Last Updated : 09 Jun, 2018 11:30 AM

 

Published : 09 Jun 2018 11:30 AM
Last Updated : 09 Jun 2018 11:30 AM

நலம், நலமறிய ஆவல் 38: கண்ணாடிக்கு மாற்று கான்டாக்ட் லென்ஸ்?

என் மகள் கல்லூரியில் படிக்கிறாள். பார்வையில் பிரச்சினை உள்ளது. கண்ணாடி போடச் சொல்லி மருத்துவர்கள் ஆலோசனை சொன்னார்கள். கண்ணாடி போட்டுக்கொள்ள அவள் கூச்சப்படுகிறாள். கண்ணாடிக்குப் பதிலாக ‘கான்டாக்ட் லென்ஸ்’ போட்டுக்கொள்ளலாம் என்று சிலர் மாற்று யோசனை சொல்கிறார்கள். அதற்கு அதிக செலவாகும் என்கிறாள் என் மகள். ‘கான்டாக்ட் லென்ஸ்’ குறித்து எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. அதனால், என் மகள் விஷயத்தில் என்னால் யோசனை கூறமுடியவில்லை. ‘கான்டாக்ட் லென்ஸ்’ பற்றி விளக்கம் தந்தால் மகிழ்வேன்.

ந. மணிமாறன், காஞ்சிபுரம்.

கண்ணில் உள்ள லென்ஸில் பிரச்சினை ஏற்பட்டால், பார்வையில் கோளாறு வரும். அப்போது அதைச் சரி செய்வதற்காக கண்ணாடி போடச் சொல்வார்கள், கண் மருத்துவர்கள். ஆனால், ஒரு சிலர் கண்ணாடியைத் தவிர்க்க விரும்புவார்கள். அப்போது அவர்களுடைய பார்வைக் கோளாறை (Refractive Error) சரிப்படுத்துவதற்காக வழங்கப்படும் ஒரு மாற்றுத் துணைக் கருவிதான் ‘கான்டாக்ட் லென்ஸ்’ (Contact lens).

இது கண்ணில் இருப்பதே தெரியாத அளவுக்கு மெல்லிய பிளாஸ்டிக்கினால் ஆனது. கண்ணின் வெளிப்புறத்தில் வட்டமாக, கறுப்பாகத் தெரியும் கார்னியாவில் இதைப் பொருத்திக் கொள்வதன் மூலம் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, சிதறல் பார்வை, வெள்ளெழுத்து போன்ற பல்வேறு பார்வைக் குறைபாடுகளைச் சரிப்படுத்தி, தெளிவான பார்வையைத் தருகிறது.

இதன் தேவை என்ன?

பார்வைக் கோளாறுகளுக்கு மட்டுமன்றி, குறிப்பிட்ட சில வேலைகளில் இருப்பவர்களின் வசதி காரணமாகவும் ‘கான்டாக்ட் லென்ஸ்’ தேவைப்படுவதுண்டு. உதாரணமாக ஒளிப்படக் கலைஞர்கள், மைக்ராஸ்கோப்பைக் கையாள்கிறவர்கள், விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள் போன்றோருக்கு கான்டாக்ட் லென்ஸ் தேவைப்படுகிறது. குழந்தைகளுக்கு கண்ணாடி ஏற்றுக்கொள்ளவில்லை எனும்போது, அவர்களுக்கும் இது தேவைப்படும். சில நோய்களின்போது, கண்ணாடிகளால் பார்வைக் குறைபாட்டைத் தீர்க்க இயலாது எனும் நிலையில், இதுதான் கைகொடுக்கும்.

இன்னும் சிலர் அழகு, புறத்தோற்ற மாற்றத்துக்காகவும் கான்டாக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்துகின்றனர். எடுத்துக்காட்டாக நடிகர், நடிகைகள் திரைப்படக் காட்சிகளில் தோன்றும்போது இதைப் பயன்படுத்துவதுண்டு. அழகுப் போட்டி, திருமணம் போன்றவற்றுக்காகத் தற்காலிகமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். பெண்கள் தாம் அணியும் ஆடைகளுக்குப் பொருத்தமாக இருப்பதற்காக, பல வண்ணங்களில் கிடைக்கும் கான்டாக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்துவது மேல்நாடுகளில் வழக்கம். தற்போது இந்த நாகரிகம் இந்தியாவிலும் பரவுகிறது.

வகைகள் உண்டு!

கண்ணில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு ஏற்ப கான்டாக்ட் லென்ஸ்களைப் பொருத்துவது வழக்கம். இதற்கு உதவும் வகையில் பலதரப்பட்ட கான்டாக்ட் லென்ஸ்கள் உள்ளன. பார்வைக் கோளாறுகளுடன் கண்ணில் வேறு நோய்கள் ஏதேனும் இருந்தால் ‘சிறப்புத் தேவை கான்டாக்ட் லென்ஸ்கள்’ (Speciality Contact Lenses) மூலம் சரிப்படுத்துவது உண்டு. யாருக்கு, எதைப் பொருத்துவது என்பதைக் கண் மருத்துவர்தான் தீர்மானிக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கைகள்

முதலில், கான்டாக்ட் லென்ஸ்களுக்குச் சிறப்புப் பயிற்சி பெற்றுள்ள, தகுதியும் திறமையும் வாய்ந்த கண் மருத்துவரிடம் கண்களைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். இவற்றை அணிவதற்கு கண்ணாடிக் கடைகளில் கண் பரிசோதனைகளை மேற்கொள்ளக் கூடாது. கண்ணாடி அணிவதற்கான பரிசோதனைகளும், கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்கான பரிசோதனைகளும் வெவ்வேறானவை. கண்ணாடி அணிவதற்கான பரிந்துரையை வைத்து கான்டாக்ட் லென்ஸ்களைத் தேர்வு செய்ய முடியாது. ஒருவருடைய தினசரி வேலை, வாழ்க்கைமுறை போன்றவற்றையும் கவனத்தில் கொண்டு, அவருக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதான் அவருக்குப் பொருத்தமாக இருக்கும்.

உங்கள் மகளைப் பொறுத்தவரை பணச் செலவுக்குப் பயப்படுவதால், கான்டாக்ட் லென்ஸ்கள் வேண்டாம். ஆனால், கண்ணாடியை அவசியம் அணிய வேண்டும். இல்லாவிட்டால், கண்ணின் ‘பவர்’ அதிகமாகிவிடும். பிறகு, இப்போதுள்ள பவரைவிட அதிக பவரில் கண்ணாடி போட வேண்டி வரும். பவரைப் பொறுத்து கண்ணாடியின் தடிமன் கூடும். செலவும் அதிகரிக்கும். உடனே செயல்படுங்கள்.

‘நலம், நலமறிய ஆவல்’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு.கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.

பராமரிப்பது எப்படி?

# கான்டாக்ட் லென்ஸ்களை அணிவதற்கும் அகற்றுவதற்கும் சரியான வழிகளை வல்லுநரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

# அவற்றைப் பாதுகாக்கும் முறைகளையும் அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

# கான்டாக்ட் லென்ஸ்களை அணியும் முன்பும், கண்களிலிருந்து அவற்றை அகற்றும் முன்பும் கைகளைச் சுத்தமாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.

# கான்டாக்ட் லென்ஸ்களுடன் வழங்கப்பட்ட திரவத்தை அதற்கான குப்பியில் ஊற்றி, அதில் கான்டாக்ட் லென்ஸ்கள் மூழ்க வைத்து, தினமும் இரண்டு முறை சுத்தப்படுத்த வேண்டும்.

# கான்டாக்ட் லென்ஸ்களைப் பாதுகாக்கும் குப்பியை, அதைப் பாதுகாக்கும் திரவத்தால் வாரம் இரண்டு முறை சுத்தப்படுத்த வேண்டும்

# கான்டாக்ட் லென்ஸ்களைப் பாதுகாக்கும் குப்பியையும் அதைப் பாதுகாக்கும் திரவத்தையும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும்.

செய்யக்கூடாதவை

# கான்டாக்ட் லென்ஸின் வட்ட அமைப்பில் விரலை வைத்து எடுக்கக்கூடாது.

# கான்டாக்ட் லென்ஸை அணிந்துகொண்டிருக்கும்போது குளிப்பது, முகம் கழுவுவது, உறங்குவது ஆகியவற்றை மேற்கொள்ளக்கூடாது.

# கான்டாக்ட் லென்ஸ்களை நேரடியாக சூரியஒளியில் வைக்கக்கூடாது. அதுபோல் குளிர்சாதனப் பெட்டியிலும் அவற்றை வைக்கக்கூடாது.

# கான்டாக்ட் லென்ஸ்களை அணிந்திருக்கும்போது, அவற்றின்மீது எவ்வித கண் சொட்டுமருந்துகளையும் மருத்துவர் ஆலோசனையின்றி ஊற்றக்கூடாது.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை சென்னை - 600 002.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x