Published : 09 Jun 2018 11:32 AM
Last Updated : 09 Jun 2018 11:32 AM
கே
ரளத்தின் பேராம்பிராவில் 28 வயது கட்டிடக்கலை நிபுணர் முகமது சாலிஹ், உடல்நலம் குன்றி மே 17-ம் தேதி அதிகாலை இரண்டு மணிக்கு கோழிக்கோடு பேபி நினைவு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவருக்கு வாந்தியுடன் உச்சபட்ச காய்ச்சலும் இருந்தது. மனரீதியாகவும் கொந்தளிப்பாக இருந்தார்.
தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவரான ஏ.எஸ். அனூப் குமாருக்கு, இந்த அறிகுறிகள் மூளைக்காய்ச்சலுக்கானவை என்று தெரிந்திருந்தது. மூளைத்திசுவில் தோன்றும் எரிச்சல் காரணமாகத் தோன்றும் மூளைக்காய்ச்சலால் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் மரணமடைகின்றனர். சாலிஹின் நிலையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அவர் முயற்சியெடுத்தார். ஆனால் காலை ஒன்பது மணிக்கு நரம்பியலாளர்கள் பரிசோதனை செய்தபோது, சாலிஹுவுக்கு வந்திருக்கும் பிரச்சினை இன்னும் மோசமானது என்று தெரியவந்தது.
உயர்தர சிகிச்சையளிக்கப்பட்ட போதும், சாலிஹின் நிலைமை மோசமாகிக் கொண்டே போனது. அவருக்கு மருத்துவம் பார்த்த நரம்பியல் மருத்துவர்களில் ஒருவரான செல்லன்டன் ஜெயகிருஷ்ணன், சாலிஹிடம் மிகப் பிரத்யேகமான அறிகுறிகளை கண்டார். நிமிடத்துக்கு 180 முறை இதயம் படபடத்துக் கொண்டிருந்தது. ரத்த அழுத்தமும் அதிகமாக இருந்தது. கை, கால்கள் மரத்துப் போயிருந்தன. மூளைக்காய்ச்சல் கண்டவரிடம் காணமுடியாத அறிகுறிகளாக அவை இருந்தன.
கொசுவால் தோன்றும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வீட்டுக்கு ஒருவரை மட்டுமே தாக்கக்கூடியது. ஆனால் சாலிஹின் தம்பி சபித், 12 நாட்களுக்கு முன்னர் இதேபோலக் காய்ச்சல் வந்து இறந்து போயிருந்தார். அத்துடன் சாலிஹின் தந்தை, அத்தை ஆகியோருக்கும் காய்ச்சல் இருந்தது. அதனால், ரேபிஸ் தொற்றாக இருக்கச் சாத்தியமில்லை என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வந்தனர்.
கேரளம் இதுவரை அறிந்திராத புதுமையான வைரஸாக அது இருக்கக்கூடும் என்று நரம்பியல் மருத்துவர்கள் முடிவுக்கு வந்தனர். அனூப் குமார், கர்நாடகத்தில் உள்ள ‘மணிபால் வைரஸ் ஆய்வு நிலைய’த்தைச் சேர்ந்த வைரஸ் நிபுணர் கோவிந்தகர்னவர் அருண்குமாரைத் தொடர்புகொள்ள முடிவுசெய்தார். கோழிக்கோட்டிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் அந்த ஆய்வகத்துக்கு சாலிஹின் ரத்தம், சிறுநீர், திசு மாதிரிகள் அனுப்பப்பட்டன.
அருண்குமார் (47), வினோதமான மூளைக்காய்ச்சல் தொற்றுகளை ஆய்வு செய்வதில் அனுபவம் கொண்டவர். இந்தியாவின் 10 மாநிலங்களில் 40 காய்ச்சல் நுண்ணுயிர்களை ஆய்வு செய்த அனுபவம் கொண்ட அவர், ஆபத்து நிறைந்த நிபா வைரஸையும் ஆராய்வதற்காகக் காத்திருந்தார்.
மலேசியாவில் தோன்றிய நிபா
முதன்முதலில் மலேசியாவில்தான் 1998-ல் நிபா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. டெரோபஸ் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தின்னி வவ்வால்களிலிருந்து அந்த வைரஸ், வளர்ப்புப் பன்றிகளுக்குப் பரவியிருக்க வேண்டுமென்று நம்பப்படுகிறது. இந்தப் பன்றிகளிடமிருந்து பன்றிகளை வளர்ப்பவர்களுக்கு இந்த வைரஸ் பரவி, படிப்படியாக 105 பேரைக் கொன்றது.
அடுத்து வங்கதேசத்துக்குப் பயணித்த நிபா, 15 இடங்களில் பரவியது. நிபா நுண்ணுயிர் வங்கதேசத்தில் பரவிய முறை வித்தியாசமானது. வவ்வாலின் சிறுநீர், எச்சில் கலந்த நுங்கைச் சாப்பிட்டவர்களுக்கு இது பரவியது. வங்கதேசத்தில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் இறந்தனர். மலேசியாவிலோ பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர்தான் மரணத்தைத் தழுவினார்கள்.
சாலிஹின் பரிசோதனை மாதிரிகளை மே 18-ம் தேதி அருண்குமார் பரிசோதிக்கத் தொடங்கினார். ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸ், ஹெர்பஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ், லெப்டோஸ்பிரா பாக்டீரியா தொற்றால் இந்தக் காய்ச்சல் வரவில்லை என்ற முடிவுக்கு வந்தார். ஒரே நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரையும் தாக்கும் ஒரே நுண்ணுயிரென்றால், அது நிபாவாகத்தான் இருக்குமென்று நினைத்தார்.
பேபி நினைவு மருத்துவமனையிலிருந்த மருத்துவர்களும் பல்வேறு மருத்துவ ஆய்விதழ்களை ஆராய்ந்து, 1998-ல் மலேசியாவில் நிபாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் அறிகுறிகளைப் பற்றிப் படித்த பின்னர், சாலிஹுவுக்கு நிபா வைரஸே தொற்றியிருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்திருந்தனர். ஒரு வைரஸின் மரபணுப் பண்பைத் தெரிந்துகொள்ளும், ரியல் டைம் பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (Real Time Polymerase Chain Reaction RT-PCR) சோதனையை அருண்குமார் செய்தார். சாலிஹின் தந்தையும் அத்தையும் நிபாவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
கோழிக்கோட்டில் 19 பேரிடம் தொற்றிய நிபா வைரஸ் 17 பேரின் உயிரைப் பறித்துள்ளது. இறப்பு விகிதம் 89 சதவீதம். நிபா ஏற்படுத்திய பீதியால் பேராம்பிராவைச் சேர்ந்த பலரும் வீடுகளிலிருந்து வெளியேறிவிட்டனர். நிபா வைரஸ் பரவும் செய்திகள் காட்டுத்தீயாகப் பரவ, ‘எண்-95’ முகமூடிகள் கோழிக்கோடு முழுவதும் தெரியத் தொடங்கின. வவ்வால்கள் பாதி சாப்பிட்டு, கீழே விழுந்த பழங்கள் வழியாக வைரஸ் பரவும் என்ற செய்தியால் பழ விற்பனை பாதிக்கப்பட்டது.
இதுபோன்ற காய்ச்சல் தொற்று ஏற்படும்போது உடனடியாக அதற்கான காரணத்தைக் கண்டறிவது இந்தியா போன்ற நாடுகளில் மிகவும் அரிது. நிபாவால் ஒரு நபர், ஒரு குடும்பத்தில் இறந்த நிலையில், இரண்டாவது நபருக்கு வந்த காய்ச்சலுக்கான காரணம் கோழிக்கோட்டில் கண்டுபிடிக்கப்பட்டது போன்ற நிகழ்வும் மிக அரிதானதே.
மாநில அரசின் வேகம்
மணிபால் வைரஸ் ஆய்வு மையத்தினர், நிபா வைரஸின் கேரள வருகையை உறுதிசெய்தவுடன் உலக சுகாதார நிறுவனத்துக்கு முறைப்படி தகவல் தரப்பட்டது. புனேயிலுள்ள ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி’ மையமும் மறுஉறுதி செய்த பின்னர், குறிப்பிட்ட அறிகுறிகள் உள்ள நோயாளிகளை உடனடியாகத் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டது.
சாலிஹ், பேபி நினைவு மருத்துவமனைக்கு வந்து சில மணி நேரத்துக்குள் கோழிக்கோடு மாவட்ட மருத்துவ அதிகாரியான வி. ஜெயஸ்ரீ, பூச்சியியல் வல்லுநர் குழுவொன்றை ஒருங்கிணைத்து சாலிஹின் வீட்டுக்கு அனுப்பினார். அங்குள்ள கொசு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
மே 20-ம் தேதி பரிசோதனை முடிவுகளை அருண்குமார் பகிர்ந்தபோது, ஏற்கெனவே மாநில மருத்துவ அமைப்புகளும் அரசு மருத்துவர்களும் முழுமையாகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். மாநில சுகாதார அமைச்சர், கே.கே. ஷைலஜா கோழிக்கோடில் முகாமிட்டிருந்தார். மே 20-ம் தேதி காலை, எபோலா காய்ச்சல் நடைமுறைகளில் அனுபவம் பெற்ற ஒரு அதிகாரி மருத்துவர்களைச் சந்தித்து தொற்றுக் கட்டுப்பாடு நடவடிக்கைகளையும், அறுவைசிகிச்சை முகமூடிகள் பயன்பாடு, சுத்திகரிப்புப் பணிகளையும் ஒருங்கிணைத்தார். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் இது மின்னல் வேக நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை.
கேரள அரசின் இத்தனை உறுதியான நடவடிக்கைகளுக்கு அப்பாலும், நிபா வலுவான எதிரியாக நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தவே செய்தது. சாலிஹின் தம்பி சபித் தான் முதலில் நிபாவால் பாதிக்கப்பட்டவர். அவர்தான் ‘பேஷண்ட் ஸீரோ’.
பிளம்பர் வேலை பார்க்கும் சபித்துக்கு 26 வயது. மே 3-ம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பேராம்பிரா தாலுகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவருடைய நிலைமை வேகமாக சீர்குலைந்தது. மே-5-ம் தேதி அவர் சுயநினைவை இழந்தார். அவரது குடும்பத்தினர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு அவரை மாற்றினர். அன்றிரவே சபித் காலமானார். ஆனால் பேராம்பிரா தாலுகா மருத்துவமனையிலும் மருத்துவக் கல்லூரியிலும் அவரைப் பார்க்க வந்த அண்டை வீட்டார்கள், பராமரித்த தாதியர்களில் 17 பேரை காய்ச்சல் தொற்று பாதித்தது.
அப்படி பாதிக்கப்பட்ட நோயாளிகளில் ஒருவர் மே 17-ம் தேதி பாலுசேரி தாலுகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர் மூலம் இன்னொருவருக்கு பாலுசேரி மருத்துவமனையில் இரண்டாம் அலை நிபா தொற்றியது. இருமல், தும்மலின்போது வெளியேறும் உடல் திரவம் வழியாகவே நிபா வைரஸ் பரவுகிறது. நோயாளிகளால் கூடுதல் வைரஸ் பரவும். பேபி நினைவு மருத்துவமனையில் தொற்றைக் கட்டுப்படுத்தக் கடுமையான நடைமுறைகள் இருந்ததால், தொற்று தடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பாலுசேரி மருத்துவமனையில் நிபா தொற்ற ஆரம்பித்த போதுதான் மாநில நிர்வாகம் இரண்டாவது அலை நிபா தொற்றுக்குத் தயாரானது. மே 20-ம் தேதிக்குள் தொற்றுக் கட்டுப்பாடு நடைமுறைகள் அங்கே தொடங்கப்பட்டுவிட்டன. நிபா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட 19 பேருடன் தொடர்புகொண்ட ஆயிரத்து 400 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். மிகவும் தீவிரமான காய்ச்சல் வந்த நோயாளிகளுக்கு ஒரு மீட்டருக்கும் குறைவான தொலைவில் உள்ளவர்களிடம் மட்டுமே நிபா வைரஸ் தொற்றக் கூடியது. அந்தத் தொலைவைத் தாண்டி. அதன் செயல்திறன் மிகவும் குறைவு. நோயாளிகளுடன் சேர்ந்து உறங்குவது, பாத்திரங்களைப் பகிர்வது போன்ற நடைமுறைகள் இருக்கும் நிலையில், நிபா வைரஸ் அதிகம் தொற்றும் சூழ்நிலை ஏற்படுகிறது.
சாலிஹின் குடும்பத்தைப் பொறுத்தவரை கேரள அரசின் அசாதாரண நடவடிக்கைகூட, அவர்களுக்கு எந்த ஆறுதலையும் தரவில்லை. மூன்று வாரங்களில் அந்தக் குடும்பம் நான்கு உறுப்பினர்களை இழந்தது.
நீடிக்கும் ‘தோற்ற’ மர்மம்
கேரளத்தில் முதலில் நிபாவால் பாதிக்கப்பட்ட சபித்துக்கு எப்படி அந்த வைரஸ் தொற்றியது என்பது இன்னமும் மர்மமாகவே நீடிக்கிறது. கோழிக்கோட்டில் பெருந்தொகையிலுள்ள பழந்தின்னி வவ்வால்களே இதற்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த வவ்வால்களே மலேசியாவிலும் வங்கதேசத்திலும் நிபா வைரஸ் தொற்றுக்குக் காரணமாக அமைந்தவை.
புனேயைச் சேர்ந்த நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜியைச் சேர்ந்த இரண்டு ஆய்வாளர் குழுக்கள் கோழிக்கோடு நகரில் தங்கி பழந்தின்னி வவ்வால் மாதிரிகளைச் சேகரித்து வருகின்றனர். பழந்தின்னி வவ்வால்களுக்குள் பரவும் நிபா வைரஸ், அவற்றின் உடலில் வெகுநேரம் தங்குவதில்லை. தொற்று நோயிலாளர் ஜோனாத்தன் எப்ஸ்டின், நோய் தொற்றிய வவ்வால்களிடம் அந்தப் பாதிப்பு நீண்ட நேரம் இருப்பதில்லை என்கிறார்.
மே 3-ம் தேதி சபித்திடம் வைரஸ் தொற்றை ஏற்படுத்திய பழந்தின்னி வவ்வாலைச் சோதனை செய்தால், அதில் அந்த வைரஸ் இல்லாமல் இருப்பதற்கான சாத்தியமே அதிகம். நிபா வைரஸை எதிர்க்கும் சக்தி, அந்தப் பாலூட்டிகளிடம் இருக்கலாம். அதை உறுதிப்படுத்த அதிக எண்ணிக்கையிலான வவ்வால்களிடம் பரிசோதனை செய்வது அவசியம்.
உயரமான இடங்களில் வசிக்கும் பழந்தின்னி வவ்வால் ஒன்றின் சராசரி எடை ஒரு கிலோ. அதன் இறக்கை அகலம் ஐந்தடி. அதனால் அவற்றைப் பிடிப்பதும், அத்தனை எளிதான காரியமில்லை. கோழிக்கோடு மாவட்ட விலங்குப் பண்ணைப் பிரிவினர் வவ்வால்களின் கழிவையும் சிறுநீரையும் தரையிலிருந்து சேகரிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கேரளத்தில் பருவமழை தொடங்கியுள்ளது. போதுமான பரிசோதனை மாதிரிகள் இல்லாமல், கேரளத்துக்கு நிபா வைரஸ் எப்படி வந்தது என்பதற்கான தடயங்களைக் கண்டறிவது அத்தனை சுலபமல்ல.
சபித் வசித்த பேராம்பிரா வீட்டினருகில் வசிக்கும் மூன்று மாணவர்கள், சபித்துடன் சேர்ந்து வவ்வால் கடித்த மாம்பழங்களையும் கொய்யாப் பழங்களையும் பகிர்ந்து சாப்பிட்டதை நினைவுகூர்கின்றனர். இனி அதைப் போலச் சாப்பிடுவீர்களா என்று கேட்டதற்கு, “மாட்டோம்” என்று பீதியுடன் பதிலளித்தனர்.
நன்றி: தி இந்து (ஆங்கிலம்)
தமிழில்: ஷங்கர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT