Published : 25 Aug 2018 12:32 PM
Last Updated : 25 Aug 2018 12:32 PM
எனக்கு வயது 56. உடல் சோர்வாக உள்ளது என்பதற்காக மீன் எண்ணெய் மாத்திரையைத் தினமும் ஒன்று வீதம் தொடர்ந்து பல வருடங்களாகச் சாப்பிட்டு வருகிறேன். எனக்குச் சிறுநீரகத்தில் கல் உள்ளது. இதை அதிகம் சாப்பிட்டால் கல் பெரிதாகும் என்று என் தோழி கூறுகிறாள். இது உண்மையா? நான் அதைச் சாப்பிடுவது தவறா? விளக்கம் தேவை.
- பி. செந்தமிழ்ச்செல்வி, காயல்பட்டினம்.
நீங்கள் மட்டுமல்ல, நாட்டில் பெரியவர், சிறியவர் என வித்தியாசம் இல்லாமல், மருத்துவரின் ஆலோசனையின்றி, பலரும் எடுத்துக்கொள்ளும் சத்து மாத்திரைகளில் மீன் எண்ணெய் மாத்திரைதான் முன்னிலையில் உள்ளது. இந்தச் சுயமருத்துவப் பழக்கத்துக்கு இரண்டு காரணங்கள் உண்டு. இது கடைகளில் எளிதாகவும் விலை மலிவாகவும் கிடைக்கிறது என்பது ஒரு காரணம். இதனால் என்ன நன்மை கிடைக்கிறது என்பது தெரியாவிட்டாலும், ‘உடலுக்கு நல்லது’ என்று பொதுபுத்தியில் பதிந்து இருப்பது அடுத்த காரணம்.
நம் உடலுக்குத் தேவையான, அதேவேளையில் இயற்கையாக எளிதில் கிடைக்காத, பல வகைச் சத்துகள் சுறா, திமிங்கலம் போன்ற மிகப் பெரிய மீன் வகைகளில் கிடைக்கின்றன. இந்த மீன்களை நம்மால் சமைத்துச் சாப்பிட முடியாது. அதனால் இவற்றின் கல்லீரலில் இருந்து ஒரு வகை எண்ணெயை எடுத்து, பல கட்டச் சுத்திகரிப்புக்குப் பிறகு, சிறிய உருண்டை வடிவக் குழாய்களில் அடைத்துக் கடைகளில் விற்கிறார்கள். ‘காட் லிவர் ஆயில்’ (Cod liver oil) எனும் பெயரில் கடைகளில் கிடைக்கிற மீன் எண்ணெய் மாத்திரைகள் இவை.
என்ன சத்துகள் உள்ளன?
வைட்டமின் ஏ, டி ஆகிய ஊட்டச் சத்துகளும், ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் மேலே சொன்ன மிகப் பெரிய மீன் வகைகளிலிருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெய்யில் நிறைவாக உள்ளன. ஆனால், டுனா, டிரவுட், சால்மன், காட் போன்ற மீன்களிலிருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெயில் இவை குறைவாகவே உள்ளன. எனவே, எந்த வகை மீனிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறதோ அதைப் பொறுத்தே அதில் உள்ள சத்துகளின் அளவு அமையும்.
என்னென்ன நன்மைகள்?
மீன் எண்ணெய் மாத்திரையில் உள்ள சத்துகள் குழந்தைகளுக்கு வருகிற பார்வைக் குறைபாடு போன்ற கண் நோய்களைக் கட்டுப்படுத்தும். முதியோருக்கு ஏற்படுகிற ‘மேக்குலர் டீஜெனரேஷன்’ (Macular degeneration) எனும் பார்வைக் கோளாறைத் தள்ளிப்போடும். மூட்டு வலியைக் குறைக்கும். ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
ரத்தக் குழாய்களில் கெட்ட கொழுப்பு ஏற்படுத்தும் பாதிப்புகளைக் குறைத்து இதய பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால், அதையும் ஓரளவு கட்டுப்படுத்தும். சருமப் பாதுகாப்பு கிடைக்கும். உடலில் காயங்கள் சீக்கிரம் ஆறும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்சினை உள்ளவர்களுக்கும், அல்சைமர் எனும் மறதி நோய்க்கும் இது பலன் அளிப்பதாக அறியப்பட்டுள்ளது.
யாருக்கு இது ஆகாது?
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான். மீன் எண்ணெய் மாத்திரை சத்து மாத்திரைதான் என்றாலும் அதையும் தேவையில்லாமல் சாப்பிடக் கூடாது. சில வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் மீன் எண்ணெய் மாத்திரைகளைச் சாப்பிட்டால் எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாது என்றொரு தவறான கருத்தும் மக்களிடம் பரப்பப்படுகிறது. இந்த எண்ணமும் களையப்பட வேண்டும்.
ஒருவரின் உடல்நிலையைப் பொறுத்துத்தான் இந்த மாத்திரையைச் சாப்பிடலாமா, வேண்டாமா என்பதைக் கூற முடியும். எனவே, இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கும் முன்பு குடும்ப மருத்துவரைக் கலந்தாலோசித்துக் கொள்வது நல்லது.
பொதுவாக, சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள், சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்கள், குழந்தைகள், நீரிழிவு உள்ளவர்கள், இதய நோய்க்கு ஏற்கெனவே மருந்து எடுத்துக்கொண்டு வருபவர்கள் ஆகியோர் அவசியம் மருத்துவரின் பரிந்துரைப்படிதான் மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மீன் உணவுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் இந்த மாத்திரைகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
மாற்று உண்டா?
மீன் எண்ணெய்யைப் பெறுவதற்கு என்னதான் மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் இயற்கை உணவு வகைகளுக்கு அது ஈடாகாது. மீன் எண்ணெய்யில் காணப்படும் சத்துகள் எல்லாமே மாத்திரைகளைச் சாப்பிடும்போது கிடைப்பதைவிட மீன்களைச் சமைத்து நேரடியாக உண்ணும்போது உடலில் அதிகமாகச் சேரும் என்கின்றன ஆய்வுகள்.
சைவம் சாப்பிடுகிறவர்கள் இந்த வைட்டமின்களைப் பெற மாற்று உண்டா எனக் கேட்கலாம். மாற்று உண்டு. வைட்டமின் ஏ சத்தைப் பெற பால் தயாரிப்புகள், கேரட், தக்காளி, பப்பாளி, மாம்பழம், ஆரஞ்சு, கீரைகள் போன்றவற்றைச் சாப்பிடலாம். வைட்டமின் டி சத்தைப் பெற பால், காளான் சாப்பிடலாம். தினமும் வெயிலில் அரை மணி நேரம் நிற்கலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தை ஃபிளக்ஸ் விதைகள், சோயாபீன்ஸ், பாதாம் பருப்பு, வெண்ணெய் ஆகியவற்றைச் சாப்பிடுவதன் மூலம் பெற முடியும்.
உங்களுக்குச் சோர்வு இருக்கிறது என்கிறீர்கள். உடல் சோர்வு, உளச்சோர்வு எனச் சோர்வில் இருவகை உண்டு. அவற்றுக்குப் பல காரணங்களும் உண்டு. உங்களுக்கு எந்தக் காரணத்தால் சோர்வு வருகிறது என்பதைத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெறுங்கள். மீன் எண்ணெய் மாத்திரையை நம்பி உங்கள் ஆரோக்கியத்தைக் கோட்டைவிட்டுவிடாதீர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT