Published : 04 Aug 2018 10:54 AM
Last Updated : 04 Aug 2018 10:54 AM
நான் கடந்த 10 வருடங்களாக சைனஸ் தொல்லையால் அவதிப்படுகிறேன். 24 மணி நேரமும் மூக்கின் உள் பக்கத்திலிருந்து சளி, தொண்டைக்கு வந்துகொண்டே இருக்கிறது. மேல் தொண்டையில் சளி இருந்துகொண்டே இருக்கிறது. இரண்டு கன்னங்களும் வலிக்கின்றன. பெரிய மருத்துவமனைகளில் போய்ப் பார்க்க எனக்கு வசதியில்லை. ‘இ.எஸ்.ஐ’ மருத்துவமனைக்கு இரண்டு முறை போனேன். தலைக்கு எக்ஸ்-ரே எடுத்தார்கள்.
சளி இருப்பதாகச் சொன்னார்கள். மாத்திரைகள் கொடுத்தார்கள். அவற்றைப் போடும்போது மட்டும் நன்றாக இருக்கிறது. மறுபடியும் தொல்லை தொடங்கிவிடுகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு இல்லையா? நான் ஒரு தொழில் தொடங்கியுள்ளேன். அதில் கவனம் செலுத்த முடியாத அளவுக்குச் சிரமப்படுகிறேன். எனக்கு ஆலோசனை சொல்லி உதவுங்கள்.
- கஜலட்சுமி, சென்னை போரூர்.
நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு, சுற்றுச்சூழல் மாசு, ஒவ்வாமை இந்த மூன்றும்தாம் சைனஸ் பிரச்சினைக்கு முக்கியக் காரணங்கள். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைத் தொற்றுகள் மூலமாகச் சளி பிடிக்கும்போதும், சைனஸ் தொல்லை கொடுக்கிறது. மூக்குத் துவாரத்தை இரண்டாகப் பிரிக்கிற நடு எலும்பு வளைவாக இருப்பது, ‘பாலிப்’ எனும் மூக்குச் சதை வளர்ச்சி ஆகியவை இந்தப் பிரச்சினையைத் தூண்டுகின்றன.
அழற்சியே அடிப்படை
மாசடைந்த காற்றில் வரும் தொற்றுக் கிருமிகள் சைனஸ் அறைக்குள் புகுந்துவிடும்போது, அங்குள்ள ‘சளிச் சவ்வு’ வீங்கி அழற்சியாகும். இதனால் அளவுக்கு அதிகமாக நிணநீர் திரவம் சுரந்து, மூக்கு வழியாக வெளியேறும். ஜலதோஷம் பிடித்தால், தூசு, புகை காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டால், மிகவும் குளிர்ச்சியானதைச் சாப்பிட்டால், பனியில் நடந்தால், மழையில் நீண்ட நேரம் நனைந்தால் இதே நிலைமைதான்.
சைனஸ் அறையில் அழற்சி அதிகமாகும்போதும், மூக்கில் சதை வளரும்போதும், இந்த நீர் வெளியேற முடியாத அளவுக்கு மூக்கு அடைத்துக்கொள்ளும். அப்போது மூக்கை உறிஞ்சிக்கொண்டே இருப்பார்கள். இதனால் சைனஸ் அறையில் அழுத்தம் அதிகமாகி நிலைமை இன்னும் மோசமடையும்.
அறிகுறிகள் என்ன?
அடிக்கடி தும்மல், மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு, தலைவலி ஆகியவை சைனஸ் பாதிப்பின் பொதுவான அறிகுறிகள். கண்ணுக்குக் கீழே, கன்னம், முன்நெற்றி ஆகிய இடங்களைத் தொட்டால் வலிக்கும். தலையைக் குனிந்தால் தலை பாரம் அதிகரிக்கும். இவற்றுடன் காய்ச்சல், தொண்டை யில் சளி கட்டுவது, இரவில் இருமல் வருவது, உடல் சோர்வு போன்றவையும் சேர்ந்துகொள்ளும்.
பரிசோதனைகள் என்ன?
சைனஸ் தொல்லையைக் கண்டறிய முகத்தை எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்க்கலாம். இப்போது மூக்கு எண்டாஸ்கோப்பி (Nasa#endoscopy) பரிசோதனை மூலமும் சைனஸ் பாதிப்பைத் துல்லியமாகக் கணிக்க முடிகிறது. இவற்றுடன் பொதுநலன் அறியும் ரத்தப் பரிசோதனைகள், ஒவ்வாமைக்கான பரிசோதனைகள், சளிப் பரிசோதனைகள் ஆகியவையும் தேவை.
என்ன சிகிச்சை?
இந்தப் பிரச்சினைக்கு ஒவ்வாமைதான் முக்கியக் காரணியாக இருப்பதால், அந்த ஒவ்வாமையை அகற்றும் சிகிச்சையைத்தான் முதலில் மேற்கொள்ள வேண்டும். மூக்கு ஒழுகுவதை நிறுத்த மருத்துவர்களின் பரிந்துரையுடன் சில மாத்திரைகளைச் சாப்பிடலாம். மூக்கடைப்பைப் போக்க, மூக்கில் சொட்டு மருந்து விடுவது அவசரத்துக்கு உதவும். ஆனால், இதையே தொடர்ந்து மேற்கொள்வது நல்லதல்ல.
சொட்டு மருந்து விடுவதால், ஆரம்பத்தில் நிவாரணம் கிடைப்பது போலிருக்கும். ஆனால், நாளடைவில் இதனால் நிவாரணம் கிடைக்காது. இதற்குப் பதிலாக, ஸ்டீராய்டு கலந்த மூக்கு ஸ்பிரேயரைப் பயன்படுத்தலாம். மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு இதைப் பயன்படுத்த வேண்டியது முக்கியம்.
மூக்கடைப்பைப் போக்க டிங்க்சர் பென்சாயின், மென்தால், யூகலிப்டஸ் மருந்து போன்றவற்றைப் பயன்படுத்தி, காலையிலும், இரவிலும் நீராவி பிடிப்பது நல்லது. இதனால் மூக்கில் உள்ள சளி இளகி, சுலபமாக வெளியேறிவிடும். தொற்றுக் கிருமிகள் இருப்பதாகத் தெரிந்தால் தகுந்த ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.
எண்டாஸ்கோப்பி உதவும்!
இதற்கு எண்டாஸ்கோப்பி உதவியுடன், ‘பலூன் சைனுபிளாஸ்டி’ (Balloon sinuplasty) எனும் நவீன சிகிச்சை முறையில், முழு நிவாரணம் அளிக்க முடியும். சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இது இலவசமாகச் செய்யப்படுகிறது.
செய்யக் கூடாதவை என்ன?
# ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான உணவு வகைகள் கூடாது
# பனியில் அலையக் கூடாது.
# புகைப்பிடிக்கக் கூடாது.
# புகையுள்ள இடங்களில் வசிக்கக் கூடாது.
# மூக்குப்பொடி போடக் கூடாது.
# அசுத்தமான நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது.
# விரல்களால் அடிக்கடி மூக்கைக் குடையக் கூடாது.
# மூக்கடைப்பைப் போக்கும் சாதாரண இன்ஹேலரை
# மருத்துவர் கூறாமல் அடிக்கடி பயன்படுத்தக் கூடாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT