Last Updated : 02 Sep, 2014 10:00 AM

 

Published : 02 Sep 2014 10:00 AM
Last Updated : 02 Sep 2014 10:00 AM

உடலினை உறுதி செய்வோம்

ஊட்டச்சத்து தனிமனிதனை மட்டும் சார்ந்தது அல்ல. அது சமூகம் சார்ந்தது, தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நிர்ணயிக்கக்கூடியது. ஏனென்றால், வலுவான மனிதனால்தான் ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்து வீட்டுப் பொருளாதாரத்துடன் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த முடியும்.

இந்தியாவில் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வறுமை மட்டுமே காரணமல்ல. எது சரியான, ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்பது குறித்த அறியாமையும் மக்களிடையே ஊட்டச்சத்து குறைபாட்டுக்குக் காரணமாக அமைகிறது.

ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் வாரம் தேசிய ஊட்டச் சத்து வாரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கம், உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் சார்பில் 1982-ம்

ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு, ‘ஊட்டச்சத்தே தேசத்தின் ஆதாரம்’ என்ற குறிக்கோள் மையப் பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எது ஊட்டச்சத்து?

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகியவையே அத்தியாவசிய ஊட்டச்சத்துகள். இவை அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்திருக்கும் உணவே, சரிவிகித உணவு. நம் வாழ்க்கை முழுவதற்கும் உடலில் ஏற்படும் வளர்ச்சிக்கும், வளர்சிதை மாற்றங்களுக்கும் இந்த ஊட்டச்சத்துகளே முக்கியத் தேவை. குறிப்பாகப் பெண்களுக்குப் பேறுகாலத்திலும், நோயாளிகளுக்கு நோயில் இருந்து மீண்டு வரவும் இவை அவசியம்.

ஆற்றல் ஆதாரங்கள்

கார்போஹைட்ரேட், கொழுப்பு நிறைந்த உணவு வகைகள் உடலுக்கு ஆற்றல் தருபவை. நம் அன்றாட உடலியக்கச் செயல்பாடுகளுக்குத் தேவையான சக்தியை இவை தருகின்றன. தானியங்கள், கிழங்குகள், தண்டுகள், காய்கறிகள், உலர் பழங்கள், எண்ணெய், வெண்ணெய், நெய் ஆகியவை ஆற்றல் தரும் உணவுகளில் சில.

கட்டமைப்புத் தோழர்கள்

புரதச் சத்து நிறைந்த உணவு வகைகள் உடலின் கட்டமைப்பை உருவாக்க உதவுகின்றன. பால், இறைச்சி, முட்டை, மீன், பருப்பு வகைகள், கொட்டைகள் ஆகியவற்றில் புரதச் சத்து நிறைந்திருக்கிறது. இவை உடலைக் கட்டமைத்து வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன் ஆற்றலும் தருகின்றன.

பாதுகாத்து ஒழுங்குபடுத்துதல்

புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் ஆகியவை நம் உடலைப் பாதுகாத்து, உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் வேலையைச் செய்கின்றன. உடல் வெப்பநிலையைச் சீராகப் பராமரித்தல், தசைச் சுருக்கம், உடலின் நீர்ச் சமநிலையைக் கட்டுப்படுத்துதல், ரத்தம் உறைதல், உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுதல், இதயத் துடிப்பைப் பராமரித்தல் போன்ற வேலைகள் இதில் அடங்கும். நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், தாது உப்புகளும் கிடைத்தால்தான், இந்தச் செயல்கள் தொய்வின்றி நடக்கும்.

காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி, ஈரல், பழங்கள் ஆகியவற்றில் வைட்டமின்களும் தாது உப்புகளும் நிறைந்திருக்கின்றன. எனவே, அவற்றைப் போதுமான அளவு தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x