Last Updated : 05 May, 2018 10:51 AM

 

Published : 05 May 2018 10:51 AM
Last Updated : 05 May 2018 10:51 AM

சிரமம் தரும் சிறுநீர்ச் சுரப்பி!

என் வயது 55. சிறுநீர் கழிப்பதில் சில சிரமங்கள் இருந்தன. என் குடும்ப மருத்துவர் புராஸ்டேட் பிரச்சினை இருக்கலாம் எனத் தெரிவித்தார். மாத்திரைகளைக் கொடுத்திருக்கிறார். இதை எப்படிச் சரிப்படுத்தலாம்? மாத்திரை, மருந்துகளால் குணப்படுத்த முடியுமா? இல்லை, அறுவைசிகிச்சை தேவைப்படுமா? இது ஏன் வருகிறது? எனக்கு ரத்தக்கொதிப்பும் சர்க்கரை நோயும் இருக்கின்றன. இவற்றுக்கும் மாத்திரை சாப்பிட்டு வருகிறேன்.

- மா. குலசேகரன், சென்னை-6

ஆண்களின் அடிவயிற்றில் சிறுநீர்ப் பைக்குக் கீழே, சிறுநீர்ப் புறவழி தொடங்குகிற இடத்தில், சிறுநீர்ப் பையின் கழுத்தைச் சுற்றி, தசையாலான சுரப்பி ஒன்று உள்ளது. அதற்கு ‘புராஸ்டேட் சுரப்பி’ என்று பெயர்.

பொதுவாக, இளமைப் பருவத்தில் இது ஆரோக்கியமாகவே இருக்கும். வயது ஆக ஆக இது வீக்கமடையும். ‘பினைன் புராஸ்டேட்டிக் ஹைப்பர்பிளேசியா’ (Benign prostatic hyperplasia - BPH) என்று இதற்குப் பெயர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த வீக்கம் ஏற்படுவது மிகச் சாதாரணமானதுதான். முதுமையில் தலைமுடி நரைப்பதைப்போல இதுவும் முதுமையின் ஓர் அடையாளம் எனக் கருதப்படுகிறது. இருந்தாலும் ஒரு நோயாக மாறும்போது, பலருக்கும் இது பிரச்சினை தரும் உறுப்பாகக் கருதப்படுவதுண்டு. முக்கியமாக, இந்தச் சுரப்பி வீக்கமடைந்து சிறுநீர்ப் பையை அழுத்திச் சிறுநீரை வெளியேற்றுவதில் பிரச்சினையை உருவாக்கும்.

சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படும்போது, சிறுநீர்த் தாரை அடைத்துக்கொள்ளும்போது, சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகும்போது, புராஸ்டேட் சுரப்பியில் அழற்சி ஏற்படும்போது என மற்ற காரணங்களாலும் சிலருக்கு புராஸ்டேட் சுரப்பி வீங்கிக்கொள்ளலாம்.

அறிகுறிகள்

சிறுகச் சிறுகச் சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கும்போது தடை உண்டாவது, சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும்போது தயக்கம் ஏற்படுவது, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழித்து முடித்த பின்னரும் இன்னும் சிறுநீர் உள்ளதுபோன்று உணர்வது, மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றுவது, கடைசியில் சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் சொட்டுதல் போன்றவை இதன் அறிகுறிகள். இந்த அறிகுறிகளோடு சிறுநீரில் ரத்தம் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அது புராஸ்டேட் புற்றுநோயாக இருக்க வாய்ப்புண்டு.

சிகிச்சை என்ன?

சாதாரண புராஸ்டேட் வீக்கத்துக்குப் பயப்படத் தேவையில்லை. பெரும்பாலும், ஆரம்ப நிலையில் உள்ள வீக்கத்தை மருந்துகள் மூலமே குறைத்துவிடலாம். அப்போது அறிகுறிகளும் விடைபெற்றுக்கொள்ளும். ஒருவேளை அது மருந்துகளுக்குக் கட்டுப்படவில்லை எனும்போது, ‘டிரான்ஸ் யுரேத்திரல் ரிசக்சன் ஆஃப் புராஸ்டேட்’ (TURP) எனும் எளிமையான அறுவைசிகிச்சை மூலம் அல்லது இப்போது வந்துள்ள நவீன முறையான லேசர் சிகிச்சையின் மூலம் இந்த வீக்கத்தைக் குறைத்துவிடலாம்.

என்ன பரிசோதனை?

உங்களுக்குள்ள புராஸ்டேட் பிரச்சினையை உறுதிசெய்ய, வயிற்றை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். அப்போதுதான் புராஸ்டேட் எந்த அளவில் வீங்கியுள்ளது, அதன் நிலைமை என்ன, எந்த அளவுக்குச் சிறுநீர் போவதை அது தடுக்கிறது என்பது போன்றவற்றைத் தெரிந்துகொண்டு, மாத்திரைகள் மட்டும் போதுமா அல்லது அறுவைசிகிச்சை தேவைப்படுமா என்பதை உறுதிசெய்ய முடியும்.

உங்களுக்கு அறுவைசிகிச்சை தேவைப்பட்டால் நீரிழிவு, உயர் ரத்தஅழுத்தம் போன்றவற்றை நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான மேல் ஆலோசனைக்கு ஒரு சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணரை நீங்கள் சந்திப்பது நல்லது.

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை,சென்னை - 600 002.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x