Published : 16 Jul 2016 12:40 PM
Last Updated : 16 Jul 2016 12:40 PM

கொழுப்பைக் குறைத்து இதயம் காக்கும் பருப்பு

பச்சைப் பயிர் என்று பலரும் எழுதுவதைப் பார்த்திருப்போம். அவர்கள் எழுத நினைத்தது என்னவோ, பச்சைப் பயற்றைப் பற்றித்தான் இருக்கும். ஆனால், தவறாகப் பச்சைப் பயிறு, பச்சை பயிரு என்றோ அது முடிந்திருக்கும்.

மேற்கு இந்தியாவின் ஈரமான தேக்குமரக் காடுகளைத் தாயகமாகக் கொண்டது பச்சைப் பயறு. இன்றைக்கு இந்தியா, பாகிஸ்தான், தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் விளைகிறது. தெற்காசிய உணவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழக/கேரள எல்லைப் பகுதியில் வாழும் முதுவர் இனப் பழங்குடிகளின் உணவில் பச்சைப் பயறு முக்கிய இடம்பிடித்திருக்கிறது.

ஆலிவ் பச்சை நிறத்தில் சிறிய, நீள்உருளை வடிவத்தில் வழுவழுவென்று, நல்ல மணத்துடன் இருக்கும். பச்சைப் பயறு காய வைக்கப்பட்டு, தோல் நீக்கப்பட்டு, உடைக்கப்பட்டால் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

பயன்பாடு

முழு பச்சைப் பயறு முளைகட்டிப் பச்சை யாகவோ வேக வைக்கப்பட்டோ, முளைகட்டாமல் வேக வைக்கப்பட்டோ சுண்டலாகப் பயன்படுத்தப்படுகிறது. பச்சைப் பயற்றை வேக வைப்பதற்குக் கொஞ்ச நேரம் ஊற வைக்க வேண்டும்.

முளை கட்டப்பட்ட பச்சைப் பயறு உப்பு-எலுமிச்சை சாறு கலந்தும் சாலட்டில் சேர்க்கப்பட்டும் சாப்பிடப்படுவது உண்டு. பச்சைப் பயறு மிகவும் ஆரோக்கியமான நொறுவை. ஏனென்றால், தாவரங்கள் வளர வைட்டமின், கனிமச்சத்து, அமினோ அமிலங்கள், பைட்டோ கெமிக்கல்கள் போன்றவை தேவைப்படும் என்பதால், முளைவிட்ட பயறு வகைகளில் புரதத்துடன் மேற்கண்ட சத்துகளும் நிரம்பியிருக்கும்.

ஆந்திரப் பிரதேசத்தில் பச்சைப் பயறு மாவு பெசரட்டு என்ற பெயரில் அடைதோசையாகச் சாப்பிடப்படுகிறது. சீனாவில் நிலவு கேக் மற்றும் இனிப்பு பானம், பிலிப்பைன்ஸில் இறால் வதக்கல், இந்தோனேசியாவில் இனிப்பு, ஹாங்காங்கில் ஐஸ்கிரீம் என்று பல்வேறு வகைகளில் பச்சைப் பயறு பயன்படுத்தப்படுகிறது.

ஊட்டச்சத்து

இதில் புரதச் சத்தும் அமினோ அமிலமும் அதிகம். உடலுக்குத் தீங்கு பயக்கும் டிரான்ஸ் ஃபேட், சாச்சுரேடட் கொழுப்பு இதில் இல்லை.

உடலுக்கு அவசியம் தேவைப்படும் ஒன்பது அமினோ அமிலங்களில் லைசீன் என்ற அமினோ அமிலத்தை அதிகம் கொண்டது.

நீரில் கரையக்கூடிய, நீரில் கரையாத நார்ச்சத்தை அதிகம் கொண்டிருப்பதால், சரிவிகித உணவையும் உடலுக்குத் தேவையான ஊட்டத்தையும் பராமரிக்க உதவுகிறது.

குறிப்பாக இதில் இருக்கும் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, எல்.டி.எல். கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் செய்கிறது.

ரத்தத்தில் மெதுவாகவும் படிப்படியாகவும் சர்க்கரைப் பொருளை இது வெளியிடுவதால், ரத்தச் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.

பச்சைப் பயற்றை மட்டுமில்லாமல் எல்லாப் பயறு வகைகளையுமே தோலை அகற்றாமல், உடைக்காமல் பயன்படுத்துவதுதான் அதிக ஊட்டம் தரக்கூடியது. ஏனென்றால், தோலில் இரும்புச்சத்து இருக்கிறது. l

காலரா, தட்டம்மை, சின்னம்மையின்போது பச்சைப் பயறு ஊற வைத்த தண்ணீரைக் குடிப்பது உடலுக்கு நல்லதாகக் கருதப்படுகிறது.

இது எளிதில் ஜீரணமாகக் கூடியது, மலத்தை இளக உதவுகிறது.

ptவயிற்றுப் பொருமலையோ, ‘காஸை‘யோ ஏற்படுத்தாது.

தெரியுமா?

பச்சைப் பயறு மாவு அல்லது பயத்த மாவை சருமத்தில் தேய்த்துக்கொள்வது தோலைப் பராமரித்து, நல்ல நிறத்தைத் தக்க வைப்பதற்குப் பயன்படும். சோப்புக்குப் பதிலாகக் குளியல் பொடியாக இதைப் பயன்படுத்தலாம்; குறிப்பாகக் குழந்தைகளுக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும். தோல் நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘நலங்கு மாவு’ எனும் மூலிகைக் கலவையில், பச்சைப் பயறு சேர்க்கப்படுகிறது.

(அடுத்த வாரம்: பருப்பு எடுக்கும் பல அவதாரங்கள்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x