Last Updated : 19 Aug, 2014 12:00 AM

 

Published : 19 Aug 2014 12:00 AM
Last Updated : 19 Aug 2014 12:00 AM

மிரட்டும் வைரஸ்கள்: தற்காப்பு சாத்தியமா?

ஊர் முழுக்க கொள்ளை நோய் பரவி வருவதைக் கண்டு மிரண்டு போன கண்கள்... பொது இடங்களில் பச்சை நிற முகமூடியை அணிந்த அச்சம் தோய்ந்த முகங்கள்... லேசான காய்ச்சல், இருமல், ஜலதோஷத்துக்குக்கூடப் பரிசோதனை மையங்களுக்குப் படையெடுக்கும் மக்கள் கூட்டம்... மெக்சிகோ உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள்... இதெல்லாமே நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பாக நிகழ்ந்த காட்சிகள். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

இந்தக் காட்சிகளுக்குக் காரணம்? மெக்சிகோவில் பீதி கிளப்பிப் பரவிய ‘ஸ்வைன் புளூ’ எனப்படும் பன்றிக் காய்ச்சல்தான். அப்போது இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளும் அந்தக் காய்ச்சலைக் கண்டு பதறி அலறின.

பயங்கர நோய்

தற்காப்பு சாத்தியமா? எபோலா வைரஸ் எச்சரிக்கை அன்றைக்கு ஸ்வைன் ஃபுளூ, இன்றைக்கு அதைவிட பயங்கரமான ‘எபோலா’ வைரஸ். மேற்கு ஆப்பிரிக்காவில் லைபீரியா, கினியா, சியரா லியோன், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் பரவிவரும் இந்தப் பயங்கரமான தொற்றுநோய்க்கு, சுமார் ஆயிரம் பேர் மடிந்துவிட்டார்கள். இன்னும் ஏராளமானோருக்கு நோய்த் தொற்று பாதிப்பு இருக்கிறது.

நோய்த் தொற்று மிகத் தீவிரமாக இருப்பதால் பாதிக்கப்பட்ட பகுதி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள்கூட வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். லைபீரியா, கினியா, சியரா லியோன் நாடுகளின் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டுள்ள இந்த நோய், உலகின் மற்ற இடங்களுக்கும் பரவலாம் என உலக சுகாதார நிறுவனம் அபாய எச்சரிக்கையை அறிவித்துள்ளது.

என்ன காரணம்?

எபோலாவோ, பன்றிக் காய்ச்சலோ எதுவாக இருந்தாலும் சரி, வைரஸ் தொற்று நோய்கள் எப்படிப் பரவுகின்றன? இதுபற்றி பொதுநல மருத்துவர் எழிலன் என்ன சொல்கிறார்?

"கிருமிகள் மூலம் பரவும் நோய்கள் சளி, ரத்தம், மனிதக் கழிவுகள் மூலமே மனிதர்களுக்குப் பரவுகின்றன. நோயால் பாதிக்கப்பட்டவரை மிகவும் நெருக்கமாக அணுகுவதன் மூலமும் நோய் தொற்றலாம்.

இதுதவிர, பூச்சிகள் மூலம் பரவும் நோய்களும் உள்ளன. நோயால் பாதிக்கப்பட்டவரைக் கடிக்கும் கொசு மற்றவர்களைக் கடிப்பதன் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா நோய்கள் பரவுகின்றன.

பொதுவாகத் தமிழ்நாட்டில் சுகாதாரம் இரண்டாம்பட்சமாகவே கருதப்படுகிறது. மேலை நாடுகளில் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தி, அதன் மூலம் நோய்களைத் தடுக்கிறார்கள். ஆனால், நம் ஊரில் அப்படியில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பதிலாக, நோய் வந்த பிறகு மருந்து மாத்திரை கொடுத்து, அதைச் சரி செய்யவே முயற்சிக்கிறோம். நோய்க்குக் காரணமான அடிப்படையை எதுவும் செய்வதில்லை. வரும் முன் காக்க முயற்சிப்பது பற்றி கவனமில்லை. நோய் வந்த பிறகே முயற்சிக்கிறார்கள்," என ஆதங்கப்படுகிறார் எழிலன்.

எப்படித் தடுப்பது?

அப்படியென்றால் தொற்றுநோய் களை எப்படித் தடுப்பது? அதற்கு வழியே இல்லையா என்ற கேள்வி எழலாம். தொற்று நோய் தாக்கப் படாமல் தடுத்துக்கொள்ளும் பொறுப்பு நம் கையில்தான் உள்ளது.

"பொது இடங்களில் எச்சில் துப்புவதன் மூலமும், சிறுநீர் கழிப்பதன் மூலமும் பல நோய்கள் பரவுகின்றன. சாதாரணமாக நாம் துப்பும் சளி மூலம் டி.பி. எனப்படும் காச நோய் அதிவேகமாகப் பரவுகிறது. நிமோனியா பரவுகிறது.

மழை நீர் தேங்குவதன் மூலமோ, குப்பை சேருவதன் மூலமோ உற்பத்தியாகும் கொசுக்கள் டெங்கு, மலேரியா போன்ற நோய்களைப் பரப்புகின்றன. இதைத் தடுக்க வேண்டுமென்றால் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

எப்படிச் சிறு வயதில் குழந்தைகளுக்குச் சாமி கும்பிடக் கற்றுக் கொடுக்கிறோமோ, அதுபோலச் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளக் கற்றுக் கொடுக்க வேண்டும். பொது இடங்களில் சிறுநீர் கழிக்கக் கூடாது, எச்சில் துப்பக் கூடாது, குப்பை கொட்டக் கூடாது என்று சொல்லித் தர வேண்டும்.

இதற்குப் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் முன்வர வேண்டும். கடுமையான சட்டங்கள் மூலம் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சுத்தமான குடிநீர், முறையான கழிவுநீர் அகற்றுதலை முறைப்படி பராமரித்தால் கிருமிகள் மூலம் பரவும் தொற்று நோய்களைத் தடுக்க முடியும்" என்கிறார் மருத்துவர் எழிலன்.

நமக்கு என்ன ஆபத்து?

சரி, எபோலாவுக்கு வருவோம். எப்படிக் கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு நம் ஊரில் பரவுகிறதோ, அதுபோலவே ஆப்பிரிக்காவில் உள்ள குரங்குகள், வவ்வால்கள் மூலமே எபோலா நோய் மனிதர்களுக்குப் பரவியதாகக் கருதப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் வெளியேற்றும் எச்சில், சிறுநீர், ரத்தம் மூலம் கிருமிகள் இன்னொருவருக்குப் பரவுகின்றன. இந்நோயால் பாதிக்கப்பட்டவரை அணுகுவதன் மூலமும் பரவுகிறது.

ஒரே ஒரு ஆறுதல் இந்த நோய் இந்தியாவில் பரவ வாய்ப்புகள் குறைவு என்பதுதான். தும்மினாலோ, இருமினாலோ பன்றிக் காய்ச்சல் நோய் காற்றில் பரவும் அபாயம் இருந்தது. இந்தியாவில் அப்போதிருந்து பருவ காலநிலையும் நோய் பரவ வசதியாக இருந்தது.

அதேநேரம், எபோலா நோயைப் பரப்ப வாய்ப்புள்ள குரங்குகள், வவ்வால்கள் இந்தியாவில் இல்லை. பரவினால், அது மனிதர்கள் மூலமே நிகழ வேண்டும். ஆப்பிரிக்காவில் இருந்து வரும் நபர்களை விமான நிலையம், துறைமுகம் ஆகிய பகுதிகளில் கண்காணித்தாலே போதும் என்ற நிலையே இதில் நீடிப்ப தாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

முன்னேற்பாடுகள்

எபோலா நோயைத் தடுக்கத் தமிழக சுகாதாரத் துறை பல நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகக் கூறுகிறார் திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை மூளை நரம்பியல் நிபுணர் எம்.ஏ. அலீம். "மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா நோய் தாக்கம் தெரிய ஆரம்பித்தவுடனேயே, இந்நோய் குறித்து சுகாதாரத் துறை மூலம் கருத்து பரிமாற்றம் மேற் கொள்ளப் பட்டு வருகிறது.

எபோலா நோய் மட்டுமல்ல, பொதுவாகச் சீசனில் வரும் தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகத் தனி வார்டுகள் அமைத்து, தனியாக வைத்துச் சிகிச்சை அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் எபோலா நோய் பாதிப்பு இல்லை என்பதால், அது குறித்துப் பெரிய கவலை தேவையில்லை" என்கிறார் அலீம்.

பன்றிக் காய்ச்சலோ, எபோலாவோ எந்தத் தொற்றுநோயாக இருந்தாலும் சரி, நமது சுய சுத்தத்தையும், சுற்றுப் புற சுகாதாரத்தையும் சரியாகப் பராமரித்தலே தொற்று நோய் பரவலைத் தடுக்கலாம். எல்லாமே நம் கையில்தான் இருக்கிறது.

எழிலன் | அலீம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x