Published : 25 Apr 2025 03:19 PM
Last Updated : 25 Apr 2025 03:19 PM
உலகம் முழுவதும் வெகு வேகமாக அதிகரித்து வரும் குறைபாடுகளில் ஆட்டிசம் மிக முக்கியமானது. இந்தியாவில் 160 பேரில் ஒரு குழந்தை ஆட்டிசம் குறைபாட்டால் பாதிப்பு அடைவதாக ஆய்வு கூறுகின்றது. இவ்வாறு ஆட்டிசம் குறைபாடால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.
ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதான், பெற்றோர்களின் சரியான கவனிப்பின் மூலம் அவர்களை திறமைசாலிகளாக மாற்றமுடியும் என என்கின்றனர் நிபுணர்கள். எந்தக் காரணத்தினால் இந்த ஆட்டிசக் குறைபாடு ஏற்படுகிறது என்பதே கண்டறியப்படாமல் இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல குறைகளுடன் இருந்தாலும் ஏதோ ஒரு அதீத திறனுடன் இருப்பார்கள். அந்தத் திறனை வெளிக் கொணர்வது சிறந்த பயிற்சியின் மூலமும் பெற்றோர்களின் கவனத்திலுமே உள்ளது என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆட்டிசம் என்பது ஒரு வகையான மூளை வளர்ச்சி குறைபாடு. இதனால் உரையாடலிலும், சமூகத்தில் மற்றவர்களுடனும் கலந்து பழகுவதிலும் பெரும் பாதிப்புகள் உருவாகும். அந்த குழந்தைகள் செய்ததையே மீண்டும் மீண்டும் செய்வார்கள். இவர்கள் தன்னையறியாமல் இதை செய்யும் நிலைக்கு ஆளாவார்கள். குழந்தைக்கு மந்தமான வளர்ச்சி மைல்கல் (Developmental Delay) இருக்கும்.
குழந்தைகளுக்கு, ஆட்டிசம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றாலும், சராசரியாக ஒரு வயது வரை ஆட்டிசத்தைக் கண்டறிவது கடினமாக இருக்கும். 1 முதல் 3 வயதுள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு சில அறிகுறிகளை வைத்து நாம் ஆட்டிசம் இருப்பதை கண்டறிகிறோம். இவற்றை ஆட்டிசத்திற்கான சிகப்பு கொடிகள் எனலாம்.
அறிகுறிகள்
* கைகளால் சுட்டிக் காட்டுதல் (pointing), தலையசைத்தல் (nodding) போன்ற சைகைகள் குறைந்த அளவில் இருக்கும்.
* மழலை மொழி (babbling) பேசாமை
* இயல்புக்கு மாறான சப்தம் எழுப்புதல்
* நன்கு தெரிந்த சொற்களை மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பது போன்றவற்றை கவனிக்கலாம்.
*குழந்தைகளும் சமூக தொடர்பும்
*மற்றவர் கண்களை உற்றுநோக்குவதில் (eye contact) சிரமம்
*அடுத்தவர் செய்வதை பின்பற்றுவதில் ஆயாசம்
* தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த சிரமப்படுதல்
*தங்கள் பெயரிட்டு அழைக்கும் போது பதிலளிக்காமை
* ஆட்டிசம் குழந்தைகளின் கவனத்தை ஈர்ப்பதில் நமக்கு ஏற்படும் சிரமம்
குழந்தையின் செயல்பாடுகள்
* விரல்கள், கைகள், மற்றும் உடலை இயல்புக்கு மாறாக அசைப்பது.
*செய்ததையே/ சொன்னதையே மீண்டும் மீண்டும் செய்வது/ சொல்வது.
*அற்பமான விஷயங்களின் மேல் மிகுந்த கவனம் செலுத்துவது
* உணவு பழக்கம்.
* தினமும் ஒரே வகையான உணவை மட்டுமே விரும்புவது. வேறு எந்த உணவையும் புறந்தள்ளுவது
காரணம் என்ன?
நவீன மருத்துவத்தில் ஆட்டிசம் பிரச்சனைக்கு காரணம் திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்படவில்லை. நவீன ஆராய்ச்சிகளை வைத்துப் பார்க்கும் போது மரபு வழியாகவும், மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய பல்வேறு காரணிகளாலும் இது நிகழலாம். கருவுற்றிருந்த தாயின் வயது, கர்ப்பக்காலத்தில் தாயின் உணவு, கர்ப்பிணியின் உடல் எடை, கர்ப்பிணியின் உடல் மன ஆரோக்கியமின்மை, மன அமைதியின்மை, எதிர்மறை எண்ணங்கள், தீய பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தல், மனவேதனையுடன் இருத்தல் ஆகியவை ஆட்டிசம் ஏற்படுவதற்கான காரணங்கள். முக்கியமாக, சித்த மருத்துவத்தில் அடிப்படையாகக் கருதப்படும் வளி, அழல், ஐயம் என்ற மூன்றும் பாதிக்கப்பட்டு, சமநிலை கேடு அடைவதால், குழந்தைகளின் உடலிலும் மனத்திலும் ஏற்படும் பிரச்சனை ஆட்டிசத்துக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
சிகிச்சைகள்
ஆட்டிசம் பிரச்சினை கொண்ட ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறு விதமான சவால்களைச் சந்திக்கிறது. இதன் காரணமாக, ஆட்டிசம் நிபுணர்கள் சேர்ந்து அந்தக் குழந்தைக்குச் சிறந்த பலன்தரக்கூடிய சிகிச்சை எது என்று தீர்மானித்து அதனைத் தொடர்ந்து செயல்படுத்துவார்கள். செயல் சார்ந்த சிகிச்சை, புலன் ஒருங்கிணைப்பு சிகிச்சை, பேச்சு சிகிச்சை, இசைச் சிகிச்சை, படங்களைப் பரிமாறிக்கொள்ளும் அமைப்பு சிகிச்சை, ஆரம்பத் தலையீட்டுச் சிகிச்சை, பெற்றோருக்கான பயிற்சி போன்று பல்துறை வல்லுநர்கள் வழங்கும் ஒருங்கிணைந்த சிகிச்சை தற்போது நடைமுறையில் பின்பற்றப்படுகிறது.
சித்த மருத்துவ புற சிகிச்சை
ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறுக்கு (ASD) நவீன மருந்துகள் மற்றும் நடத்தை சிகிச்சைகள் முக்கியமாக பயன்படுகின்றன. ஆனால் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவம், இது போன்ற கோளாறுகளுக்கு ஒரு முழுமையான (Holistic) அணுகுமுறையை வழங்குகிறது. இதில் உணவு பழக்கங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள், மூலிகை சிகிச்சைகள் மற்றும் வெளி சிகிச்சைகள் அடங்கும். மேலும் சித்த மருத்துவத்தில் ஆட்டிசத்திற்கான புற மருத்துவ சிகிச்சை பற்றி காண்போம்:
சித்த மருத்துவமத்தின் படி, ஆட்டிசம் வாதம் (Vatham) மற்றும் பித்தம் (Pitham) மற்றும் கபம் ஆகிய மூன்று சமநிலையின்மை காரணமாக ஏற்படுகிறது.
1. தொக்கணம் (Thokkanam) – தேய்த்து பிசைப்பு சிகிச்சை
மருந்து எண்ணெய்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மசாஜ் சிகிச்சை.
நன்மைகள்:
மனஅழுத்தம், கவலை குறைக்கும்
இயக்கத் திறனை மேம்படுத்தும்
நல்ல உறக்கம் தரும்
பயன்படும் எண்ணெய்கள்: வாத சஞ்சீவி தைலம் – நரம்பு வலுப்பெற மற்றும் மன அமைதிக்கு
புகை சிகிச்சை (Pugai – Herbal Fumigation Therapy)
மூலிகை புகை மூலம் சுவாச உறுப்புகளை தூண்டி மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் சிகிச்சை.
பேச்சுத் திறனை ஊக்குவிக்கும்
கவனக் குறைவு, கோபத்தைக் கட்டுப்படுத்தும்
பயன்படும் மூலிகைகள்:
சம்பிராணி (Benzoin Resin) – மனஅமைதி தரும்
மஞ்சள், வேம்பு – மூளையைத் தூண்டும் பண்பு கொண்டவை
பொடிதிமிர்த்தல் (Podithimirthal – Herbal Powder Massage)
மூலிகை பொடிகளை தேய்த்து செய்யப்படும் சிகிச்சை.
நன்மைகள்:
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்
உணர்வுப் பெருக்கம் (Sensory Modulation) மேம்படும்
பயன்படும் மூலிகைகள்:
வாசம்பு (Acorus Calamus) – பேச்சுத் திறனை மேம்படுத்தும்
கொட்டை கரண்டை (Hygrophila Auriculata) – உறக்கம் மேம்படும்
தப்பளம் – (தலை எண்ணெய் மசாஜ்)
மூலிகை எண்ணெய்கள் கொண்டு தலைக்கு மசாஜ் செய்யும் சிகிச்சை.
நன்மைகள்:
கவனம், நினைவாற்றல் அதிகரிக்கும்
கோபம், மனஅழுத்தம் குறையும்
பயன்படும் எண்ணெய்கள்:
பிராமி தைலம் – மூளையை ஊக்குவிக்கும்
சீரக தைலம்- மன அமைதிக்காக பயன்படுத்தலாம்
நசியம் (Nasiyam – மூக்கு வழி சிகிச்சை)
மூக்கு வழியாக மூலிகை எண்ணெய்கள் அல்லது நெய் செலுத்தும் சிகிச்சை.
நன்மைகள்:
பேசும் திறனை மேம்படுத்தும்
உணர்வுப் பெருக்கத்தை சீர்செய்யும்
பயன்படும் நாசியம்
பிராமி நெய் – மூளையை ஊக்குவிக்கும்
ஒற்றடம் (Ottradam – Herbal Hot Compress Therapy)
மூலிகை போடிகள் மற்றும் சூடான மூலிகை கட்டிகளால் செய்யப்படும் சிகிச்சை.
நன்மைகள்:
தசை வலி குறைக்கும்
உணர்வுப் பெருக்கத்தை மேம்படுத்தும்
பயன்படும் மூலிகைகள்:
வெட்டிவேர், சந்தனம் – உடலை குளிர்விக்க உதவும்
இச்சிகிச்சைகளை சித்த மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு மட்டுமே சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.
குழந்தையின் உணர்வுப் பதில்களை கவனமாகப் பார்க்க வேண்டும். உணவு, யோகா, நடத்தை சிகிச்சைகளுடன் இணைத்து மேற்கொள்ளலாம்.
சித்த புற மருத்துவ சிகிச்சைகள் ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு இயற்கையான முறையில் ஆட்டிசம் குறிகுணங்களை குறைக்க உதவியாக இருக்கலாம். நரம்பியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, உணர்வுப் பெருக்கத்தை சமநிலைப்படுத்த, மற்றும் உடல்-மன அமைதியை வழங்க, இந்த சிகிச்சைகள் உதவுகின்றன. பரிந்துரைக்கப்பட்ட உணவுமுறை, யோகா, வர்மம் மற்றும் நடத்தை மாற்றங்களுடன் இணைந்து மேற்கொண்டால், சிறந்த பலன்களைப் பெறலாம்.
- கட்டுரையாளர், சித்த மருத்துவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT