Last Updated : 23 Sep, 2014 01:08 PM

 

Published : 23 Sep 2014 01:08 PM
Last Updated : 23 Sep 2014 01:08 PM

தும்மல் வருவது ஏன்?

மழைக்காலம் தொடங்கி விட்டால் ஜலதோஷம், தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல் என்று பல தொல்லைகள் வரிசையில் வந்து நிற்கும்.

இவற்றில் தும்மல் என்பது சாதாரண உடலியல் விஷயம்தான். காற்று தவிர வேறு எந்த அந்நியப் பொருள் மூக்கில் நுழைந்தாலும், மூக்கு அதை அனுமதிக்க மறுக்கிறது. அதற்கான அனிச்சைச் செயல்தான், தும்மல்.

நமது நாசித் துவாரத்தில் சிறிய முடியிழைகள் நிறைய இருக்கின்றன. நாம் உள்ளிழுக்கும் காற்றில் கண்ணுக்குத் தெரியாத தூசு, துகள் இருந்தால் அவற்றை வடிகட்டி அனுப்புவதுதான் இவற்றின் வேலை. இங்கு ஒரு மென்மையான சவ்வுப் படலம் உள்ளது. இது நிறமற்ற திரவத்தைச் சுரக்கிறது.

அளவுக்கு அதிகமாகத் தூசியோ, துகளோ மூக்கில் நுழைந்து விட்டால், இந்தச் சவ்வுப் படலம் தூண்டப்படுகிறது. உடனே அவற்றை வெளித் தள்ளும் முயற்சியில் சவ்வுப் படலம் அதிக அளவில் நீரைச் சுரக்கிறது.

இதன் தூண்டுதலால், நுரையீரல், தொண்டை வாய் மற்றும் வயிற்றுத் தசைகள் ஒன்று சேர்ந்து சுவாசப் பாதையில் உள்ள காற்றை அழுத்தமாகவும் வேகமாகவும் மூக்கு வழியாக வெளித் தள்ளுகின்றன.

இதுதான் தும்மல். இப்படித் தும்மும்போது அந்த அந்நியப் பொருள் வெளியேற்றப் படுகிறது. ஒரு தும்மலின் வேகம் மணிக்கு 160 கி.மீ.

சாதாரணத் தும்மல் சில நிமிடங்களில் நின்றுவிடும். சிலர் தொடர்ச்சியாக நூறு முறைகூடத் தும்முவார்கள். ஒரு கைத்துண்டு நனைகின்ற அளவுக்கு மூக்கிலிருந்து நீர் கொட்டும்; மூக்கு அரிக்கும். இதற்கு ‘ஒவ்வாமை தும்மல்' (Allergic Rhinitis) என்று பெயர். இங்கிலாந்தைச் சேர்ந்த டோனா கிரிஃபித் தொடர்ந்து 978 நாட்களுக்குத் தும்மி ரிக்கார்டு செய்திருக்கிறார்.

என்ன காரணம்?

ஒவ்வாமைதான் இதற்கு அடிப்படைக் காரணம். குறிப்பாக வீட்டுத் தூசு, ஒட்டடை, பருத்தி, பஞ்சு, சணல், சாக்கு, கயிறு, கம்பளி, சிமெண்ட், சுண்ணாம்பு, ஆஸ்பெஸ்டாஸ், உமி போன்றவற்றின் தூசு மூக்கில் பட்டதும் அடுக்கு தும்மல் தொடங்கிவிடும்.

அதுபோல் குளிர்ந்த காற்று, பனி, ஊதுவத்தி, சாம்பிராணி, கற்பூரம், கொசுவத்தி போன்றவற்றின் புகை, வாகனப் புகை, தொழிற்சாலை புகை, பூக்களின் மகரந்தங்கள், பார்த்தீனியச் செடியின் முள்ளிழைகள், பூஞ்சைகள் முதலியவை அடுக்கு தும்மலுக்கு வழிவிடும்.

படுக்கை விரிப்புகள், பாய், தலையணை, மெத்தை ஆகியவற்றில் காணப்படுகின்ற உண்ணி (Mites) எனும் பூச்சிகள், வீட்டு வளர்ப்புப் பிராணிகளின் உடலிலிருந்து வெளியேறும் செதில்கள், எச்சங்கள், முடிகள் காரணமாகவும் இந்த நோய் வருவதுண்டு. முட்டை, எலுமிச்சை, தக்காளி என்று சில உணவுகளாலும் இது தூண்டப்படுகிறது.

தும்மலை நிறுத்த வழி

# ஒரு தேக்கரண்டியில் சமையல் உப்பை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எட்டில் ஒரு பங்கு உப்பை 200 மி.லி. இளம் சூடான தண்ணீரில் கலந்துகொள்ளுங்கள். இப்போது சுத்தமான துணியை அந்தத் தண்ணீரில் நனைத்துப் பிழிந்துகொண்டு, திரி போலச் சுற்றிக்கொண்டு, ஒவ்வொரு நாசித் துளையிலும் விட்டு மூக்கைச் சுத்தப்படுத்துங்கள். தும்மல் நிற்கும்.

# ஆவி பறக்கும் வெந்நீரில் ‘டிங்சர் பென்சாயின்' மருந்தில் 15 சொட்டுவிட்டு ஆவி பிடித்தாலும், தும்மல் கட்டுப்படும்.

# ‘ஸ்டீராய்டு மருந்து' கலந்த மூக்கு ஸ்பிரேயை மூக்கில் போட்டுக்கொண்டால், தும்மல் நின்றுவிடும்.

-கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x