Published : 09 Sep 2014 12:53 PM
Last Updated : 09 Sep 2014 12:53 PM
‘நலம் வாழ' செப்டம்பர் 2 இதழில் ‘கேள்விக்கு அப்பாற்பட்டவர்களா?' என்ற தலைப்பில் மருத்துவர்கள் பற்றி விலாசினி எழுதிய கட்டுரை வெளியாகி இருந்தது. அந்தக் கருத்தை ஆதரித்தும், அதற்கு மாறாக மருத்துவர்களுக்கு உள்ள நியாயங்களைச் சொல்லியும் வாசகர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்கள் இங்கே இடம்பெற்றுள்ளன:
பிழைக்கத் தெரியாதவர்
மாநிலத்தில் +2வில் முதல் இடம்பிடித்த எந்த மாணவ, மாணவியைக் கேட்டாலும் "நான் மருத்துவராகி இலவச மருத்துவச் சேவை செய்வேன்" என்றுதான் பேட்டி கொடுப்பார்கள். படித்து முடித்த பிறகு அந்த வாக்குறுதிகள் எங்கே போகின்றன?
என் உறவினர் மகன் லண்டனில் ஆர்த்தோ பிரிவில் சிறப்பு பயிற்சி பெற்று, தன் வயதான பெற்றோர்களுக்காக இந்தியாவுக்குத் திரும்பினான். புகழ்பெற்ற தனியார் மருத்துவமனையில் அவன் வேலை கேட்டபோது "தேவையோ, இல்லையோ மாதம் 4 எம்.ஆர்.ஐ. ஸ்கேன், 5 மூட்டு ஆபரேஷன், 15 பேரை ஆஸ்பத்திரி இன்பேஷன்டாக சிகிச்சைக்குச் சேர்க்க வேண்டும். உனக்கு நிறைய சம்பளம் கிடைக்கும்" என்று கட்டாயப்படுத்தினர்.
அவனோ "நான் மனசாட்சிக்கு விரோதமாக வேலை செய்ய மாட்டேன் என்று சொல்லி வட மாநிலத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டான். அனைவரும் அவனைப் பிழைக்கத் தெரியாதவன் என்று கேலி செய்தனர். இதுதான் உலகம்.
- உஷா முத்துராமன், திருநகர்
உறுப்பு தானத்திலும் கொள்ளையா?
மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளைக் கொடுப்பதற்கு மருத்துவர்கள் உறுதுணையாகவும் முக்கியக் காரணமாகவும் இருக்கிறார்கள் என்றுதான் இதுவரை நான் நம்பியிருந்தேன்.
எங்கள் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் வேறு மாதிரிச் சிந்திக்கத் தூண்டுகிறது. எனக்குத் தெரிந்தவர் ஒருவர் குளியலறையில் விழுந்து அடிபட்டு அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். பிறகு ஆபத்தான நிலையில் நகரில் இருக்கும் பெரிய மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டார்.
ஒரு நாள் கழித்து நோயாளி மூளைச்சாவு அடைந்துவிட்டார். அதனால் உறுப்புகளைத் தானமாகக் கொடுக்கச் சொல்லி மருத்துவர்கள் வற்புறுத்தி இருக்கிறார்கள். நோயாளியின் தாய், மனைவி, உறவினர்கள் மிகுந்த துக்கத்துக்கு இடையே, அதற்குச் சம்மதம் தெரிவித்தனர்.
"அந்த உறுப்புகளை எடுப்பதற்கு ஒரு வாரம் ஆகும். அதுவரை நோயாளியை அருகிலுள்ள சிறுநீரகச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்" என்று உடனே மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
"ஒரு வாரக் காலம் தாமதிக்க முடியாது. உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டாம். உடனே நோயாளியின் சடலத்தைத் தர வேண்டும்" என்று நோயாளி தரப்பில் கேட்டிருக்கிறார்கள்.
அப்போது அங்கிருந்த மருத்துவர் ஒருவர் நோயாளியின் உறவினர்கள் இருவர் முன்னிலையில், நோயாளியின் மனைவியை இஷ்டத்துக்குத் திட்டியிருக்கிறார். "இப்போது ஏன் உறுப்பு தானத்துக்கு மறுக்கிறீர்கள்? அடுத்தவருக்கு உதவாத உங்கள் வம்சம் நன்றாக இருக்குமா?" என்று, துக்கத்தில் இருந்த அந்தப் பெண்ணைத் திட்டியிருக்கிறார். கடுமையான போராட்டத்துக்குப் பிறகு, நோயாளியின் சடலத்தை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
எனக்கு எழும் கேள்விகள்: உறுப்பு தானம் செய்ய மறுத்தால் ஏன் மருத்துவர் கோபப்பட வேண்டும்? உறுப்புகளை எடுக்க ஒரு வாரம் எதற்கு?
பெரும்பாலும் உடல் உறுப்புகளை எடுப்பதும், உறுப்புகளைத் தானமாகப் பெற்றுக் கொள்வதும் தனியார் மருத்துவமனைகளாகவே இருக்கின்றன. அரசு மருத்துவமனைகளில் உறுப்பு எடுத்ததாகவோ, தானமாகப் பெற்றதாகவோ அதிகச் செய்திகள் இல்லை. தானமாகப் பெற்றவர் அடையாளத்தைத் தனியார் மருத்துவமனைகள் வெளியிடுவதில்லை.
நோயாளிகளின் உறவினர்களிடம் உறுப்பு தானத்துக்குச் சம்மதம் பெற்ற பிறகு, பெரிய மருத்துவமனைகள் இணையம் மூலமாகச் சங்கேத வார்த்தைகளில் உறுப்புகளை ஏலம் விடுவதாகவும் கூறப்படுகிறது.
இதைப் பற்றி உறுப்பு தானம் கொடுத்தவர்களின் குடும்பங்களுக்குத் தெரியுமா? தனியார், அரசு மருத்துவமனைகளில் தானம் கொடுத்தவர்கள், பெற்றுக் கொண்டவர்களது எண்ணிக்கை, விவரம், அடையாளம் போன்றவை என்ன?
தானம் பெற்றவர்கள் இலவசமாக உறுப்புகளைப் பெற்றுக் கொண்டார்களா அல்லது யாருக்கு, எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது?
ரத்த உறவைப் பறிகொடுத்த பின், கட்டுக்கடங்காத துக்கத்திலும் தியாக உள்ளத்துடன் அவர்களது உறுப்புகளைப் பெற்ற மற்றவர்களது உள்ளங்களில் இறந்தவரின் ஆன்மாவைப் பார்க்கிற இதயங்களை சில மருத்துவமனைகளின் நடவடிக்கைகள் சுக்குநூறாக்குகின்றன.
- பி.கிருஷ்ணசாமி, அரசு வழக்கறிஞர், ஈரோடு மாவட்டம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT