Published : 02 Sep 2014 12:00 AM
Last Updated : 02 Sep 2014 12:00 AM
சமீபத்தில் நடந்த ஒரு டிவி விவாத நிகழ்ச்சி குறித்து மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. பலரும் சமூக வலைத்தளங்களில் அதற்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பரிசோதனைகள் அவசியமா?
மருத்துவத் துறை பரிந்துரைக்கும் பரிசோதனைகள் அவசியமா, இல்லையா என்பது பற்றி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் இதய இயல் மருத்துவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
அதில் வருடத்துக்கு ஒருமுறை மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாஸ்டர் ஹெல்த் பரிசோதனை அவசியமற்றது என்று தெரிவித்திருக்கிறார்கள்.
இத்தகைய பரிசோதனைகள் தெருவுக்குத் தெரு பெருகி வரும் தனியார் பரிசோதனைக் கூடங்களின் லாபத்தைப் பெருக்குவதற்கு, மக்களின் பணத்தை அநாவசியமாகச் செலவு செய்வதற்குமே வழிவகுக்கும் என்றும் அந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
கிட்டத்தட்ட எல்லோருமே மாஸ்டர் ஹெல்த் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற சூழல் வலிந்து உருவாக்கப்பட்டுவிட்டது. யாரேனும் அப்படிச் செய்துகொள்ளவில்லை என்றால் பெரும் நோய் தாக்கிவிடுமோ என்று அஞ்சும் அளவுக்கு இந்தச் சுற்றுச்சூழல் வலுவாக உள்ளது. சோதனைக் கூடங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்தப் பின்னணியில்தான் மேற்கண்ட டிவி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் டாக்டர் கோபிநாத் என்பவர் சொன்ன தகவல் இன்னும் அதிர்ச்சியளிக்கக்கூடியது. மருத்துவத் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு இயங்கும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமான தி காக்ரேன் கொலாபரேஷன் (www.cochrane.org) தெரிவிப்பதன்படி, இத்தனை பரிசோதனைகள் செய்யப்படுவதால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும், குறிப்பிட்ட சில நோய்களால் அவதிப்படுபவர்களின் பிரச்சினை தீர்வதில்லை என்றும் அந்த நிறுவனம் கூறுகிறுது.
ஒரு லட்சத்து எண்பதாயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இதெல்லாம் வெறும் புள்ளிவிவரங்கள், இதை வைத்துக்கொண்டு எப்படி மருத்துவத் துறையைக் குற்றம் சாட்ட முடியும் என்று கேட்கலாம். ஆனால், மருத்துவத் துறை செய்த தவறுகளால் பாதிக்கப்பட்டவர்களின் குரலை எப்படிச் சாதாரணமாக ஒதுக்க முடியும்?
கசக்கும் நிஜம்
தினமும் செய்தித்தாளில் குறிப்பிட்ட சில மருத்துவமனைகள், சில மருத்துவர்களின் "அலட்சியத்தால் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளச் சென்றவர் இறந்தார்", "வலது பக்கச் சிறுநீரகத்துக்குப் பதில் இடது பக்கத்தில் ஆபரேஷன் செய்தனர்", "செவிலியர் கவனக்குறைவால் உயிரிழப்பு" என்று ஏதாவதொரு செய்தியைப் படிக்கிறோம். இதெல்லாம் வெறும் செய்தி மட்டும்தானா?
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு பெண்ணின் கண்ணில் கட்டி ஏற்பட்டது. அந்தப் பெண்ணுக்கு 30 வயது இருக்கலாம். அறுவை சிகிச்சை சரியாகவே நடைபெற்றது.
ஆனால், மருத்துவமனையின் அலட்சியத்தால் காரணமே தெரியாமல் அவர் உயிரிழந்தார். அவருடைய குழந்தைக்கு அப்பொழுது ஒன்றரை வயது. யாரோ செய்த குற்றத்துக்காகத் தாயின்றித் தன் வாழ்நாளைக் கடக்கப்போகும் அக்குழந்தையின் நிலை என்ன ஆகும்? இதற்கு என்ன பதில் இருக்கிறது மருத்துவத் துறையிடம்?
நம்மில் பெரும்பாலோருக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவங்கள், நமக்குத் தெரிந்த மற்றவர்களுக்கு நிகழ்ந்த மோசமான சம்பவங்கள் என்று மருத்துவத் துறை சார்ந்து ஏதாவது நிச்சயம் இருக்கும்.
சிலருக்கு இன்னும் உச்சகட்டமாக, அலட்சியத்தால் உயிர் போகும் நிலையோ, இல்லை என்னைப் போன்று வலிந்து செய்யப்பட்ட சிசேரியனால் வாழ்நாள் முழுவதுக்குமான துன்பமோ இங்கே சர்வ சாதாரணம்.
ஆனால், இவற்றைப் பற்றி எந்தச் சலனமும் இல்லாமல் மருத்துவத் துறையும் தனியார் மருந்து கம்பெனிகளும் ராக்கெட் வேகத்தில் வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
அதனால் கிடைக்கும் பலனை அனுபவிப்பவர்களாக மட்டும் இல்லாமல், அதன் அலட்சியத்தாலும், லாப நோக்கத்தாலும் ஒவ்வொருவரும் பாதிக்கப்படுகிறோம் என்பதுதான் உண்மை.
கேள்வி கூடாதா?
மருத்துவம் என்பது சேவை என்ற பார்வை காலாவதியாகி, அது வெறும் தொழில் என்றான பிறகு அதில் நடக்கும் அலட்சியத்தை, ஊழலை, அரசியலை விமர்சித்தால் என்ன தவறு? புனிதம் என்று வரையறுக்கப்பட்டதையே கேள்வி கேட்ட மரபு நம்முடையது.
மனசாட்சியுடனும், சக உயிரின் மீது கருணையுடனும் இயங்கும் மருத்துவர்கள் இங்கே எத்தனை சதவீதம்? இதற்கான பதில் மிகக் கசப்பான உண்மை.
ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் களங்கப்படவில்லைதான். மருத்துவர்களில் சில புண்ணியவான்களும் இருக்கிறார்கள். ஹிதேந்திரனின் உடலுறுப்புகள் எத்தனை பேரின் உயிரை மீட்டுக்கொடுத்தன என்பதையும், அதற்குக் காரணமாக இருந்த மருத்துவர்களையும், தொடர்ச்சியாக இது போன்று உடலுறுப்பு தானங்களில் செம்மையாகச் செயல்படும் மருத்துவர்களையும் மறக்க முடியுமா?
மருத்துவத் துறையின் முறைகேடுகள், அதிகரித்து வரும் மருத்துவச் செலவுகள் பேசினால் உடனே "இந்தியாவில்தான் மருத்துவச் செலவு குறைவு, எல்லாருக்கும் மருத்துவம் எளிதாகக் கிடைக்கிறது" என்று புள்ளிவிவரம் அவசரஅவசரமாகச் சொல்லப்படும்.
மருத்துவர்கள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், சமுதாயத் தொண்டு செய்ய வேண்டும் என்றும் சொல்லவில்லை. மருத்துவர்கள் விதிக்கும் அளவுக்கு அதிகமான கட்டணத்துக்கும், அலட்சியத்துக்கும், போலி மருந்துகளுக்கும், தவறான மருந்துகளுக்கும் எதிராகத்தான் குரல்கள் ஒலிக்கின்றன.
என்ன வித்தியாசம்?
எந்த மருந்து கம்பெனியை யாவது எதிர்த்து, இங்கே ஏதாவது செய்துவிட முடியுமா? மற்ற நாடு களில் தடை செய்யப்பட்ட எத்தனை மருந்துகள் சர்வசாதாரணமாக இங்கு விற்கப்படுகின்றன? அரசிடம் ஐந்து ரூபாய்க்குக் கிடைக்கும் மருந்துகள், தனியார் மருந்து கம்பெனிகளிடம் ஐநூறு ரூபாய்க்கு விற்கப்படுவதன் பின்னணியில் இயங்குபவர்கள் யார்? இதற்கு மருத்துவர்களும் மருத்துவத் துறை யும் வைத்திருக்கும் பதில் என்ன?
மருத்துவம் என்ற தொழிலைப்போல் இங்கு ஆயிரக்கணக்கான தொழில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மனித வாழ்வுடனும், ஆயுளுடனும் தொடர்புகொண்டவைதான். மருத்துவர்கள் நேரடியாக மற்றவர்களுடைய உயிரைக் காக்கும் சேவையில் ஈடுபடுவதால், அவர்கள் மீது நிச்சயம் இன்னும் ஒரு படி அதிகமான மரியாதையும், அன்பும் அனைவருக்கும் உண்டு.
அந்த அன்பும் மரியாதையும் அவர்களைப் புண்ணியவான் களாக்கி, கேள்விக்கு அப்பாற் பட்டவர்களாக ஆக்குவதற்கு அல்ல. அந்தத் துறையில் நடக்கும் அலட்சியத்தால் ஏற்படும் உயிரிழப்புக்கும் பாதிப்புக்கும் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புடன் பதிலளிப்பதே, அவர்களுடைய தொழிலின் அடிப்படை அறமாக இருக்க முடியும்.
- கட்டுரையாளர் தொடர்புக்கு: vilasini1504@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT