Published : 10 Sep 2016 12:18 PM
Last Updated : 10 Sep 2016 12:18 PM

புரதச் சுரங்கம் 11: பட்டாணியில் பொதிந்திருக்கும் பேரூட்டம்

கடற்கரைக்குப் போனால் பட்டாணி சுண்டல், ரோட்டுக் கடைகளில் மாலை நேர நொறுவையாக மசாலாவில் தளபுளவென குதித்துக்கொண்டிருக் கும் பட்டாணி, ஸ்டார் ஹோட்டல்களில் பீங்கான் பாத்திரத்தில் தளும்பாமல் வரும் சூப்பில் மிதந்துவரும் பட்டாணி, சப்பாத்திக்கான தொடுகறியாகப் பட்டாணி மசாலா... இப்படி எளிமையான உணவு முதல் நாகரிக மோஸ்தர் ஏறிய உணவுவரை பச்சைப் பட்டாணிக்கு முக்கிய இடம் உண்டு.

நாட்டின் வடமேற்கில் உள்ள இமயமலை சமவெளிப் பகுதியைத் தாயகமாகக் கொண்டது பட்டாணி. அதேநேரம் மத்திய ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளின் வழியாக உலகம் முழுவதும் வேளாண் பயிராக இது பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. வேளாண்மையின் ஆரம்பகாலத்தில் பயிரிடப்பட்ட உணவுப் பயிர்களில் பட்டாணியும் ஒன்று. அதனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இது பயிரிடப்பட்டு வருகிறது.

ஃபேபேசியே குடும்பத்தைச் சேர்ந்த கொடி வகைத் தாவரமான பட்டாணி, தோட்டங்களில் சாதாரணமாக வளர்க்கப்பட்டது. பச்சைப் பட்டாணி இனிப்பானது. அதேநேரம் காய்ந்த பிறகு இளம்பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்துக்கு மாறிவிடும், இனிப்புச் சுவையும் குறைந்துவிடும். ஆரம்பக் காலத்தில் பட்டாணியைக் காய வைத்தே சாப்பிட்டிருக்கிறார்கள். பிறகுதான் பச்சையாகவும் சாப்பிடலாம் என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.

தற்போது உலகின் முதன்மை பட்டாணி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் கனடாதான். அதற்கடுத்ததாக ஃபிரான்ஸ், சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் வருகின்றன. இந்தியாதான் பச்சைப் பட்டாணியை அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.

பயன்பாடு

பட்டாணியை வேக வைப்பதற்கு முன், கொஞ்ச நேரம் ஊற வைத்தாலே போதும். இதை அதிகம் சாப்பிடுவது வயிற்றுப் பொருமலை ஏற்படுத்தலாம், சிலருக்கு நன்றாகச் செரிமானம் ஆகாமல் போகலாம். இதைத் தவிர்ப்பதற்கு ஊற வைத்து முளைகட்டுவது ஒரு நல்ல வழி.

பட்டாணிக் கொடியின் பற்றுக்கம்பியும்கூட சில பகுதிகளில் உண்ணப்படுகிறது. கிழக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சாலட்களிலும் சமையலிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

சந்தையில் கிடைக்கும் சாயம் பூசப்பட்ட பச்சைப் பட்டாணியைத் தவிர்ப்பது நல்லது. பட்டாணியைச் சிறிது நேரம் நீரில் ஊற வைத்தால், நீர் பச்சை நிறமாக மாறுவதைக் கொண்டு சாயம் சேர்க்கப்பட்டதைக் கண்டுபிடிக்கலாம்.

ஊட்டச்சத்து

# பட்டாணியில் கரையும் நார்ச்சத்து, கரையாத நார்ச்சத்து அதிகம் உண்டு. ஒரு கோப்பைப் பட்டாணியில் 19 கிராம் நார்ச்சத்து இருக்கும். நார்ச்சத்து குடலைத் தூய்மைப்படுத்தக்கூடியது.

# ஒரு கோப்பைப் பட்டாணியில் 16 கிராம் புரதச் சத்து இருக்கிறது. விலங்குப் புரதம் கிடைக்காதவர்கள் பட்டாணியை மாற்றாகப் பயன்படுத்தலாம்.

# பட்டாணியில் கால்சியம், இரும்புச்சத்து, செம்பு, துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், மக்னீஷியம் போன்ற கனிமச்சத்துகள் உண்டு.

# பட்டாணியில் கொழுப்பு குறைவு. அதுவும் பெரும்பாலும் நல்ல கொழுப்பு.

# இதிலுள்ள பைட்டோஸ்டீரால் உடலின் கெட்ட கொழுப்பு அளவை குறைத்து எலும்பை வலுப்படுத்தக்கூடியது. எலும்பு வலுவிழப்பு நோயை (ஆஸ்டியோ போரோசிஸ்) குறைக்கும். நரம்புச் சிதைவைக் குறைத்து அல்சைமர் நோயையும் மட்டுப்படுத்தும்.

# செரிமானத்தை மேம்படுத்துவதாலும், விரைவாகச் சாப்பிட்ட நிறைவைத் தருவதாலும் எடை குறைப்புக்கும் பட்டாணி உதவும்.

# இரும்புச்சத்து குறைபாடு உடையவர்களுக்கு இது நல்ல ஊட்டத்தைக் கொடுக்கும். அதனால் குழந்தைகள், கருவுற்ற தாய்மார்கள், மாதவிடாய் பிரச்சினை இருப்பவர்களுக்கு இதைப் பரிந்துரைக்கலாம்.

# ரத்தச் சர்க்கரை அளவை சீர்ப் படுத்தும் என்பதால், நீரிழிவு நோயைக் குறைக்கும் தன்மையும் உண்டு.

# உடல் வீக்கத்தைக் குறைக்கும் Pisumsaponins, pisomosides போன்ற தாவர நுண்ணூட்டச்சத்துகள் (ஃபைட்டோநியூட்ரியன்ட்ஸ்) இதில் அதிகம். அதன் காரணமாகவே அதன் அறிவியல் பெயர் pisum என்று வந்தது.

# இதில் இருக்கும் coumestro# என்ற பாலிபீனால் வயிற்றுப் புற்றுநோயைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது.

# பட்டாணியில் வைட்டமின் சத்துகளும் அதிகம். வைட்டமின் ஏ, வைட்டமின் பி (ஃபோலேட்), வைட்டமின் கே, நியாசின், தயமின் போன்றவை உள்ளன.

# இதில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் ‘சி’யை இதிலிருந்தே பெறலாம். வைட்டமின் சி, அஸ்கார்பிக் அமிலத்தைத் தருகிறது. நீரில் கரையக்கூடிய இந்த வேதிப்பொருள் நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடக் கூடியது. நோய் தடுப்பாற்றலைப் பெருக்கும்.

# வைட்டமின் கே எலும்பை வலுப்படுத்தி, எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

# கண்பார்வைக்கு உதவும் Lutein, zeaxanthin போன்ற பொருட்கள் பட்டாணியில் அதிகம் இருப்பதால், சிறுவயது முதலே குழந்தைகளுக்குக் கொடுத்து வரலாம்.

# பச்சை பட்டாணியில் ’சாப்போனின்’ (Saponin) அதிகமாக உள்ளது. இதற்கு வீக்கமுறுக்கி (Anti-inflammatory) செய்கை இருப்பதால் வாத நோய்களுக்குச் சிறந்தது.

# உடலுக்கு நன்மை தரும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பீட்டா கரோட்டீன் பட்டாணியில் பொதிந்து கிடக்கின்றன.

பட்டாணி

ஆங்கிலப் பெயர்: Green Pea/ White Pea/ Mattar

தாவரவியல் பெயர்: Pisum sativum



(நிறைவடைந்தது)

தொடர் உருவாக்கத்தில் உதவியவர்கள்:

இயற்கை வேளாண் நிபுணர்கள் - பாமயன், அனந்து,

அரசு சித்த மருத்துவர்கள் - டாக்டர் ஜெ. ஸ்ரீராம், டாக்டர் வி. விக்ரம்குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x