Published : 03 Mar 2018 01:09 PM
Last Updated : 03 Mar 2018 01:09 PM
எனக்கு நீண்ட நாட்களாகக் கால் நகங்களில் சொத்தை உள்ளது. எலுமிச்சைச் சாறுடன் மஞ்சள் கலந்து தடவினால் நல்லது என்கிறார்கள். உண்மையா? சொத்தை விழுந்த நகங்களை நிரந்தரமாகச் சரிசெய்வது எப்படி?
- கே. பிரேமா குமாரி, சென்னை - 92
நகப்படை அல்லது நகச் சொத்தை (Fungal Nail) என்பது ‘டிரைக்கோபைட்டன் ரூப்ரம்’ (Trichophyton rubrum) எனும் பூஞ்சைக் கிருமிகளால் ஏற்படுகிற சரும நோய். இந்த நோய் கை விரல்களைவிடக் கால் விரல்களையே அதிகமாகப் பாதிக்கும். ஈஸ்ட் (Yeast) எனும் பூஞ்சைக் கிருமிகளும், மோல்டு (Mold) எனும் பூஞ்சைக் காளான் கிருமிகளும் இந்த நோயை ஏற்படுத்தக்கூடியவை. இதன் மருத்துவப் பெயர் ‘ஆனிகோமைக்கோசிஸ்’ (Onychomycosis).
சமையல் வேலை, வீட்டு வேலை, பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளைச் செய்யும்போது, தண்ணீரில் அதிக நேரம் விரல்கள் புழங்குவதால், பூஞ்சைக் கிருமிகள் தொற்றிக்கொள்ள அதிக சாத்தியம் உள்ளது. இதைத் தடுக்க, வேலை முடிந்ததும் கை கால்களைக் கழுவிச் சுத்தமான துணியால் ஈரத்தைத் துடைத்து, விரல்களை உலரவைத்த பிறகுதான் அடுத்த வேலையில் ஈடுபட வேண்டும். ஈரமான சூழலில் பூஞ்சைக் கிருமிகள் வளர்வதற்கு அதிக சாத்தியம் உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.
இது குழந்தைகளை அவ்வளவாகப் பாதிப்பதில்லை. 40 வயதுக்கு மேல் உள்ளவர்களிடமே அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக, முதுமையில் இதன் தாக்குதல் அதிகம். மேலும் நீரிழிவு நோயாளிகள், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைபாடு கொண்டவர்கள், உடலில் வியர்வை அதிகம் சுரக்கும் பிரச்சினை உள்ளவர்கள், ரத்த ஓட்டத்தில் குறைபாடு உள்ளவர்கள், அடிக்கடி நகத்தில் இடித்துக்கொள்பவர்கள், காலணி அணியாமல் வெறும் காலில் நடப்பவர்கள் ஆகியோருக்கு இந்த நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம். விரலிடுக்குகளில் சேற்றுப்புண் இருந்தால், அங்கிருந்து நகத்துக்குத் தொற்று பரவி, நகச்சொத்தை ஏற்படுவதும் உண்டு.
அறிகுறிகள் என்ன?
நகம் பால்போல் வெளுத்துக் காணப்படும். சிலருக்கு நகம் மஞ்சள் நிறத்தில் கோடு கோடாகத் தெரியும். நகம் தடித்து கரடு முரடாகத் தெரியும். போகப்போக நகம் பிளவுபட்டு உடைந்துவிடும். இறுதியில் அது தானாகவே விழுந்துவிடும். காலில் ஷூ அணிந்தால் விரல்கள் வலிக்கும். ஓட முடியாது. வேகமாக நடக்க முடியாது.
சிகிச்சை என்ன?
இதற்குச் சிகிச்சை அளிப்பது அவ்வளவு சுலபமல்ல. இந்தப் பூஞ்சைக் கிருமிகளைக் கொல்வதற்கென்றே வீரியமான மாத்திரை மருந்துகளும் வெளிப்பூச்சுக் களிம்புகளும் நிறைய உள்ளன. ஆனால், நகச்சொத்தை இவற்றுக்கெல்லாம் அசைந்து கொடுப்பதில்லை. பணச் செலவு குறித்துக் கவலைப்படாமல், மிகவும் பொறுமையாகப் பல மாதங்களுக்குத் தொடர்ந்து இந்தச் சிகிச்சைகளை எடுத்துக்கொள்கிறவர்களுக்கு மட்டுமே ஓரளவுக்கு நோய் குணமாகும். எலுமிச்சைச் சாறுடன் மஞ்சள் கலந்து தடவினால் நோய் கட்டுப்படும் என்பதற்கு ஆதாரமில்லை. நோய்த் தடுப்புதான் இந்த நோய்க்குச் சரியான தீர்வு.
நகங்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம்?
அடிக்கடி கை, கால் விரல்களைச் சோப்பு போட்டுக் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
கை கால்களைக் கழுவியதும் ஈரம் போகத் துடைத்துவிடுங்கள். இது மிக முக்கியம்.
வேதிப்பொருட்களின் பயன்பாட்டால் நகங்கள் உடைய வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க குளியல் சோப்பை அடிக்கடி மாற்றாதீர்கள். ஒரே சோப்பைப் பயன்படுத்துங்கள்.
மற்றவர்கள் பயன்படுத்திய சோப்பைப் பயன்படுத்தக் கூடாது.
அடிக்கடி நகத்துக்கு பாலிஷ் போடாதீர்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆசைக்குப் போட்டுக்கொள்ளலாம். பாலிஷ்களை அடிக்கடி மாற்றாதீர்கள்.
அடிக்கடி பாலிஷ் போட்டுக்கொள்பவர்கள் பாலிஷை அகற்றுவதற்கு பாலிஷ் ரிமூவரைப் பயன்படுத்துவார்கள். நக பாலிஷைவிட பாலிஷ் ரிமூவர்தான் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே, கவனம் தேவை!
நகம் வறண்டு போயிருந்தால் பாலிஷுக்குப் பதிலாக மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தலாம்.
மற்றவர்கள் பயன்படுத்திய நகவெட்டியைப் பயன்படுத்தக் கூடாது.
காலுக்குச் சரியான அளவில், பொருத்தமான காலணிகளையும் ஷூக்களையும் அணிய வேண்டியது முக்கியம். ஈரத்தை உறிஞ்சும் காலுறைகளை அணியாமல் வெறுமனே ஷூக்களை மட்டும் அணியக் கூடாது - இது அதைவிட முக்கியம்.
நகத்தின் அளவிலோ நிறத்திலோ திடீர் மாற்றம் தெரிந்தால், உடனே மருத்துவரிடம் காண்பித்து ஆலோசித்துக்கொள்ளுங்கள்.
பால், பால் பொருட்கள், முட்டை, இறைச்சி, மீன், முழு தானியங்கள், காய்கறி, கீரைகள், கொட்டைகள், பயறுகள் போன்ற உணவு வகைகளை அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் நகம் ஆரோக்கியமாக வளரும்.
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம். மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.inமுகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT