Published : 25 Aug 2018 12:33 PM
Last Updated : 25 Aug 2018 12:33 PM
இன்றைய தினம், பூங்காவில் எல்லாம் ஓய்வூதியம் பெறும் முதியவர்கள்தாம் நடந்துகொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் வயதான பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்னும் நிலையில்தான் இன்றைய தலைமுறையினரின் எண்ணம் இருக்கிறது.
ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் பல் போன பிறகு உடற்பயிற்சியைத் தொடங்குவதைவிட, பல் முளைக்கும்போதே உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும் என சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
சிறுவர்களின் உடல் பருமன் என்பது இன்றைய தினம் உலகளாவிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. உலக அளவில், ஐந்து வயதுக்குட்பட்ட 4.3 கோடிக் குழந்தைகள் உடல் பருமனாக இருக்கிறார்கள். இந்தியாவில், 2 வயது முதல் 17 வயது வரையுள்ளவர்களில் சுமார் 18.2 சதவீதத்தினர் உடல் பருமனாக இருக்கிறார்கள்.
இவர்கள் வளரும்போது, உடல் குறைந்து சரியான எடைக்கு வந்துவிடுவார்கள் என்று தங்களுக்குத் தாங்களே பொய் சமாதானம் செய்துகொள்கிறார்கள் பெற்றோர்கள். ஆனால், சிறுவர்களின் உடல் பருமன் என்பது உடனே கவனிக்கப்பட வேண்டிய வாழ்வின் முக்கியமான அம்சமாகும். சரி எந்த வயதில் உடற்பயிற்சியைத் தொடங்க வேண்டும்?
பிறந்தவுடன்...
பிறந்ததில் இருந்தே குழந்தையின் உடற்பயிற்சியும் ஆரம்பமாகிவிடுகிறது. அவர்கள் நம்மைப் போல் சும்மா இருப்பதில்லை. நீங்கள் நன்றாகக் கவனித்துப் பார்த்தால், அவர்கள் தொடர்ந்து கை, கால்களை அசைத்துக்கொண்டிருப்பதைக் காண முடியும். மேலும், தலையை இருபுறமும் திருப்பிக்கொண்டே இருப்பார்கள். அந்த அசைவுகள்தாம் அவர்களது உடற்பயிற்சிக்கான ஆரம்பம்.
தவழும் பருவத்தில்...
தவழும் போதும், அவர்கள் உற்சாகமாக, சுறுசுறுப்பாக, ஏதாவது வண்ணத்தில் இருக்கும் பொருள் மீது ஆர்வம் காட்டி அதை நோக்கிச் செல்வது, அதை எடுத்துப் பார்ப்பது என்று இயங்கிக்கொண்டேதான் இருப்பார்கள்.
நடக்கப் பழகும்போது...
நடக்கத் தொடங்கும் பருவத்தில் பார்த்தால், தினமும் குறைந்தது மூன்று மணி நேரமாவது குழந்தைகள் நடக்கிறார்கள். நிற்பது, அமர்வது, எழுவது, நடப்பது, எதையாவது தேடிச் செல்வது எனக் குழந்தைகள் எதையாவது செய்து கொண்டிருப்பார்கள்.
இவ்வாறு வளரும் பருவத்தில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அளவுக்கு மீறி குண்டாக இருந்தாலே, (உடல் பரிசோதனையுடன்) இது போல் நடக்க வைப்பது, பந்து கொடுத்து விளையாட வைப்பது, நீச்சல் பழகக் கற்றுக்கொடுப்பது, மூன்று சக்கர சைக்கிள் ஓட்டச் சொல்வது போன்ற பயிற்சிகளில் ஈடுபடுத்தினாலே, அவர்கள் உடல் ஆரோக்கியமாக, வலுவாக வளர ஆரம்பிக்கும்.
5-17 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு...
இவர்களுக்கு, பள்ளியிலும் வீட்டிலும் பல்வேறு உடற்பயிற்சிகள் மிகவும் அவசியம். பள்ளியில் உடற்பயிற்சி நேரத்தில் இவர்கள், தங்களை அங்குள்ள விளையாட்டுக்களில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். வீட்டுக்கு வந்த பிறகும்கூட, ஏதாவது உடற்பயிற்சி அல்லது விளையாட்டுக்களில் ஈடுபடலாம். இப்படி இரண்டிலும் 30 நிமிடங்கள் செலவிட்டாலே போதுமானது.
இவர்களுக்குத் தினமும் ஒரு மணி நேரப் பயிற்சி தேவை. வாரத்துக்கு இப்படி 3-4 தடவை உடற்பயிற்சியில் ஈடுபட்டால் போதுமானது. இவர்கள், தொலைக்காட்சி, செல்பேசி, கணினி, வீடியோ விளையாட்டுக்கள் ஆகியவற்றில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் விளையாடுவதற்கான நேரம் கிடைக்கும்.
வீட்டு வளர்ப்புப் பிராணிகளோடு நடத்தல், வேகமாக நடத்தல், ஓடுதல், குதித்தல், இசைக்கு ஏற்ப ஆடுதல், பூப்பந்து, கால்பந்து, டென்னிஸ், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றைத் தன் நண்பர்களுடன் சேர்ந்து விருப்பத்துடனும் மகிழ்ச்சியுடனும் செய்தாலே போதும்.
உடற்பயிற்சியின் போது கவனம்
எல்லாக் குழந்தை களையும் ஒரே மாதிரி உடற்பயிற்சி செய்ய அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு வருக்கும் அவர்களது உடல் நிலை, உடல் தகுதி, அவர்களுக்கு இருக்கும் நோய்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான உடற்பயிற்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பல்வேறு பிறவிக்கோளாறுகள், பிறவி இதய நோய்கள் உள்ளவர்கள் ஆஸ்துமா, நுரையீரல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இளம் வயதிலேயே மூட்டு வாதப் பிரச்சினை உள்ளவர்கள், பல்வேறு தசை-நரம்பு நோய் மற்றும் நலிவுக்கோளாறு உள்ளவர்கள், ரத்தக்கசிவு உள்ளவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டு, அறிவுத் திறன் குறைவாக உள்ள குழந்தைகள் என உடலாலும் மனத்தாலும் பாதிப்பு உள்ள குழந்தைகளை உரிய சிகிச்சையுடன், மருத்துவரின் ஆலோசனை பெறாமல் உடற்பயிற்சி செய்யவும் விளையாடவும் அனுமதிக்கக் கூடாது என்பதைப் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முறையான உணவு, முறையான உடற்பயிற்சி, முறையான உறக்கம் என இந்த மூன்றும் விதைக்கப்பட்ட ஒவ்வொரு தளிரும் துடிப்புடன் துளிரும்… வாழ்க்கையில் மிளிரும்!
- டாக்டர்.சு.முத்துச் செல்லக் குமார், கட்டுரையாளர்,
மருத்துவப் பேராசிரியர்
தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT