Published : 28 Apr 2018 11:31 AM
Last Updated : 28 Apr 2018 11:31 AM
எனக்கு வயது 66. பல மாதங்களாக இடது தோள்பட்டையில் வலி கடுமையாக இருக்கிறது. வலிபோக்கும் ஊசிகளைப் போடும்போது அந்த வலி தற்காலிகமாக நிற்கிறது. பிறகு மீண்டும் வந்துவிடுகிறது. எனக்கு அல்சரும் இருக்கிறது. எனவே, வலி மாத்திரைகளைச் சாப்பிட முடியவில்லை. இதற்கு ‘உடற்பயிற்சிகள் செய்யலாம்’ என்று என் நண்பர் யோசனை கூறினார். அது சரியா? அப்படி ஏதாவது பயிற்சிகளால் வலியைக் குறைக்க முடியும் என்றால், அவை என்ன பயிற்சிகள் என்பதைத் தெரிவித்தால் நல்லது.
- கே. மருதுபாண்டியன், எஸ். ராமலிங்காபுரம்.
தோள்பட்டை வலிக்கு, தோள் மூட்டு எலும்பில் தேய்மானம், தசைகள் பாதிப்பு, தசை நார்கள் பாதிப்பு, திரவத்திசு பாதிப்பு, தோள்பட்டை இறுக்கமடைவது (Frozen shoulder) எனப் பலதரப்பட்ட காரணங்கள் உள்ளன. இந்தப் பாதிப்புகள் ஏற்பட பலருக்கும் அடிப்படை நோயாக இருப்பது நீரிழிவு. ஆகவே, உங்களுக்கு நீரிழிவு இருக்கிறதா என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.
நீரிழிவு உள்ளவர்களுக்கு ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லையென்றால், தோள்பட்டையில் உள்ள தசைநார்கள் சீக்கிரமே இறுகிவிடும். தோள்பட்டை மூட்டில் உள்ள எலும்புகள் விரைவில் தேய்ந்துவிடும். இதனால் தோள்பட்டையில் வலி (Periarthritis Shoulder) ஏற்படும். நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த வலி மிகவும் கடுமையாக இருக்கும். மேலும் இவர்களுக்குக் கழுத்து எலும்புகளும் சீக்கிரம் தேயலாம் (Cervical Spondilitis). அப்போது கழுத்து எலும்புகளுக்கு இடையில் உள்ள நரம்பு அழுத்தப்படும். இதன் விளைவாகக் கழுத்தும் தோள்பட்டையும் வலிக்கும். இந்த வலியானது சில நேரம் கைவிரல்கள்வரை பரவலாம்.
இடது தோள்பட்டையில் வலி உண்டாவதற்கு மற்றொரு முக்கியக் காரணம், மாரடைப்பு. ஆகவே, உங்கள் தோள்பட்டை வலிக்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடித்துத் தகுந்த சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். இடது தோள்பட்டை மூட்டு எலும்பையும் கழுத்து எலும்பையும் எக்ஸ்-ரே, சி.டி. ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். இ.சி.ஜி., ‘டிரெட் மில்’ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
என்ன சிகிச்சை?
தோள்பட்டை வலிக்குத் தோள்பட்டையில்தான் பிரச்சினை என்பது உறுதியானால், முதலில் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த வேண்டும். பொதுவாக, உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ரத்தச் சர்க்கரை 140 மி.கி. சதவீதம் என்ற அளவில் இருக்க வேண்டும். இதற்கு நீரிழிவு நோய் மாத்திரைகளைச் சாப்பிடுவதைவிட டாக்டர் யோசனைப்படி இன்சுலின் ஊசி மூலம் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தினால், தோள்பட்டை வலி சீக்கிரம் குணமாகும். இத்துடன் வலிநிவாரணி மாத்திரைகளையும் சாப்பிட வேண்டும். ஆனால், உங்களுக்கு அல்சர் உள்ளதால் வலிநிவாரணி மாத்திரைகளைச் சாப்பிட முடியாது. பதிலாக, தினமும் மூட்டின் மீது இளம் சூடான தண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
தோள்பட்டை வலிக்கு பிசியோதெரபி சிகிச்சை மூலமும் நிவாரணம் பெற முடியும். இவற்றில் SWD, IFT, TENS சிகிச்சைகள் முதன்மையானவை. தோள்பட்டைக்கு எனப் பிரத்யேகப் பயிற்சிகள் உள்ளன. அவற்றையும் மேற்கொள்ள வேண்டும். காரணம், முறையான உடற்பயிற்சிகள் மூட்டுகள் இறுகிவிடாமல் பாதுகாக்கின்றன. மூட்டுகள் சுலபமாக இயங்குவதற்கு உதவுகின்றன. மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தி, மூட்டுகளுக்கு அதிக வலிமை தருகின்றன. இதனால் தோள்பட்டை வலி குறைந்துவிடும்.
இவற்றில் எல்லாம் வலி குறையவில்லை என்றால், மூட்டுக்குள் ஸ்டீராய்டு ஊசி போட்டுக்கொள்ளலாம். ஆனால், இது நிரந்தரத் தீர்வு தருவதில்லை. மூட்டு மிகவும் இறுக்கமாக இருந்தால், மயக்கம் கொடுத்து அந்த இறுக்கத்தைத் தளர்த்தலாம். அடுத்ததாக, ஆர்த்ராஸ்கோப்பி (Shoulder arthroscopy) முறையில் சிறிய அறுவை சிகிச்சை செய்தும் சரிசெய்யலாம். இது ஒன்றுதான் தோள்பட்டை வலிக்கு நிரந்தரத் தீர்வைத் தர முடியும்.
வலி குறைக்கும் பயிற்சிகள்
இந்தப் பயிற்சிகளை இரண்டு நிலைகளில் செய்யலாம்.
1. நின்ற நிலையில் பயிற்சி செய்தல்
முதல் பயிற்சி
கால்களை அகற்றித் தரையில் வலுவாக நின்றுகொள்ளுங்கள்.
இப்போது இடுப்பை முன்னோக்கி வளைத்துத் தரையைப் பாருங்கள்.
கைகளைத் தளர்ச்சியாகத் தொங்கப் போடுங்கள்.
இப்போது கைகளைத் தோள்பட்டையிலிருந்து முன்னும் பின்னுமாக 20 முறை அசைக்க வேண்டும்.
இரண்டாம் பயிற்சி
கைகள் இரண்டையும் ‘X’ மாதிரி குறுக்காக 20 முறை அசையுங்கள்.
மூன்றாம் பயிற்சி
கைகளால் காற்றில் வட்டம் போடுவதைப் போல அசைக்க வேண்டும். முதலில் சிறிய வட்டமும் போகப்போகப் பெரிய வட்டமும் போட வேண்டும். மொத்தம் 20 வட்டங்கள் போடலாம்.
இந்தப் பயிற்சிகளைத் தினமும் காலையிலும் மாலையிலும் செய்யலாம்.
2. படுத்த நிலையில் பயிற்சி செய்தல்
தரையில் படுத்துக்கொண்டு, கைகளைப் பக்கவாட்டில் ஒரே நேர்கோட்டில் இருக்கும்படி நீட்டிக்கொள்ளுங்கள்.
இப்போது கைகளை மடக்காமல் மேல்நோக்கித் தூக்க வேண்டும்.
வலது கைவிரல்கள் இடது புஜத்துக்கும், இடது கைவிரல்கள் வலது புஜத்துக்கும் ‘X’ மாதிரி மடக்க வேண்டும்.
அடுத்து கைகளை மடக்காமல் மேல்நோக்கி நீட்டி, ஆரம்பத்தில் செய்ததுபோல் கைகளைப் பக்கவாட்டில் ஒரே நேர்கோட்டில் இருக்கும்படி நீட்டுங்கள்.
இந்தப் பயிற்சியை 20 முறை செய்ய வேண்டும்.
இந்தப் பயிற்சிகளைத் தினமும் காலையிலும் மாலையிலும் செய்யலாம்.
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம். மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in, முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம் | 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT