Published : 26 Jan 2019 12:01 PM
Last Updated : 26 Jan 2019 12:01 PM
இந்தியாவில் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் உடற்பயிற்சி செய்வதில்லை. சமீபத்தில், ‘ஹெல்திஃபைமீ’ (HealthifyMe) என்ற செயலி, ‘இந்தியர்களின் உடல் செயல்பாட்டின் அளவுகள்’ என்ற தலைப் பில், 5 – 35 வயது வரையுள்ள சுமார் 10 லட்சம் பேரிடம் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின்படி, இந்தியாவில் 30 சதவீத ஆண்களும் 24 சதவீதப் பெண்களுமே போதுமான உடல் செயல்பாடுகளுடன் இருக்கின்றனர்.
53 சதவீத இந்தியப் பெண்களிடம் உடல் செயல்பாடுகள் போதுமான அளவுக்கு இல்லை. சராசரியாக இந்திய ஆண்கள் ஒரு நாளில் 476 கலோரிகளையும் பெண்கள் 374 கலோரிகளையும் செலவிட வேண்டும். ஆனால், இந்திய ஆண்கள் 262 கலோரிகளையும் பெண்கள் 165 கலோரிகளை மட்டுமே செலவிடுகின்றனர். உடல் செயல்பாடுகள் இல்லாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் ஆகியவை உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, ரத்தக் கொழுப்பு போன்ற தீவிரமான வாழ்க்கை முறை நோய்களுக்குக் காரணமாக அமைகின்றன.
- கனி
காசநோய்ப் பாதிப்பு: தமிழகம் 6-வது இடம்
இந்தியாவில் 27 சதவீத மரணங்களை ஏற்படுத்தும் நோயாகக் காசநோய் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் அதன் தாக்கம் அதிகரித்துவருகிறது. 2018 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 21 லட்சத்து 25 ஆயிரம் பேர் காசநோயால் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக மத்திய அரசின் சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 4 லட்சம் பேர் காச நோயால் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் காசநோயின் தாக்கம் அதிகம் உள்ளதாக அந்தப் புள்ளிவிவரம் சுட்டிக்காட்டுகிறது. இந்தப் பட்டியலில் காசநோய் பாதிப்பில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 1 லட்சத்து 3 ஆயிரம் பேருக்குக் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. காசநோயை முழுமையாக ஒழிக்கும் வகையில் 2025-ம் ஆண்டுக்குள் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
- மிது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT