Published : 26 Apr 2025 12:01 PM
Last Updated : 26 Apr 2025 12:01 PM

உயிரணுக்களின் பந்தயம்: வெல்லப் போவது யார்?

மனித இனம் தோன்றிய நாளிலிருந்தே பந்தயங்களும் தோன்றிவிட்டன. உடல் வலிமை, மன வலிமை, மகிழ்ச்சி ஆகியவற்றைத் தாண்டி, சுயமுன்னேற்றத்திற்கும் சமுதாய முன்னேற்றத்திற்குமான முக்கிய முனைப்பாகப் பந்தயங்கள் உள்ளன. பொதுவாக, பந்தயத்தின் நுணுக்கங்களை எல்லாம் கற்றுத் தெளிந்து, பந்தயப்பொருளை எப்போதும் தனது கட்டுப் பாட்டிற்குள் வைத்திருக்கும் மனிதனுக்கு இந்தப் புதுமுகம் மிகப்பெரிய சவாலை அளிக்க உள்ளது.

அவனால் கட்டுப் படுத்தவோ, பயிற்றுவிக்கவோ முடியாத, ஆனால் அவனுள்ளேயே உற்பத்தியாகி உறைந்திருக்கும் அவனது உயிரணுக்களான விந்தணுக்கள்தான் இப்போதைய பந்தயப் புதுமுகம். ‘Sperm Racing’ எனப்படும் விந்தணுக்களின் பந்தயம், உலகிலேயே முதன் முதலாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் புகழ்பெற்ற ஹாலிவுட் பலேடியம் அரங்கில் UCLA, USC எனும் இரு பல்கலைக்கழகங்களுக்கு இடையில் கிட்டத்தட்ட 5,000 பார்வை யாளர்களுடன் கடந்த ஏப்ரல் 25 அன்று அரங்கேறியது.

இந்தப் புதிய பந்தயத்திலும் மற்ற விளை யாட்டுப் பந்தயங்களைப் போலவே நுழைவுக் கட்டணம், தொலைக்காட்சி - சமூக வலைத்தள ஒளிபரப்பு, பிரத்யேக வர்ணனையாளர்கள், விளம்பரங்கள், பத்திரிகையாளர் சந்திப்பு.. அவ்வளவு ஏன் சியர் கேர்ள்ஸ் - பெட்டிங் போன்றவைகூட இடம்பெற்றன.

இந்தச் செய்தி சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், இதில் நுணுக்கமாக மாற்றுச் சிந்தனைகளும் புதைந்துள்ளன. அவை குறித்து நாம் உரையாடும் முன், ஆண் இனப்பெருக்க அறிவியல் - ஆரோக்கியம் குறித்த சில தகவல்களை அறிந்து கொள்வோம்.

லட்சக்கணக்கில்... மனித இனம் தழைக்க வேண்டி, ஒவ்வோர் ஆணின் விதைப்பைகளிலும் லட்சக்கணக்கில் உற்பத்தியாகும் ஆண் உயிரணுக்களான விந்தணுக்கள், அவன் பருவமடைந்தது முதல் அவனது வாழ்நாள் முழுவதும் கருவுறத் தேவையான அளவு வெளியேறும் என்பதுதான் இயற்கையின் அமைப்பு.

அப்படி ஒவ்வொரு முறையும் ஆரோக்கியமான ஓர் ஆணிடமிருந்து, இயல்பான உடலுறவின்போது 2 - 20 கோடி வரை விந்தணுக்கள் வெளியேறும். கண்ணுக்குத் தெரியாத இந்த விந்தணுக்களில் பெண்ணின் இனப்பெருக்கப் பாதையில் பதிந்து, அவற்றில் நீந்திச்செல்லும் ஆற்றல் மிக்க ஆயிரக்கணக்கான விந்தணுக்கள் மட்டும், நிமிடத்திற்கு 5 செ.மீ. வேகத்தில் கருப்பைவாய், கருப்பை, கருக்குழாய் என 20 செ.மீ. வரை நீண்டதொரு பயணத்தை மேற்கொள்ளும்.

இறுதிச் சுற்றில் நூற்றுக் கணக்கான விந்தணுக்களாகக் குறைந்து, இறுதியாக ஒற்றை விந்தணு மட்டுமே தனக்கான இணையான கருமுட்டையுடன் கூடி, கருக்கட்டல் (fertilization) எனும் நிகழ்வை நிகழ்த்தி, பந்தயத்தில் வெற்றி பெறுகிறது. உண்மையில் வெறும், 50-60 மைக்ரான்கள் அளவே இருக்கும் தலைப் பிரட்டை போன்ற உருவமைப்பு கொண்ட மிகச்சிறிய விந்தணுதான் ஆணின் மரபணுக்களையெல்லாம் சுமந்து, தனது அடுத்த சந்ததி உருவாக, 50% காரணமாக உள்ளது.

எண்ணிக்கை மட்டுமன்றி, ஒவ்வொரு விந்தணுவின் தலை, கழுத்து, உடல் - வால் பகுதிகளின் உருவமைப்பு முறையாக இருப்பதும், இன்னும் குறிப்பாக முன்னோக்கிய அசைவுத்திறன் அவற்றிற்கு இருப்பதும், கருமுட்டை நோக்கிய விந்தணுவின் பயணத்தை முழுமையடையச் செய்கின்றன. இவையனைத்தும் சேர்ந்தது தான் ஆண் இனப்பெருக்க ஆரோக்கியம்.

ஆரோக்கியமான ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்தது 1.5-2 கோடிக்கும், அவற்றின் அசைவுத்திறன் 40%க்கு மேலாகவும், உருவ அமைப்பு 4%க்கு மேலாகவும் இருப்பது அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த அளவுகள் குறையும்போது, பெண்ணின் இனப்பெருக்க மண்டலமும் அதன் சுரப்புகளும் விந்தணுக்களை எதிரிகளாகப் பாவித்து அவற்றை அழித்துவிடுகின்றன அல்லது வெளியே தள்ளிவிடுகின்றன என்கின்றனர்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை: உண்மையில், இந்த இனப்பெருக்க ஆரோக்கியத்தின் மூல வித்து, ஆணின் முழுமையான உடல் நலனிலும் மன நலனிலும்தான் உள்ளது. ஆனால், சமீபகாலமாக வாழ்க்கை முறை மாற்றங்கள், குறிப்பாக ஆரோக்கியமற்ற உணவு முறைகள், உடற்பயிற்சியின்மை, உறக்கமின்மை, மன அழுத்தம், இனப்பெருக்க நோய்த்தொற்றுகள், உடல் பருமன், பணிச்சூழல், கூடிவரும் ஆணின் வயது, புகைபிடித்தல், மது - போதைப்பழக்கம், சுற்றுச்சூழல் மாசு எனப் பற்பல காரணங்களால் விந்தணுக்களின் எண்ணிக்கை, தரம், செயல்பாடு கள் ஆகியவை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன.

இதில் இரு முக்கியக் காரணங்களை நாம் இங்கே குறிப்பிட்டுக் கூற வேண்டியுள்ளது. முதலாவது, பணிச்சூழல் தரும் உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை மற்றும் அதிக வெப்பமான சூழலில் பணிபுரிதல். பொதுவாக ஆணின் விரைகளுக்கும் அவற்றில் உற்பத்தி யாகும் விந்தணுக்களுக்கும் உடலின் வெப்பத்தைக் காட்டிலும் ஓரிரு சென்டிகிரேட் வெப்பம் குறைவாக இருப்பது மிகவும் அவசியம். ஆனால், இன்றைய கணினிசூழ் பணிச்சூழல், இறுக்கமான ஆடைகளும் திறன்பேசிகளும் அதற்கு எதிராக இயங்கி, விந்தணுக்களைக் குறைத்துவருகின்றன என்பதுதான் உண்மை.

செயல்திறனைப் பாதிக்கும் பிளாஸ்டிக்: அடுத்து, உண்ணும் உணவிலும் பருகும் நீரிலும் சுவாசிக்கும் காற்றிலும் வாழும் மண்ணிலும் என மனித வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்ட, 'எண்டோக்ரைன் டிஸ்ரப்டர்கள்' எனும் மறைமுக வேதிப் பொருள்கள் உண்டாக்கும் எதிர்வினைகள்.

நமது அன்றாட உபயோகப் பொருள் களான சோப்பு, ஷாம்பு, பவுடர், வாசனை திரவியங்கள், பேக்கேஜிங் உறைகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், உணவு ஊட்டப் பொருள்கள், சிகரெட், புகை, செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள், வாகனம் - தொழிற்சாலை மாசு, தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அனைத்து பிளாஸ்டிக் உபயோகப் பொருள்கள் என நமது தேவைகளுக்காக நாம் உண்டாக்கியவற்றில் உள்ள மறைமுக வேதிப்பொருள்கள் நமது உடலுக்குள் செல்லும்போது, அவை நமது எண்டோக்ரைன் ஹார்மோன்களைப் போலவே நடித்து நமது செல்களில் உள்ள ஹார்மோன் ஏற்பிகளைத் தம்வசப்படுத்தி ஹார்மோன்களின் செயல்திறனைப் பாதிக்கின்றன.

இதனால், ஹார்மோன் பாதிப்புகள் தொடங்கிப் புற்றுநோய்கள்வரை ஏற்பட வழிவகுக்குகிறது. அப்படி, ஆண்களின் டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்களையும், அதன்வாயிலாக விந்தணுக்களின் எண்ணிக்கையையும் செயல்திறனையும் குறைத்து, குழந்தைப்பேறின்மையையும் அதிகளவில் ஏற்படுத்தி வருகின்றன.

குறையும் விந்தணுகள்: 1970கள் தொடங்கி இன்றுவரை ஆண்டுக்கு 1.2% என்கிற விகிதத்தில் நாளுக்கு நாள் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. கண்ணுக்குத் தெரியாத இந்த இனப்பெருக்க ஆரோக்கியக் குறைபாடு, தலைமுறைகள் தாண்டும்போது சரிசெய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தி, மனித இன அழிவிற்கேகூட வழிவகுக்கலாம் என்றும் மருத்துவ அறிவியல் நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது. ஊரெங்கும், உலகெங்கும் அதிகரித்துவரும் செயற்கைக் கருத்தரிப்பு நிலையங்களின் தேவையும் அவசியமும் நமக்கு இப்போது நன்கு விளங்குகிறது.

வேதிப்பொருள்களால் குறையும் வேகம்: இயற்கையுடன் இயைந்த உணவு முறைகள், வலிமை சேர்க்கும் உடற் பயிற்சிகள், சரியான உறக்கம், கேஃபைன், மது, புகை, போதைப் பழக்கங்களைத் தவிர்த்தல், மன அழுத்தத்தைக் குறைத்தல் போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும். இவற்றுடன் பணிச்சூழல் மற்றும் எண்டோ க்ரைன் டிஸ்ரப்டர்களின் உபயோகத்தை இயன்றவரை தவிர்ப்பதும் ஓரளவு பலனளிக் கும். ஆனால், அதற்கு விழிப்புணர்வு அவசியம். அப்படியொரு விழிப்புணர்வு சார்ந்த நிகழ்வுதான், அமெரிக்காவில் நடைபெற்ற உலகின் முதல் விந்தணுப் பந்தயம். பெண்ணின் இனப்பெருக்க அமைப்பைப்

பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு நுண்ணிய பாதையில் மேற் கொள்ளப்படும் இந்த விந்தணு பந்தயம், முகமறியா விந்தணுக்களின் ஆரோக்கியம் சார்ந்த பந்தயம் மட்டுமல்ல.. இனப்பெருக்க ஆரோக்கியத்தைச் சரியான தடத்தில் எடுத்துச் செல்ல அழைப்புவிடுக்கும் பந்தயமும்கூட! மனிதனால் பயிற்றுவிக்க முடியாத பந்தயப் பொருள்தான் இது என்றாலும், மனிதனின் முழுமையான ஆரோக்கியம், இதன் வெற்றிப் பாதைக்கு நிச்சயம் வித்திடும்.

இன்றளவும், குழந்தைப்பேறின்மை என்றாலே பெண்களை மட்டுமே பொதுவாகக் கைகாட்டும் இச்சமுதாயத்தில், அதில் சரிபங்கு காரணம் வகிக்கும் ஆண்கள் குறித்தும், அவர்களின் விந்தணுக்களின் ஆரோக்கியம் குறித்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது இந்தப் புதுமுகப் பந்தயம். தயக்கம் தாண்டி விழிப்புணர்வு பெறுவோம்.

- கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்; savidhasasi@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x