Published : 11 Oct 2025 07:06 AM
Last Updated : 11 Oct 2025 07:06 AM

சுயமாக இருமல் மருந்தை வாங்கலாமா?

இருமல் பிரச்சினை வராதவர்கள் இருக்கவே முடியாது. பொதுவாக வைரஸ் தொற்றுகள் (சளி, காய்ச்சல்), ஆஸ்துமா, ஒவ்வாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இருமல் ஏற்படுகிறது. இருமல் பிரச்சினையை எப்படிச் சரி செய்துகொள்வது?

இருமலுக்கான காரணங்கள்

தொற்றுகள்: இருமல் ஏற்படுவதற்கு மேல் சுவாசப் பாதை தொற்று, சளி, காய்ச்சல், பிற வைரஸ் தொற்றுகள் காரணமாக இருக்கலாம்.

நுரையீரல் தொற்றுகள்: நிமோனியா, கடுமை யான மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நுரையீரல் நோய்களும் இருமலை ஏற்படுத்தும்.

காசநோய்: நாட்டில் மிகப்பெரிய சவாலாக உள்ள தொற்றுநோய், காசநோய்தான். இதனா லும் இருமல் ஏற்படும்.

கக்குவான் இருமல் (Pertussis): இது ஒரு பாக்டீரியா தொற்று. கடுமையான இருமலை ஏற்படுத்தும்.

ஒவ்வாமை: தூசி, மகரந்தம், அச்சு, புகை போன்ற ஒவ்வாமைகள் இருமலைத் தூண்டும்.

சுற்றுச்சூழல் காரணிகள்: சுவாச மண்டலத்தில் எரிச்சலூட்டும் புகை, மாசு, பிற வேதிப் பொருள் கள் வறட்டு இருமலை ஏற்படுத்தும்.

ஆஸ்துமா: நாள்பட்ட நுரையீரல் பிரச்சினை யான சிஓபிடி (COPD), இருமலுக்கு ஒரு பொதுவான காரணம். நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் இருமலை ஏற்படுத்தும்.

பிற காரணம்: அமில எதுக்களிப்பால் (GERD) இரைப்பையிலிருந்து அமிலம் உணவுக் குழாய்க்கு வரும்போது இருமலுக்கு வழிவகுக்கும். உணவை விழுங்குவதில் உள்ள சிரமமும் இருமலை ஏற்படுத்தும்.

எப்போது சிகிச்சை தேவை?

சிரமம் ஏற்படுத்தும் அளவுக்குத் தொடர்ந்து இருமல், மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். ஒருவருக்கு இருமல் வந்தாலே உடனடியாக அதை நிறுத்த வேண்டும் என்றோ அதுகுறித்து பதற்றமோ தேவையில்லை. சாதாரண தொடர் இருமலுக்கு ‘Non pharmacologic treatment’ எனப்படும் பாட்டி வைத்தியமே போதுமானது.

வீட்டு வைத்தியம்

* வறட்டு இருமல் இருக்கும்போது வெதுவெதுப்பான நீர் அருந்துவது தொண்டைக்கு இதமளிக்கும்.
* இரவு நேரத்தில் வெதுவெதுப்பான பால் குடிப்பது இருமலைத் தணிக்க உதவும்.
* வெதுவெதுப்பான உப்புநீரைக் கொண்டு வாய் கொப்பளித்தால் இருமல் குறையும்.
* தேன், இஞ்சியைக் கலந்து சாப்பிடலாம். இஞ்சிச் சாறு அல்லது இஞ்சி டீயுடன் தேன் சேர்த்து அருந்துவது தொண்டை வலி, எரிச்சலைப் போக்குவதோடு இருமலையும் தணிக்கும்.

இது வேண்டாம்

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து கடையிலிருந்து இருமல் மருந்தை வாங்கி அருந்துவது நல்லதல்ல. அதாவது, எந்த மாதிரியான இருமல் என்பதை மருத்துவர் பரிசோதித்து மருந்து, மாத்திரைகள் எழுதிக் கொடுத்த பிறகு மருந்தை உட்கொள்வது மட்டுமே பாதுகாப்பானது.

உதாரணமாக ஆஸ்துமா அறிகுறிகள் இருக்கும்போது அதற்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் குறிப்பிட்ட மருந்து, மாத்திரைகளை உட்கொண்டால்தான் தீர்வு கிடைக்கும். ஏதோ ஒரு இருமல் மருந்தை உட்கொண்டால், தீர்வு கிடைக்காதது மட்டுமன்றி, நோயின் தீவிரமும் அதிகரிக்கலாம்.

இன்று சில மருந்து மாத்திரைகளின் தயாரிப்பே ஏற்றுக்கொள்ள முடியாத மூலக்கூறுகளுடன் உள்ளது. சில இருமல் மருந்துகள் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தரக் கூடாது.

குறிப்பாக, ‘Dextrometharpine (Dxm)’ஐ உள்ளடக்கிய இருமல் மருந்தைக் குழந்தைகள், இளைஞர்கள் தொடர்ந்து உட்கொண்டால், ‘Euphoria' என்றழைக்கப்படும் பரவசநிலை ஏற்படுகிறது. குறிப்பாக, டெக்ஸ்ட்ரோமெத்தார்பின் இருக்கும் இருமல் மருந்தை ‘Over the counter’ (OTC) ஆக வாங்கி அருந்துவதை மக்கள் பழக்கமாகக்கொள்வது உடலுக்கு நல்லதல்ல.

அதிகளவில் இந்த இருமல் மருந்தை அருந்தினாலோ, Alcohol, Antihistamines, Acetaminophen போன்றவற்றுடன் சேர்த்து அருந்தினாலோ தீவிரமான பக்க விளைவுகள் ஏற்படலாம். தொடர்ந்து உட்கொள்ளும் போது உயர் ரத்தஅழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிப்பு, வாந்தி, குமட்டல், வயிற்று வலியை ஏற்படுத்தும். DXM இருக்கும் இருமல் மருந்தை நீண்டகாலம் அருந்துவது ‘Addiction’ என்கிற நோய்நிலையை ஏற்படுத்துகிறது.

அரசு செய்ய வேண்டியது

* மருந்துக் கடைகளில் மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து, மாத்திரைகள் தரக்கூடாது என அரசு உத்தரவிட வேண்டும்.
* ஏற்றுக்கொள்ள முடியாத மூலக்கூறு களுடன் தயாரிக்கப்படும் மருந்து, மாத்திரை பிராண்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டும். மீறினால் அந்த மருந்தைத் தயாரிக்கும் நிறுவனங்களின் உரிமையை ரத்துசெய்ய வேண்டும்.
* மருத்துவரைப் பார்க்காமல் நேரடியாக மருந்துக் கடையில் இருமல் மருந்து, சளி மருந்து வாங்கக் கூடாது என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
* சுகாதாரத் துறையில் தமிழகம் இன்று முன்மாதிரி மாநிலமாக உள்ள நிலையில், தவறான மருந்து தயாரிக்கப் படுவதற்கும், மக்கள் தவறான மருந்தை உட்கொள்வதற்கும் முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும்.

மக்கள் செய்ய வேண்டியது

* சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் வரும்போது அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை பெற்றுகொள்ள வேண்டும் அல்லது தனியார் மருத்துவர்களிடம் பரிசோதித்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
* மருந்துக் கடைகளில் நேரடியாக மருந்து வாங்கி உட்கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும்.
* மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல், சளி, மாலை நேரக் காய்ச்சல், பசியின்மை, உடல் எடை இழப்பு, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் காசநோயாக இருக்கலாம். அப்படி எனில் தாமதப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை களை மேற்கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
* தனியார் மருந்து ஆலைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
* தமிழக அரசு மருத்துவமனைகளுக்கான அனைத்து மருந்து, மாத்திரைகளை அரசே தயாரிக்க வேண்டும். இதனால் மருந்துக்கான செலவு மிச்சமாவதையும் தரத்தையும் உறுதி செய்ய முடியும். வருமானத்தையும் அரசு ஈட்ட முடியும்.

‘Industrial toxins’ எனப்படும் ‘Diethylene glycol’ போன்றவை இருமல் மருந்தில் கலப்படம் செய்யப்பட வாய்ப்பு உண்டு. இருப்பினும் அது பரிசோதனை முடிவில்தான் தெரியவரும். அவ்வாறு டை எதிலீன் கிளைகால் போன்ற வேதி நச்சுக்களைக் கலக்கும்போது, அந்த இருமல் மருந்தை அருந்தும் குழந்தைகளுக்குச் சிறுநீரகப் பாதிப்போடு உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்து உட்கொள்ளக் கூடாது.

- கட்டுரையாளர்: குழந்தைகள் நல மருத்துவர்; sppillai26@yahoo.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x