Published : 30 Oct 2013 12:07 PM
Last Updated : 30 Oct 2013 12:07 PM

இதய ரத்த நாளங்களில் அடைப்பா? - குறைந்த செலவில் கண்டறிய புதிய மருத்துவ சாதனம்

சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாக சுகாதார தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம் திகழ்கிறது. குறைந்த செலவில் அதிநவீன மருத்துவ சாதனங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்த மையம், “ஆர்ட்சென்ஸ்” என்ற பெயரில் இருதய ரத்த நாளங்களின் அடைப்புத்தன்மையை குறைந்த செலவில் கண்டறியக் கூடிய சாதனத்தை உருவாக்கியுள்ளது. தற்போதைய நடைமுறையில் இத்தகைய பரிசோதனைக்கு ரூ.10 ஆயிரம் வரை கட்டணம் ஆகும். ஆனால், இந்த புதிய சாதனத்தின் மூலம் ஆயிரம் ரூபாய்க்குள் பரிசோதனையை முடித்துவிடலாம்.

சில நிமிடங்கள் போதும்

ஐ.ஐ.டி. வடிவமைத்துள்ள இந்த புதிய கருவியில் சில நிமிடங்களில் சோதனை முடிந்துவிடும். இதுகுறித்து ஐ.ஐ.டி. சுகாதார தொழில்நுட்ப கண்டுபிடிப்பு ஆய்வு மையத்தின் தலைவர் மோகனசங்கர், சிஸ்டம்ஸ் ஆர்க்கிடெக்ட் ஜெயராஜ் ஜோசப் ஆகியோர் கூறியதாவது:

‘‘குறைந்த செலவில் குறுகிய நேரத்தில் இருதய ரத்த நாளங்களின் அடைப்புத்தன்மையை கண்டறிய உதவும் இந்த சாதனத்தை பயன்படுத்துவது மிகவும் எளிது. புதிய சாதனத்தின் விலை ரூ.1 லட்சத்துக்குள்தான் வரும். இருதயத்தின் சீரான செயல்பாட்டுக்கு ரத்த நாளங்களின் தன்மை மிகவும் முக்கியமானது. புதிய கருவியை பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனை வெற்றிகரமாக வந்துள்ளது. அடுத்த கட்டமாக இந்த கருவியை கையடக்கக் கருவியாக வடிவமைக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.

டாக்டர் தணிகாசலம் கூறும்போது, “இருதய ரத்த நாளங்களில் லட்சக்கணக்கான எண்டோதீலியம் செல்கள் உள்ளன. வயது ஆக ஆக இந்த செல்களின் எண்ணிக்கை குறைந்து ரத்த நாளங்கள் பாதிக்கப்படும். அதேபோல் மன அழுத்தம் ஏற்பட்டாலும் இந்த நாளங்கள் பாதிப்புக்கு உள்ளாகும். ஐ.ஐ.டி. உருவாக்கியுள்ள புதிய சாதனத்தை பயன்படுத்தி மிக எளிதாக அடைப்புத்தன்மை அளவை கண்டறியலாம்” என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத்துறை ஆலோசகர் டி.எஸ்.ராவ் கூறும்போது, “தொழில்நுட்ப நிபுணர்களும் மருத்துவர்களும் இணைந்து ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள வசதியாக தன்னாட்சி அந்தஸ்து பெற்ற நிறுவனங்களை உருவாக்க திட்டமிட்டு வருகிறோம்” என்றார். டாக்டர் எஸ்.சுரேஷ், டாக்டர் ஆர்.ரவிக்குமார் ஆகியோர் புதிய சாதனத்தின் வசதிகளை எடுத்துரைத்தனர்.

ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறுகையில், “இன்றைய சூழலில் மருத்துவம்- தொழில்நுட்பம் ஒருங்கிணைந்த படிப்புகளை வழங்கக் கூடிய கல்வி நிறுவனங்கள் அவசியம். ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இதுபோன்ற ஒருங்கிணைந்த படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவும் இதில் கவனம் செலுத்த வேண்டும். சென்னை ஐ.ஐ.டி.யில் மருத்துவம், கட்டுமானம், நீர், மரபுசாரா எரிசக்தி ஆகியவற்றுக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையேயான ஆராய்ச்சி பணிகள் நடந்து வருகின்றன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x