Published : 29 Sep 2018 11:35 AM
Last Updated : 29 Sep 2018 11:35 AM
உலக இதய நாள் செப்டம்பர் 29
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை 50, 60 வயதுகளில் வந்த இதய நோய் தற்போது 25 வயது இளைஞர்களுக்கும் வந்துவிடுகிறது. வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கவழக்க மாற்றங்கள், புகைபிடித்தல், மது அருந்துதல், போதிய உடற் பயிற்சியின்மை போன்றவை இதற்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.
இதய நோய் பாதிப்பில், உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் இதய நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 16 ஆண்டுகளில் 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக ‘அமெரிக்கன் காலேஜ் ஆஃப் கார்டியாலஜி’ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. உயிரிழப்பவர்களில் 25 சதவீதத்தினர் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்பது இன்னொரு அதிர்ச்சித் தகவல்!
இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்களில் முற்றிலும் அடைப்பு ஏற்படுவதால், இதயத்தின் தசைகள் பாதிக்கப்பட்டு ரத்த ஓட்டம் நிற்பதால் மாரடைப்பு ஏற்படுகிறது.
இதயத்துக்கு எதிரான ‘இரண்டு!’
மாரடைப்பு வருவதற்கான சூழ்நிலையை ‘ரிஸ்க் ஃபேக்டர்ஸ்’ என்று சொல்கிறோம். உதாரணமாக, சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல் பருமன், புகைபிடித்தல், மாதவிடாய் நின்றுபோதல் போன்றவற்றைக் கூறலாம். மாரடைப்பு ஏற்படுவதை, தவிர்க்க இயலாத சூழ்நிலைகள், தவிர்க்கக் கூடிய சூழ்நிலைகள் என இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.
இதில், தவிர்க்க இயலாத சூழ்நிலை என்பது, குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவர்கள், உடலில் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருத்தல், உடலுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுள்ள கொழுப்பை வைத்திருத்தல், உடற்பயிற்சி போன்றவற்றை முறையாகப் பின்பற்றினால் மாரடைப்பு ஏற்படுவதிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.
மாரடைப்பைத் தவிர்க்க புகைபிடித்தல், மது அருந்துதல் கூடாது. மாரடைப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று ஒருவர் நினைத்தால், இவ்விரு பழக்கங்களையும் முதலில் நிறுத்த வேண்டும்.
தற்போதுள்ள சூழ்நிலையில், 45 வயதுக்குக் கீழ் உள்ள ஒருவருக்கு மாரடைப்பு வருகிறது என்று சொன்னால், அதற்கு முக்கியக் காரணம் நிச்சயம் இவ்விரு பழக்கங்களாகத்தான் இருக்க முடியும்.
குறையும் ஆயுள்
தொடர்ந்து, புகைப்பிடிக்கும் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் சுமார் 13 முதல் 15 ஆண்டுகள் குறையும் நிலை ஏற்படுகிறது. அந்தப் பழக்கத்தை அவர் நிறுத்தினால், ரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் நிகோடின் முழுவதுமாக நீங்க 5 ஆண்டுகளாகும்.
புகைபிடிப்பதால், உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும். தொடர்ந்து புகைபிடிக்கும்போது, உடலில் கெட்ட கொழுப்பின் அளவு (LDL) கூடுகிறது. அதே நேரத்தில் நல்ல கொழுப்பின் அளவு (HDL) குறைகிறது. மேலும், புகைபிடிப்பவர்களின் ரத்தம் கெட்டிப்பட்டு, கூட்டாகச் சேர்ந்து ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்புக்கு வழிவகுக்கிறது.
புகைபிடிப்பவரின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் சுற்றி இருப்பவர்கள், அவர் விடும் புகையைச் சுவாசிக்கும்போது, அவர்களுக்கும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை ‘பேஸிவ் ஸ்மோக்கிங்’ என்கிறோம்.
புகையைக் கைவிட ‘டிப்!’
எனவே, புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும் என ஒருவர் முடிவெடுத்து விட்டால், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொள்ள முயலாமல், முழுவது மாக உடனடியாக நிறுத்த வேண்டும். கொஞ்சம், கொஞ்சமாகக் குறைப்பது என ஒருவர் முடிவெடுத்துச் செயல்பட்டால், அவர் முன்பைவிட அதிக அளவு புகைபிடிப்பதற்கான சாத்தியம் உள்ளது.
எனவே, புகைபிடிப்பதை நிறுத்த ‘டிப்’ விதியைப் (TIP Rules) பின்பற்ற வேண்டும். அதாவது, ‘டி – டோட்டல் ஸ்மோக்கிங் செஸ்ஸேஷன்’ (T - Total smoking cessation) முழுமையாக நிறுத்தவது, ‘ஐ – இம்மீடியேட் ஸ்மோக்கிங் செஸ்ஸேஷன்’ (I- Immediate smoking cessation) உடனடியாக நிறுத்துவது, ‘பி – பெர்மனெண்ட் ஸ்மோக்கிங் செஸ்ஸேஷன்’ (P-Permanent smoking cessation) நிரந்தரமாக நிறுத்துவது ஆகியவைதான் ‘டிப்’ விதி.
எனவே, புகைபிடிப்பவர்கள் இந்த விதியைப் பின்பற்றி வாழ வேண்டும். ஏனென்றால், நீங்கள் பிடிக்கும் புகை, உங்கள் உடலுக்கு, உங்கள் வீட்டுக்கு, நம் நாட்டுக்கும் கேடு!
- டாக்டர்.செந்தில்குமார் நல்லுசாமி,
இதய நோய் நிபுணர்,
தொடர்புக்கு: drnsenthilkumar.nallusamy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT