகக் கவனித்து நோயைக் கணிப்பதும் உண்டு.
இதற்குப் பொதுவான ரத்தப் பரிசோதனைகளும் (CBC) தேவைப்படும்.
ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் (Rheumatoid arthritis):
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்பு தவறுதலாக நம் மூட்டுகளையும் எதிரிகளாக எண்ணிப் பாதிப்பதால், அங்கு அழற்சி உண்டாகி, மூட்டுவலி வருகிறது. ஒரே நேரத்தில் பல மூட்டுகள் பாதிக்கப்படும்; உடலில் இரண்டு பக்க மூட்டுகளும் ஒரே மாதிரிப் பாதிக்கப்படும். முக்கியமாக, கை, மணிக்கட்டு, கால், பாதங்களில் உள்ள சிறிய மூட்டுகளில் வீக்கமும் அதிக வலியும் ஏற்படும். மூட்டுகளில் முண்டுகள் (Rheumatoid nodules) தோன்றும். அடிக்கடி காய்ச்சல் வரும். இவர்களுக்கு மூட்டில் உள்ள குருத்தெலும்பு மட்டுமல்லாமல், சைநோவியம் எனும் உறைப் பகுதியும் அரித்துவிடும். இதனால், காலையில் எழும்போது ஒரு மணி நேரத்துக்கு மேல் கை, கால்களை அசைக்க முடியாத அளவுக்கு மூட்டுவலி கடுமையாக இருக்கும். இந்த மூட்டுவலி சுமார் ஆறு வாரங்களுக்கு மேல் நீடிக்கும். இந்த நோய்க்குப் பரம்பரை ஒரு முக்கியக் காரணம்.
என்ன பரிசோதனைகள்?
மூட்டுகளை எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும்.
ருமட்டாய்டு ஃபேக்டர் பரிசோதனை (Rheumatoid factor): ருமட்டாய்டு ஃபேக்டர் என்பது ஒரு எதிரணுப் புரதம் (Antibody). இது ரத்தத்தில் 14 IU/மி.லி. என்ற அளவுக்குக் குறைவாக இருக்க வேண்டும். இது அதிகமாக இருந்தால் ருமட்டாய்டு ஃபேக்டர் இருக்கிறது என்று அர்த்தம். ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் நோயாளிகளில் 80 சதவீதப் பேருக்கு மட்டுமே, இது இருக்கும். இது இல்லை என்பதற்காக நோய் இல்லை என்று கூறிவிட முடியாது. அதேநேரம் சுமார் 10 சதவீதம் பேருக்கு நோய் இல்லை என்றாலும், இது இருக்கும். அப்போது மற்ற அறிகுறிகளைக் கவனித்து நோய் தீர்மானிக்கப்படும்.
சி.சி.பி. எதிரணு பரிசோதனை: நோயின் ஆரம்பக்கட்டத்தில் உள்ளவர்களுக்கு இது சிறந்ததொரு பரிசோதனை.
மூட்டுநீர்ப் பரிசோதனை (Synovial fluid analysis): மூட்டில் எவ்வகை அழற்சி ஏற்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கும் பரிசோதனை.
பொதுவான ரத்தப் பரிசோதனைகளும் தேவைப்படும். இவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும். ரத்தச் சிவப்பணு படிதல் அளவு (ESR) அதிகமாக இருக்கும்.
ரத்தச் சி.ஆர்.பி. பரிசோதனை (C-reactive protein - CRP): இதன் அளவு 100 மில்லி ரத்தத்தில் மூன்று மி.கிக்கு மேல் இருந்தால், ருமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் இருக்க வாய்ப்பு உள்ளது.
கௌட் ஆர்த்ரைட்டிஸ் (Gout arthritis):
புயூரின் எனும் வேதிப்பொருள் நம் உடலில் வளர்சிதை மாற்றம் அடையும்போது, அதில் உண்டாகும் தவறுதான் இதற்கு முக்கியக் காரணம். அப்போது யூரேட் படிகங்கள் மூட்டுகளில் உப்பு படிவது போல் படிந்து விடுவதால், இந்த நோய் தோன்றுகிறது. ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரித்துவிட்டால், இந்த நோய்க்கு வழி கிடைத்துவிடும்.
பெரும்பாலும் கால் பெருவிரல் மூட்டுதான் முதலில் வீங்கிக் கடுமையாக வலிக்கும். பிறகு மற்ற விரல் மூட்டுகளில் இந்தத் தொல்லை தொடங்கும். வீக்கத்தில் நீர் கோத்துக்கொள்வதும் உண்டு. சிலருக்கு முழங்கை, முழங்கால் போன்ற பெரிய மூட்டுகளிலும் இம்மாதிரியான வீக்கமும் வலியும் ஏற்படலாம். இவை இரண்டு வாரங்களில் தானாகவே சரியாகிவிடும். சிறிய இடைவெளி விட்டு மீண்டும் தொல்லை தரும். கௌட் நோயைக் கவனிக்கத் தவறினால், சிறுநீரகம் பாதிக்கப்படும். எனவே, தகுந்த பரிசோதனைகள் மூலம் நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே இதைக் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம்.
என்ன பரிசோதனைகள்?
மூட்டுகளை எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும்.
ஊசி உறிஞ்சல் பரிசோதனை (Needle aspiration): இதன்மூலம் மூட்டின் சிறு பகுதியை உறிஞ்சி எடுத்து நுண்ணோக்கியில் பார்த்தால், யூரேட் படிகங்கள் இருப்பது தெரியும். இது நோயை உறுதிப்படுத்தும்.
ரத்தத்தில் யூரிக் அமிலப் பரிசோதனை: இது 100 மில்லி ரத்தத்தில் பெண்களுக்கு 2.4 6 மி.லி. கிராம் வரையிலும், ஆண்களுக்கு 3.4 7 மி.லி. கிராம் வரையிலும் இருக்கலாம். இதற்கு மேல் இருக்கிறது என்றால், கௌட் நோய் இருக்க வாய்ப்புள்ளது என்று தீர்மானிக்கலாம். சிகிச்சைக்கு நடுவில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இந்த அளவு குறைகிறதா என்றும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
யூரிக் அமிலப் பரிசோதனை: 24 மணி நேரம் வெளியாகும் மொத்தச் சிறுநீரில் யூரிக் அமிலம் 800 மி.கிராமுக்கு மேல் இருக்கிறது என்றால், கௌட் நோய் உள்ளது என்று அர்த்தம்.
ரத்த கிரியேட்டினின் பரிசோதனை போன்ற சிறுநீரகப் பாதிப்புக்கான பரிசோதனைகளும் ரத்தக் கொழுப்புப் புரதங்கள் பரிசோதனைகளும் தேவைப்படும்.
கீல்வாதக் காய்ச்சலுக்கு என்ன பரிசோதனை?
‘பீட்டா ஹீமோலைட்டிக் ஸ்ட்ரெப்டோ காக்கஸ்’ எனும் பாக்டீரியாவால் ஏற்படுவது, கீல்வாதக் காய்ச்சல் எனப்படும் ‘ருமாட்டிக் காய்ச்சல்’(Rheumatic fever) . இந்தக் கிருமி அசுத்தத் தண்ணீர், உணவு, காற்று மூலம் குழந்தைகளின் தொண்டையில் வந்து ஒட்டிக்கொள்கிறது. அங்கு புண்ணை ஏற்படுத்துகிறது. காய்ச்சல் வருகிறது. மூட்டுவலி ஆரம்பிக்கிறது. பலருக்கு இத்தொல்லைகள் இத்துடன் முடிந்துவிடும். ஆனால், 100-ல் மூன்று பேருக்கு மட்டும் அடுத்தகட்ட காய்ச்சலுக்கு அடிபோடும். இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், இதயநோய் என்ற ஆபத்தைக் கொண்டுவருகிறது. முதலில், காய்ச்சலோடு பெரிய மூட்டுகளான முழங்கை, முழங்கால், மணிக்கட்டு, கணுக்கால் போன்றவற்றில் வலியையும் வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
அதன் பிறகு இதய உறைகளைத் தாக்குகிறது. இந்தச் சமயத்தில் இதயப் பாதிப்பு எதுவும் வெளியில் தெரிவதில்லை என்பதால் பலரும் இதை அலட்சியம் செய்கின்றனர். ஆனால், இந்தக் கொடூர பாக்டீரியாவின் அடுத்தகட்டத் தாக்குதல் இதய வால்வுதான். முதலில் மைட்ரல் வால்வு, பிறகு அயோடிக் வால்வு, இதைத் தொடர்ந்து ட்ரைகஸ்பிட் வால்வு, நுரையீரல் வால்வு என்று ஒவ்வொன்றாகப் பழுதடைய வைக்கிறது. இந்த நோய் மூன்று வயதிலிருந்து 15 வயதுவரை எவரையும் தாக்கலாம். இதற்கு உரிய சிகிச்சை எடுக்காதபட்சத்தில் 10 வயதுக்கு மேல் இதய வால்வுகள் பழுதாக ஆரம்பிக்கும். 15 வயதில் அதன் விளைவுகளைக் காட்டத் தொடங்கும். மூச்சு திணறல், இருமலில் ரத்தம், வயிறு, கால்களில் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். இந்தக் காய்ச்சலை முறையான பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து, சரியான சிகிச்சைகளை முதலிலேயே எடுத்துக்கொண்டால், இதய வால்வுப் பிரச்சினைகளைத் தடுக்கலாம்.
1. பொதுவான ரத்தப் பரிசோதனைகள்: இதில் வெள்ளையணுக்கள் அளவும் சிவப்பணு படிதல் அளவும் அதிகமாக இருந்தால், ருமாட்டிக் காய்ச்சல் இருக்க வாய்ப்பு உள்ளது.
2. ரத்தச் சி.ஆர்.பி. பரிசோதனை (C-reactive protein-CRP): இதன் அளவு 100 மில்லி ரத்தத்தில் மூன்று மிகிக்கு மேல் இருந்தால், ருமாட்டிக் காய்ச்சல் இருக்க வாய்ப்பு உள்ளது.
3. ஆன்டி ஸ்ட்ரெப்டோலைசின் ஓ பரிசோதனை (ASO titre): இது குழந்தைகளுக்கு 300 யூனிட்களுக்கு மேல், பெரியவர்களுக்கு 200 யூனிட்களுக்கு மேல் இருந்தால் ருமாட்டிக் காய்ச்சல் உறுதி.
4. தொண்டையில் ‘ஸ்வாப்’ எடுத்துக் கிருமி வளர்ப்புப் பரிசோதனை (Culture Test) செய்தால், இந்நோய்க்குரிய கிருமிகள் தெரியும். இது நோயை உறுதி செய்யும்.
5. மார்பு எக்ஸ்-ரே: இதில் இதய வீக்கம், நுரையீரல் நீர்க்கட்டு ஆகியவற்றைப் பார்க்கலாம்.
6. இ.சி.ஜி. பரிசோதனை: இதில் இதயத் துடிப்பு பாதிப்புகள் தெரியும்.
7. எக்கோ பரிசோதனை: இதில் இதய வீக்கம் மற்றும் வால்வுகளின் பாதிப்பை அறிய முடியும்.
(அடுத்த வாரம்: முழு உடல் பரிசோதனை)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர் | தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT