Published : 12 Apr 2025 05:21 PM
Last Updated : 12 Apr 2025 05:21 PM
பார்கின்சன் நோய் (Parkinson's disease) அல்லது பீ.டி. அல்லது நடுக்குவாதம் என்பது நரம்பு மண்டலத்தைச் சிதைக்கும் ஒரு நோய். மூளையில் ‘டோபோமைன்’ என்கிற ரசாயன குறைபாட்டால் இது ஏற்படுகிறது. இந்நோய் முதியவர்களிடம் காணப்பட்டாலும் 40 - 60 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் என இருபாலருக்கும் இந்நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.
1817இல் ஜேம்ஸ் பார்கின்சன் என்பவர்தான் இந்நோயைக் கண்டறிந்தார். எனவே அவருடைய பெயரிலேயே பார்க்கின்சன் நோய் என்று அழைக்கப்பட்டு வருகிறது. பார்க்கின்சனால்பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் மேற்கொள்ளும் பணிகளிலிருந்தே அறிகுறிகளை அறிந்து கொள்ள முடியும். எந்த ஒரு பொருளையும் கையால் சரியாகப் பிடிக்க முடியாமல் தடுமாறுவார்கள், டம்பளரில் ஒரு கப் தண்ணீரையோ, தேனீரையோ கையில் பிடிக்க முடியாமல் கை நடுங்கும். இவற்றைக் குடிப்பதிலும் மிகவும் சிரமப்படுவார்கள். தினசரி அத்தியாவசிய வேலைகளைக் கூட செய்ய முடியாமல் தவிப்பார்கள். குறிப்பாகப் பற்றி நடப்பதில் சிரமம் இருக்கும். உடல் வளைந்தது போல காணப்படுவார்கள்.
பர்க்கின்சன் நோய் உள்ளவர்களுக்கு இயல்பான வேகத்தில் செயல்பட முடியாது. மயக்கம், நடுக்கம் ஏற்படும். நடக்கும்போதும், உட்கார்ந்து எழும் போதும் தள்ளாடுவார்கள். சாதாரணமாக அமர்ந்து இருக்கும்போதேகூட கை, கால்கள், உதடுகள் நடுங்கும். இதனால் உட்கார்ந்து எழும்போது முன்புறம் அல்லது பின்பக்கம் விழுவதுபோல் எழுவர். 60 வயதை தாண்டும்போது வழக்கத்திற்கு மாறாக மெதுவாக முதியவர்கள் தங்களுடைய வேலைகளை செய்வார்கள். பேச்சில் தடுமாற்றமும் தெரியும்.
இந்தியாவில் இந்நோய் லட்சம் பேரில் 15 முதல் 43 பேருக்கு ஏற்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. பார்க்கின்சன் நோய் பற்றிய விழிப்புணர்வு மேலை நாடுகளில் 18-ம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் பலருக்கும் இந்நோய் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிற இயக்கக் கோளாறுகளினால், பாதிக்கப்பட்ட நபரும் அவருடைய குடும்பமும் எதிர்கொள்ளும் சிக்கல் சவாலானது.
இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒருவிதமான கூச்ச உணர்வு இருக்கும். நோயின் தன்மையால் சமூகத்தில் தனக்கு அவச்சொல் ஏற்படுமோ என்று அச்சப்படுவார்கள். ஏனெனில், கை, கால்கள் நடுக்கம் இருந்துகொண்டே இருப்பதால் அதை பார்க்கும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணுவார்கள். உணவு சாப்பிடும்போது சிதறும். பொதுஇடத்தில் சாப்பிட யோசிப்பார்கள். முகத்தில் கலவையான எந்த உணர்வையும் வெளிப்படுத்த முடியாமல் போய்விடும். இந்தக் காலத்தில் இணையத்தில் நோய் பற்றி படித்து பார்த்துவிட்டு, மற்றவர்களின் பரிகாசத்துக்கு ஆளாகிவிடுவோமோ என்கிற பயத்தில், தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சிரத்தையுடன் மறைக்க முயற்சிப்பார்கள். இவை எல்லாமே நோயாளிகளுக்குக் கூடுதல் அழுத்தம் ஆகிவிடும்.
பார்க்கின்சன் நோயாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் சிகிச்சையும் கவனிப்பும் தேவைப்படும். எனவே, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்தைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும். மருந்து உட்கொள்வதைத் தவிர்த்தால் நோயின் தீவிரம் அதிகரிக்கும். பாதிக்கப்பட்டவர்களை வெளியே அழைத்துச் செல்லும்போது அவர்கள் மேல் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல அவர்களை எங்கும் தவிர்க்கவும் கூடாது. வெளியூர்களுக்கு பயணம் செய்ய வேண்டி இருந்தால், அவர்களைப் பாதுகாப்பாக கூடுதல் கவனத்தோடு அழைத்துச் செல்ல வேண்டும்.
இந்த நோயைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். அதற்கு முறையாக மருந்து, மாத்திரைகளை நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். தொடக்கத்திலேயே இந்நோயைக் கண்டுபிடிப்பது குணப்படுத்தவும் உதவும். இந்த நோய்க்கான மேம்பட்ட மருந்து, மாத்திரைகளும் சிகிச்சைகளும் மருத்துவமனைகளில் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் இந்த நோய்க்கான சிகிச்சைகள், பரிசோதனைகள், மருந்துகள் இலவசமாகவே கிடைக்கின்றன.
பார்க்கின்சன் நோயைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஏப்.11 அன்று உலக பார்க்கின்சன் நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT