Published : 14 Jul 2018 09:58 AM
Last Updated : 14 Jul 2018 09:58 AM
எனக்கு வயது 50. கடந்த ஓராண்டாக நெஞ்சில் எரிச்சலும் வலியும் வந்து கஷ்டப்படுகிறேன். அவ்வப்போது அல்சர் மருந்துகளைச் சாப்பிட்டுச் சமாளித்து வந்தேன். சமீபத்தில் நெஞ்சுவலி தாங்க முடியாத அளவுக்குச் சென்றுவிட்டதால், எண்டாஸ்கோப்பி பரிசோதனை செய்து கொண்டேன். அதில் ‘ஹயாட்டல் ஹெர்னியா’ (Hiatal hernia) என்று வந்துள்ளது. இதற்கு மருந்துகள் எடுத்துக்கொள்வதைவிட உணவுமுறையைச் சரி செய்துகொள்வதுதான் உதவும் என்று கூறிவிட்டனர். இந்த நோய் குறித்து நான் கேள்விப்பட்டதில்லை. என் குடும்ப நண்பர்கள் கூகுளில் இது தொடர்பாகப் பார்த்துவிட்டு, இதற்கு ஆபரேஷன் உள்ளது என்கின்றனர். அப்படி இருந்தால், நான் அந்த ஆபரேஷனைச் செய்துகொள்ளலாமா?
- கே. மஞ்சுளாதேவி, மன்னார்குடி
உடலில் வயிற்றையும் நெஞ்சையும் இரண்டாகப் பிரிப்பது ‘உதரவிதானம்’ (Diaphragm) என்னும் தடிமனான சவ்வு. நாம் சாப்பிடும் உணவு, உணவுக்குழாய் வழியாக இரைப்பையை அடைகிறது. இந்த உணவுக்குழாய் உதரவிதானத்தில் உள்ள ஒரு சிறு துளை (Hiatus) வழியாகச் செல்கிறது. உதரவிதானத்தில், இந்தத் துளையைச் சுற்றி, உணவுக்குழாயை ஒட்டி, வட்டமான ரப்பர் பேண்டைப் போட்டது போல ஒரு சிறிய சவ்வுப்படலம் அமைந்துள்ளது. இது, இந்தத் துளை பெரிதாகிவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இதனால், உணவுக்குழாயும் இரைப்பையும் இணையும் பகுதி உதரவிதானத்துக்குக் கீழே வயிற்றில் இருக்கிறது. இந்தச் சவ்வுக்கு விரிந்து சுருங்கும் தன்மை இருப்பதால், உணவுக்குழாயில் உணவு வரும்போது, விரிந்து கொடுத்து, உணவு இரைப்பைக்குச் செல்ல வழி கொடுக்கிறது.
இந்த இயல்பான அமைப்பில் பிழை உண்டாகும்போது பிரச்சினை ஆகிறது. எப்படி? வயதாக ஆக இந்தச் சவ்வு பலவீனமாகிறது. அல்லது வேறு சில காரணங்களால் இது வயதான சல்லடைபோல் தொங்கிவிடுகிறது. அப்போது மேற்சொன்ன இடைத்துளை பெரிதாகிவிடுகிறது. இதன் விளைவால், இரைப்பையின் மேற்பகுதியில் கொஞ்சம் இந்தத் துளை வழியாக நெஞ்சுக்குள் புகுந்துகொள்கிறது. இந்த நிலைமையைத்தான் ‘இரைப்பை ஏற்றம்’ (Hiatal hernia) என்கிறோம்.
இதில் பல நிலைகள் உண்டு. ஆரம்பத்தில் இந்தப் பகுதி நெஞ்சுக்குள் புகுவதும் மீண்டும் வயிற்றுக்குள் திரும்புவதுமாக இருக்கும். இது ‘நழுவும் இரைப்பை ஏற்றம்’ (Sliding Hiatal hernia). இந்தப் பாதிப்புதான் 100-ல் 95 பேருக்கு இருக்கும். இது இருப்பது பலருக்குத் தெரியாமலேகூட இருப்பதுண்டு. வேறு ஆரோக்கியப் பிரச்சினைகளுக்காக நெஞ்சை எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் எடுக்கும்போது அல்லது இரைப்பையை எண்டாஸ்கோப்பி பரிசோதனை செய்யும்போது இது இருப்பது தெரியவரும்.
மற்றொரு வகை இருக்கிறது. இதுதான் பெரிதும் பிரச்சினை கொடுப்பது. ஆரம்பத்தில் வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் நழுவிக்கொண்டிருந்த இரைப்பையின் மேற்பகுதி, ஒரு கட்டத்தில் வயிற்றுக்குத் திரும்பாமல், நெஞ்சுக்குள்ளேயே நிலையாக இருந்துவிடும். இந்த நிலைமைக்கு ‘இடமாறு இரைப்பை ஏற்றம்’ (Para - oesophageal hiatal hernia) என்று பெயர். இந்த நிலைமை தொடருமானால், இரைப்பையின் சிறு பகுதி நெஞ்சுக்குள் முறுக்கிக்கொள்ளவும் (Volvulus) வாய்ப்புண்டு. இதுதான் இந்தப் பாதிப்பின் மோசமான கட்டம்.
யாருக்கு வருகிறது?
இது வருவதற்கு முதுமை ஒரு காரணம் என்றாலும், இன்னும் சில காரணிகள் இதற்குத் துணைபோகின்றன. இடைச்சவ்வானது பிறவியிலேயே பலவீனமாக இருந்தால், இது குழந்தைக்கும் ஏற்படுவது உண்டு. அடுத்து, அதிக உடல் எடை கொண்டவர்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் வயிற்றுக்குள் அழுத்தம் அதிகரிப்பதால், இந்த இடைச்சவ்வு பலவீனமடைந்து, இந்தப் பாதிப்பு ஏற்பட வழிவிடும். மலச்சிக்கல் கடுமையாக இருப்பவர்களுக்கும், விபத்து போன்றவற்றால் வயிற்றில் கடுமையாக அடிபட்டவர்களுக்கும் இது ஏற்படுவதுண்டு.
என்ன அறிகுறிகள்?
உணவைச் சாப்பிட்டதும் நெஞ்சில் எரிச்சல் (Heartburn) ஏற்படும். மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைச் சாப்பிட்டால், உடனே நெஞ்சு முழுவதும் எரியும். வழக்கமாக, பெண்கள் சாப்பிட்ட பின்பு வீட்டைச் சுத்தம் செய்கிறேன் என்று குனிந்து நிமிர்ந்து வேலை செய்வார்கள். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து, அமிலம் மேலேறி, நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும். இவற்றோடு ஏப்பம், குமட்டல், வாந்தி போன்ற தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும்.
முதல் வகை இரைப்பை ஏற்றம் உள்ளவர்களுக்கு இந்த அறிகுறிகள் அவ்வப்போது தோன்றி மறையும். இரண்டாம் வகையினருக்கு இவை தொடர்ந்து தொல்லைப்படுத்தும். இந்தப் பாதிப்பின் மோசமான கட்டத்தில் நெஞ்சுவலி கடுமையாக இருக்கும். மாரடைப்பு வந்துவிட்டதுபோல் பயமுறுத்தும். குழந்தைகளுக்குப் பிறவியிலேயே இது இருந்தால், அடிக்கடி சளி பிடிக்கும்.
என்ன பரிசோதனை செய்வது?
அடிக்கடி நெஞ்சில் எரிச்சல் ஏற்பட்டால், தொடக்கத்திலேயே ‘கேஸ்ட்ரோ எண்டாஸ்கோப்பி’ (Gastro endoscopy), நெஞ்சு மற்றும் வயிற்று சி.டி. ஸ்கேன், இ.சி.ஜி. (ECG) ஆகிய பரிசோதனைகளைச் செய்து காரணம் தெரிந்துகொள்ள வேண்டும்.
சிகிச்சை என்ன?
இரைப்பை அல்சருக்குத் தரப்படும் மருத்துவ சிகிச்சைதான் இதற்கும் தரப்படுகிறது. இதை மருத்துவர் கூறும் கால அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியது முக்கியம். பாதிப்பு கடுமையாக உள்ளவர்களுக்கு லேப்ராஸ்கோப் முறையில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுவதும் உண்டு. ஆனால், இது எல்லோருக்கும் பலன் தரும் என்று உறுதிகூற முடியாது. எனவே, யாருக்கு அறுவைசிகிச்சை செய்வது என்பதை மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
தடுப்பது எப்படி?
தேவைக்குச் சாப்பிடுங்கள்.
அதிகச் சூடாக எதையும் சாப்பிடாதீர்கள்.
காரம், மசாலா கலந்த, எண்ணெய் மிகுந்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பேறிய உணவைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
ஒரே நேரத்தில் வயிறு நிறையச் சாப்பிடுவதைவிட மூன்று மணி நேர இடைவெளியில் சிறிது சிறிதாகச் சாப்பிடலாம்.
காபி, தேநீர், சாக்லேட், சிட்ரஸ் பழங்கள், தக்காளி, வாயு நிரப்பப்பட்ட பானங்கள், கோலா பானங்கள் வேண்டாம்.
சாப்பிட்ட பின் குனிந்து வேலை செய்யக் கூடாது. கனமான பொருளைத் தூக்கக் கூடாது.
சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்லுங்கள். அப்போதுகூட படுக்கையின் தலைப்பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடிவரை உயர்த்திக்கொள்வதும், இடது புறமாகத் திரும்பிப் படுப்பதும் நெஞ்செரிச்சலைக் குறைக்கும்.
புகையிலை, பான்மசாலா ஆகாது. புகைப்பிடிப்பதும் மது அருந்துவதும் ஆகவே ஆகாது.
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.
மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.inமுகவரி: நலம், நலமறிய ஆவல்,
நலம் வாழ, இந்து தமிழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT