Published : 14 Apr 2018 10:50 AM
Last Updated : 14 Apr 2018 10:50 AM
என் மனைவிக்கு மூக்கில் ‘பாலிப்’ என்ற சதை வளர்ச்சி கடந்த 4 வருடங்களாக இருக்கிறது. தற்போது என் மனைவிக்கு மூக்கு வழியாக சுவாசிக்க முடியவில்லை. வாய் வழியாகவே சுவாசிக்கிறார். வாசனை தெரியவில்லை என்கிறார். இதற்கு சித்தா, ஹோமியோ, அலோபதி என எல்லா வைத்தியங்களையும் செய்துபார்த்துவிட்டோம். அலோபதி டாக்டர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்கின்றனர். ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ளவும் பரிந்துரைக்கின்றனர். என்றாலும், பாலிப் மீண்டும் வருவதைத் தடுக்க முடியாது என்கின்றனர். என் மனைவி ஆபரேஷன் செய்துகொள்ள தயார்தான் என்றாலும் ‘மீண்டும் பாலிப் வந்துவிட்டால் என்ன செய்வது?’ என்று யோசிக்கும்போது, ‘ஆபரேஷன் வேண்டாம்!’ என்று முடிவு செய்துவிடுகிறார். இதற்கு என்ன செய்யலாம்? தாங்கள்தான் வழிகாட்ட வேண்டும்.
- சரவணன் சுப்பிரமணியன், மின்னஞ்சல்.
மூக்கடைப்புக்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று ‘பாலிப்’ என்கிற சதை வளர்ச்சி. மூக்கினுள் விரல் நுழையும் பகுதியில், ஒரு சவ்வுப்படலம் உள்ளது. இதில் ஒவ்வாமை காரணமாகவோ காளான் கிருமிகளின் பாதிப்பினாலோ இங்கு சதை வளர்கிறது. மூக்கில் அடிக்கடி தொற்று ஏற்படுபவர்களுக்கும், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருப்பவர்களுக்கும் இது வரக்கூடிய சாத்தியம் அதிகம்.
பார்ப்பதற்கு இது ஓர் உரித்த திராட்சைக் கொத்துபோலிருக்கும். இது அருகிலுள்ள சைனஸ் துளைகளை அடைத்துக்கொள்வதால், சைனஸ் அறைகளில் நீர் கோத்துக்கொள்கிறது. இதன் தொடர்ச்சியாக பாலிப், மேலும் பெரிதாக வளர்கிறது. இப்படி பாலிப்பும் சைனஸ் பாதிப்பும் போட்டி போட்டுக்கொண்டு தொல்லை கொடுக்கும்போது, மூக்கு அடைத்துக்கொள்வதால், இவர்கள் வாயால்தான் சுவாசிக்க வேண்டிவரும். மூக்கடைத்தபடி பேசுவார்கள். வாசனையை முகரும் திறன் குறையும். பெரும்பாலும் இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் ஆஸ்துமா பிரச்சினைக்கு ஆளாவதும் உண்டு.
அறுவை சிகிச்சையே வழி
இந்தப் பிரச்சினைக்கு அறுவைசிகிச்சை மூலம் பாலிப்பை அகற்றுவதே சிறந்த வழி. இந்த அறுவைசிகிச்சையைத் திறம்பட மேற்கொள்ளும் மருத்துவரிடம் செல்ல வேண்டியது முக்கியம். மூக்குப் பகுதியை சி.டி. ஸ்கேன் எடுத்து, அதன் வேர் எந்த அளவுக்குப் பரவியுள்ளது என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டு, எண்டோஸ்கோப்பி முறையில் அதை வேரோடு அகற்றுவதே தீர்வைத் தரும்.
என்றாலும், பாலிப் மீண்டும் வராது என்று உறுதி கூற முடியாது. இதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, ஒவ்வாமை. அடுத்தது, காளான் பாதிப்பு. ஒவ்வாமை காரணமாக பாலிப் வளர்ந்திருந்தால், அந்த ஒவ்வாமை எது என்பதைச் சரியாகக் கணித்துக்கொள்ள வேண்டும். இதற்கு ஒவ்வாமையை அறிந்துகொள்ள உதவும் சில பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். பிறகு, அந்த ஒவ்வாமை துளியும் நம்மை அண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது இயலாதபோது, ஸ்டீராய்டு மருந்துகள் மூலமே ஒவ்வாமையைக் கட்டுப்படுத்த வேண்டிவரும்.
காளான் கிருமிகள்
அடுத்ததாக, காளான் கிருமிகளால் பாலிப் ஏற்படும்போது அதை அறுவைசிகிச்சை செய்து அகற்றினாலும், மறுபடியும் அது வருவதற்கு அதிக சாத்தியம் உள்ளது. இந்தக் காளான் பாதிப்பில் ‘ரைனோஸ்போரிடியோசிஸ்’ (Rhinosporidiosis) என்று ஒரு வகை உள்ளது. இது கால்நடைகள் மூலம் நமக்கு வருவதாகத் தெரிகிறது. குறிப்பாக, கால்நடைகளைக் குளிப்பாட்டும் குளத்திலோ நீர்நிலைகளிலோ நாமும் குளிக்கும்போது, இந்தக் காளான் கிருமிகள் நம் மூக்கினுள் நுழைந்துகொள்கின்றன. இது பூஞ்சை வகையைச் சேர்ந்தது என்பதால், மூக்கில் உள்ள ஈரப்பதத்தைப் பயன்படுத்திக்கொண்டு நன்கு வளரத் தொடங்குகின்றன. இது பார்ப்பதற்குப் புற்றுநோய் போலிருக்கும். இந்தச் சதையைத் தொட்டாலோ, அதை எடுக்க முயற்சி செய்தாலோ ரத்தம் கொட்டும். எனவே, இதை ஆபரேஷன் செய்து எடுப்பதற்கு நோயாளிகள் பயப்படுவார்கள்.
இந்த நோய்க்கு இப்போது பலதரப்பட்ட நவீன சிகிச்சைகள் வந்துவிட்டன. குறிப்பாக, இந்தச் சதையை ஆபரேஷன் செய்து அகற்றிய பிறகு, ‘காட்டரைசேஷன்’ எனும் மின்சூட்டுச் சிகிச்சையில் அதன் வேர்களை அழிக்க வேண்டும். லேசர் சிகிச்சையும் இதற்கு நல்ல பலன் கொடுக்கும்.
‘ரைனோஸ்போரிடியோசிஸ்’ பாதிப்பை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். இந்தக் கிருமிகள் தொற்றியிருப்பவர்களுக்கு ஆரம்பத்தில் மூக்கில் அடிக்கடி அரிப்பு ஏற்படும். லேசாக ரத்தம் கொட்டும். ஆனால், இந்த அரிப்பு என்னும் அறிகுறி பொதுவான ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் இருக்கும் என்பதால், இந்த நோயைச் சரியாக கணிக்க முடியாமல் போய்விடும். அடுத்ததாக, லேசாக ரத்தம் கொட்டுவதை ‘சில்லு மூக்கு’ உடைந்துவிட்டது என்று பலர் அலட்சியப்படுத்திவிடுவார்கள். நல்ல அனுபவமுள்ள காது-மூக்கு-தொண்டை மருத்துவரால் மட்டுமே ஆரம்பத்தில் இதை கணிக்க முடியும். தவிர, சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தாலும் தெரிந்துவிடும்.
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.
முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT