Last Updated : 02 Jul, 2025 01:43 PM

1  

Published : 02 Jul 2025 01:43 PM
Last Updated : 02 Jul 2025 01:43 PM

கனவு பற்றி திருக்குறளில் மூளை நரம்பியல் ஆய்வு!

உலகப் பொதுமறையான திருக்குறளை அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும் என்பது என்னுடைய மாபெரும் தமிழ்க் கனவு. அந்த வகையில் திருக்குறளில் கனவு பற்றி மூளை நரம்பியல் ஆய்வு இது. நமது மூளை, நம் நனவான அனுபவங்களின் மூலம் நிகழ்வுகளைத் தானாகவே உருவாக்கி நம்மால் காண முடியும் என்பதைக் கனவுகள் காட்டுகின்றன.

தூக்கத்தில் நனவான அனுபவங்கள் அடிப்படையில், மூளை செயல்பாடுகளுடன் எவ்வாறு அவை தொடர்புடையவை என்பது பற்றியும் கனவு காண்பவர் ஏன் சுற்றுச்சூழலிருந்து, பெரும்பாலும் தூக்கத்தில் விடுபட்டிருப்பது பற்றியும் கனவு காண்பது மன கற்பனையுடனும் கருத்துகளுடனும் மிகவும் தொடர்புடையதா என்பது பற்றியும் வள்ளுவர் கனவு பற்றி மூளை நரம்பியல் அறிவியல் உண்மைகள் அறியப்படாத அன்றே கூறியிருப்பது வியப்பான ஒன்று. அதற்காக அதிகாரம் 122இல் கனவு நிலை யுரைத்தல் என்கிற தலைப்பில் கூறியிருப்பது விந்தை. மேலும், இவை தவிர கனவு பற்றி பொருட்பாலில் தீ நட்பு (819), இரவு (1054) என்னும் அதிகாரங்களிலும் கூறியிருக்கிறார்.

கனவில், காதலன் தோன்றுவது, நினைவில் கிடைக்காத இன்பம் கனவில் கிடைப்பது, கனவுக்கும் நனவுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி வள்ளுவர் கூறியதை இப்போதைய மூளை நரம்பியல் ஆய்வுகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றன. மூளை இயக்கத்தின் ஒருவித அதிர்வுகள் காரணமாக மூளையில் பதிந்துள்ள நினைவுக் குறிப்புகள் ஒன்றோடொன்று தொடர்புப்படுத்தும் செயல்பாட்டின் விளைவாகக் கனவுகள் ஏற்படுகின்றன.

பெரும்பாலும் தூக்கத்தில், அதிக கண்ணசைவுகள் உள்ள உறக்கத்தில் Rapid Eye Movement Sleep (REM Sleep) மூளையின் லிம்பிக் (Limbic System) பகுதி, பிரான்டல் பகுதி (Frontal Lobe) பாதிப்புகள் இன்றி இருக்கும் போது (Vivid) தெளிவான, வினோதமான (Bizarve) கனவுகள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம், உணர்ச்சிவசப்படக்கூடியதை (Emotional) கட்டுப்படுத்தும் மூளை மையமான மூளையின் லிம்பிக் பகுதி கண் அசைவு அதிகம் கொண்ட தூக்கத்தில் அதிகமாக இயங்குவதே ஆகும். இதனால் உணர்ச்சிமிகு கனவுகள், கிளர்ச்சிமிகு கனவுகள் உண்டாகின்றன. நம் மூளையின் பிரான்டல் பகுதி கண் அசைவுகள் அதிகமுள்ள தூக்கத்தில் சற்றுக் குறைவான இயக்கம் கொண்டுள்ளதால் நாம் வைத்துள்ள ஞாபகங்கள், அனுபவங்கள் அடிப்படையில் கனவுகள் கோர்வையாகக் கதை போன்று எழுகின்றன.

மேலும் பான்ஸ் (Pons) என்னும் மூளை தண்டு பகுதியில் ஒரு மையம் நம் கண் அசைவு உள்ள தூக்கம் ஆரம்பிப்பதில் முக்கிய பங்கு உள்ளதன் காரணமாக, நம் மூளையின் பார்வையை உணரும் மூளை பகுதியில் (Visual Cortex) இயக்க அதிகரிப்பு ஏற்படுவதால், காட்சி பிம்பங்கள் படம் போல் கனவுகளில் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பான்டோ செனிகுலோ அக்ஸிபிட்டல் (Ponto - Geniculo - Occipital) இணைப்பில் அதிக அதிர்வலைகள் ஏற்படுவதே. இதுவே நம் கண் அசைவு தூக்கம், உறக்கத்தில் ஆரம்பமாகவும், காட்சிகள், உருவங்கள், கொண்ட கனவுகள் படம் போல் ஓடவும் காரணமாகிறது. அதுமட்டுமல்ல நமது மூளையின் அமைக்தலா (Amygdala), ஹிப்போகாம்பஸ் (Hipocampus) போன்ற பகுதியில், உணர்ச்சிவசமாகக் கூடிய, ஞாபகங்கள் தொடர்புடனான கனவுகள் வடிவு பெற காரணமாகவும் உதவுகின்றன. இத்துடன் தலாமஸ் (Thalamus), மீடியன் பிரிபிரண்டல் பகுதி (Medical Preprontal Cortex) மற்றும் சிங்குலேட் பகுதியின் பின் பகுதி (Posterior Cinculate Cortex) போன்ற மூளை பகுதியின் இயல்புநிலை இயக்கங்களும் தூக்கத்தில் அதிகமாக இயங்குவதும் பல்வேறு கனவுகளுக்கு காரணமாக அமைகின்றன.

கண் அசைவு தூக்கத்தில், கோலினர்சிக் (Cholinergic) என்னும் நரம்பு இயக்கி வேதியியல் பொருள் உள்ள ஆஇஎம் ஆன் (REM ON) என்னும் நரம்பிழைகளும், மோனாஅமினர்ச்சிக் ஆஇஎம் ஆப் (REM OFF) நரம்பிழைகளும் மூளையின் பான்ஸ் (Pontine Tegmaterin) பகுதியில் தங்களின் வேதியியல் நரம்பியல் கடத்திகளின் இயக்கத்தை அளவீடு செய்து இயக்கி, கனவுகளுக்கு அடித்தளம் அமைக்கின்றன. தூக்கத்தின் இன்னொரு நிலையான கண் அசைவு அற்ற தூக்கத்திலும் ‘Non Rapid Eye Movement Sleep (NREM Sleep)’ கனவுகள் ஏற்படலாம் என தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் விலங்குகளும் கனவு காணக்கூடும் எனவும் அறியப்பட்டுள்ளது. (நற்றிணை 87 வௌவால் கனவு)

இத்தகைய கனவு பற்றிய மூளை நரம்பியல் அறிவியல் அடிப்படை உண்மைகளை வள்ளுவர் பன்னிரண்டு திருக்குறள்களில் இயம்பியிருப்பது மூளை நரம்பியல் அறிவியல் மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கு வள்ளுவனே மூலம் என்பதைக் காட்டுகிறது. காமத்துப்பாலில், கனவுநிலை யுரைத்தல் அதிகாரத்தில் கனவில் காதலர் தோன்றுவது, நனவில் கிடைக்காத இன்பத்தைக் கனவில் தருவது, கனவுக்கும் நனவுக்கும் உள்ள தொடர்புகள், நனவில் கிடைக்காததைக் கனவில் பெறுதல், கனவு நனவு போல இனிமை தருதல் போன்ற மூளை நரம்பியல் அறிவியல் அடிப்படையுடன் கூடிய உண்மைகளைத் திருக்குறள் கூறுகிறது.

குறள்: 1211

“காதலர் தூதொடு வந்த கனவினுக்கு

யாதுசெய் வேன்கொல் விருந்து “

காதலனை பிரிந்து வாடிய காதலி அயர்ந்து கண்ணுறங்கியபோது காதலன் அனுப்பிய தூதுவோடு வந்த கனவுக்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன் என்பது பொருள்.

இந்தக் குறலில் வாடிய காதலியின் அயர்ந்த உறக்கம் அவளின் கண் அசைவு உள்ள தூக்கத்தைக் குறிப்பதாக இருக்கிறது. (ஆழ்ந்த உறக்கம் கண் அசைவு இல்லா தூக்கமாகும்) வள்ளுவர் அப்போதே கண் அசைவுள்ள தூக்கத்தில் கனவு வருவதை தெளிவுபடுத்தி இருக்கிறார். மேலும் இக்கனவில் காதலன் தூதுடன் வரும் காட்சி படமாக்கப்பட்டிருப்பதைக் கூறுவதாக அமைத்திருக்கிறது.

குறள் : 1212

“கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு

உயலுண்மை சாற்றுவேன் மன்“

தூக்கம், கண் அசைவு இல்லா தூக்கம், கண் அசைவு உள்ள தூக்கம் என இரு வகைப்படும். முதலில் கண் அசைவுகள் இல்லாத தூக்கம் ஆரம்பித்து லேசான தூக்கத்தில் தொடங்கி, நான்கு நிலைகளில் உறக்க நிலையை அடைந்து, அடுத்து கண்ணசைவு உள்ள தூக்கம் ஏற்படுகிறது. இதில் கனவுகள் அதிகம் ஏற்படுகிறது. இவ்வாறு இவை இரண்டு தூக்க நிலையும் 90 - 120 நிமிடங்களுக்கு ஒரு முறை மாறி மாறி ஏற்படுகின்றன. இதுபோன்று ஓர் இரவில் 4 - 6 முறை இவ்வகை தூக்க வட்டம் நடைபெறுகிறது. கண் விழிக்கிற அதிகாலை நேரம் நெருங்க நெருங்க கண் அசைவு தூக்கம் அதிக நேரம் இருக்கக்கூடியதாக இருக்கிறது.

இக்குறளில் காதலி நினைக்கிறாள், தான் விரும்பும்போது என் கண்கள் தூங்குமானால் அப்போது என் கனவில் வரும் காதலனுக்கு நான் தப்பி பிழைத்திருப்பதைச் சொல்வேன் என்பதாகும். இக்குறலில் தான் வேண்டும்போது தூங்குமானால் என வள்ளுவர் கூறியிருப்பது, தூங்கத் தொடங்கும்போது, முதல் நிலைகளாக உள்ள கண் அசைவற்ற தூக்க நிலையைக் குறிப்பிடுகிறார். கண் அசைவற்ற தூக்க நிலையிலும் கனவு வரும் என்ற தற்போதைய மூளை நரம்பியல் கனவு பற்றிய ஆய்வை வள்ளுவன் கோடிட்டு அப்போதே காட்டி இருக்கிறார்.

எப்போதும் கண் அசைவற்ற தூக்கத்தில் தங்களின் கடந்த கால எண்ணங்கள், நினைவுகள் தொடர்பான கனவுகள் (More Abstruct) சுருக்கமானதாகத் தொடர்ச்சியாக இல்லாமல் (Less Narrative) மீண்டும் நினைவு கூரத்தக்கதாக உணரப்படும். இதை வெள்ளை கனவு (White Dream) எனக் கூறுவர். ஏனெனில் இக்கனவில் கனவு அனுபவத்தை உணர்ந்து மீண்டும் நினைவுபடுத்த (Recall) முடியும். இத்தகைய தன்மையையே வள்ளுவர் குறள் 1212இல் கூறியிருக்கிறார்.

குறள் : 1213

“நனவினால் நல்கா தவரைக் கனவினால்

காண்டலின் உண்டென் உயிர்“

தன் நேரில் (நனவில்) வந்து கண்டு அன்பு பாராட்ட காதலனை அவள் அனுதினமும் நினைத்துக் கொண்டே இருப்பது, அவளின் மூளையின் ஞாபகப் பதிவு பகுதியில் பதிந்துவிட்ட நிலையில், அவனை அவள் எண்ணிக் கொண்டே தூங்கச் செல்வதால் அவன், அவளின் கனவில் தோன்றி மகிழ்வதாக இக்குறள் கனவில், மூளையின் முக்கிய பங்கை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

குறள் 819

“கனவிலும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு”.

பொருட்பாலில் தீ நட்பு அதிகாரத்தில் கனவிலும் என தொடக்கச் சொல்லாக வள்ளுவர் குறள் 819இல், தம் செயலும், சொல்லும் வேறாக இருப்பவர்கள் பற்றி நல்லொழுக்கம் உள்ளவர்கள் அவர்கள் செயல்பற்றி நனவில் மட்டும் அல்லாமல் கனவிலும் அவர்கள் பற்றி பார்த்தது துன்பமானதாகிறது என்பது பொருள்.

ஒருவர் ஆழ்மனதில் தாங்கிக்கொள்ள முடியாத நிகழ்வுகள், மூளையில் ஆழமாக ஞாபக மூளைப் பகுதியில் பதிவாகிறதால், அந்நிகழ்ச்சி தொடர்பானவைக் கனவுகளில் தோன்றி துன்பப்பட வைக்கின்றன என்ற மூளை நரம்பியல் கனவு பற்றிய தற்போதைய கண்டுபிடிப்பை அப்போதே வள்ளுவர் கோடிட்டு காட்டி இருக்கிறார்.

டாக்டர் எம்.ஏ. அலீம்

குறள் 1054

“இரத்தலும் ஈதலே போலும் கரத்தில்

கனவிலும் தேற்றாதார் மாட்டு”

தன்னிடம் உள்ள செல்வங்களைக் கனவில்கூட மறைத்து வாழத் தெரியாதவரிடம் ஒரு வறியவர் இரந்து கேட்பதும் ஈதலைப் போலவே சிறந்ததாகும். நம் எண்ணங்கள், செயல்கள் யாவும் கனவில் ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும் ஓர் ஈகை குணம் கொண்ட ஒருவனின் கனவில் அவன் பெற்ற செல்வங்களை மறைத்து வைப்பது போன்று கனவில்கூட காணத நல் உள்ளம் கொண்டவரிடம் யாசகம் கேட்பது ஈகை போன்றது எனக் கனவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறிவியல் அடிப்படையில் வள்ளுவர் இக்குறளில் குறிப்பிடுகிறார்.

திருக்குறளில் அதிகாரம் 122இல் நனவினால் என்னும் வார்த்தை மட்டும் தொடக்கச் சொல்லாக ஐந்து முறை வருகிறது. இது போன்று ஆற்றின, இன்பம் என்னும் சொற்களும் ஐந்து முறை வருவது குறிப்பிடத்தக்கது. இது போன்று கனவினுக்கு (1211), கனவினார் (1213), கனவினால் (1214) கனவுந்தான் (1215) கனவினாற் (1216), கனவினான் (1217), கனவினாற் (1219), கனவினாற் (1220) என கனவுக்கு அதிகாரம் கொடுத்ததுடன் கனவு பற்றிய கருத்துணர்வுக்கு 10 குறள்கள் தந்ததுடன், கனவு தொடர்பான வார்த்தைகள் 8 இடங்களிலும் பொருட்பாலில் கனவினும் (819) எனக் கனவு பற்றி தொடக்கச் சொல்லாக தீ நட்பு அதிகாரத்திலும், இரவு அதிகாரத்தில் (1054) கனவினும் என இரண்டு முறை வள்ளுவர் பயன்படுத்தியிருப்பது கனவு பற்றி சங்ககால இலக்கிய நூல்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளதை, நாம் வள்ளுவன் வழியாக மூளை நரம்பியல் அறிவியல் அடிப்படை உண்மைகளோடு உணர முடிகிறது.

கட்டுரையாளர்: மூளை நரம்பியல் நிபுணர், திருச்சி

தொடர்புக்கு: drmaaleem@hotmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x