Published : 07 Apr 2018 10:56 AM
Last Updated : 07 Apr 2018 10:56 AM
என் வயது 27. கடந்த 6 மாத காலமாக மிகவும் துர்நாற்றத்துடன் தொடர்ந்து வாயு வெளியேறுகிறது. அத்துடன் மலமும் அடர் நிறத்தில் வெளியேறுகிறது. இந்த வாயுத் தொல்லையால், நான் பணிபுரியும் இடத்தில் என் அருகில் யார் வந்தாலும் மூக்கைப் பொத்துகிறார்கள். இது எனக்கு மிகவும் அவமானமாக உள்ளது. இதைக் குணப்படுத்த வழி கூறுங்கள்.
- முத்துகுமரன், மின்னஞ்சல்
குடலில் உணவு செரிமானம் ஆகும்போது அங்கு இயல்பாகவே இருக்கிற தோழமை பாக்டீரியா, நொதித்தல் எனும் செயல்முறை மூலம் பல வேதிமாற்றங்களை நிகழ்த்துவதால், ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் எனப் பல தரப்பட்ட வாயுக்கள் உற்பத்தியாகின்றன. நாள்தோறும் சுமார் 2 லிட்டர்வரை வாயு உற்பத்தியாகிறது. ஆனால், பெரும்பாலும் இது ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப் பாதை வழியாக வெளியேறுகிறது. சாதாரணமாக நம் குடலில் 200 மி.லி. வாயுதான் இருக்கும்.
சாதாரணமாக மேலே சொன்ன வாயுக்கள் உருவாகும்போது துர்நாற்றம் இருக்காது. ஆனால், குடலில் சில என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, புரத உணவு சரியாகச் செரிக்கப்படுவதில்லை. அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, மெர்காப்டன் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறும். அப்போதுதான் அக்கம் பக்கம் இருப்பவர்கள் மூக்கைப் பொத்தும் நிலை உருவாகிறது.
வாயு அதிகமாகப் பிரிவது ஏன்?
வாயுவுடன் வயிற்றில் வலி, கடுமையான இரைச்சல், உப்புசம், புளித்த ஏப்பம் போன்றவை சேர்ந்துகொண்டால், அவற்றுக்கு என்ன காரணம் என்று தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, புரதம் மிகுந்த உணவையும் ஸ்டார்ச் நிறைந்த கிழங்குகளையும் அதிகமாகச் சாப்பிடுவதுதான் இதற்கு முதன்மைக் காரணமாக இருக்கும்.
அடுத்ததாக அஜீரணம், மலச்சிக்கல், குடல்புழுக்கள், அமீபியாசிஸ், பித்தப்பைக் கற்கள், பால் ஒவ்வாமை போன்ற சாதாரண காரணங்கள் தொடங்கி குடல் காசநோய், புற்றுநோய், கணைய நோய், கல்லீரல் நோய், குடலடைப்பு, சீலியாக் நோய் போன்ற கடுமையான காரணங்கள்வரை எதுவானாலும் வாயுவை அதிகரிக்கலாம். பேதி மாத்திரைகள், ஆஸ்துமா மாத்திரைகள், ஆன்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போது, குடலில் உள்ள தோழமை பாக்டீரியா அழிக்கப்படும். இதனால் வாயுத் தொல்லை அதிகரிப்பது வழக்கம். உங்களுக்கு 27 வயதுதான் ஆகிறது என்பதால், சாதாரண காரணங்கள் இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது.
வாயுவுக்கு எதிரிகள்!
உங்கள் வாயுவுக்குக் காரணம் உணவா நோயா என்று மருத்துவரிடம் பரிசோதித்து, சிகிச்சை பெறுவது வாயுத்தொல்லையை நிரந்தரமாகத் தீர்க்க உதவும். இந்தப் பிரச்சினைக்கு இப்போது நிறைய மாத்திரை, மருந்துகள் வந்துவிட்டன. விரைவிலேயே இதைக் குணப்படுத்திவிடலாம். என்றாலும், இதை வரவிடாமல் தடுக்கச் சரியான உணவுமுறை முக்கியம்.
மொச்சை, பட்டாணி, பயறு, புரோக்கோலி, பீன்ஸ், சோயாபீன்ஸ், முட்டைக்கோஸ், வெங்காயம், காலிஃபிளவர், முந்திரி போன்ற கொட்டை வகைகள், வாழைக்காய், உருளைக் கிழங்கு, சேனைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சாக்லேட், கேக், பிஸ்கட், பாப்கார்ன், செயற்கைப் பழச்சாறுகள், செயற்கை இனிப்புகள், குளிர்பானங்கள், மசாலா மிகுந்த உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட / பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு, முட்டை, பால், பாலில் தயாரிக்கப்பட்ட பால் அல்வா, பால்கோவா, சீஸ் போன்ற உணவு வகைகள், அப்பளம், வடகம், வினிகர், சோடா, பீர், ஒயின்… இன்னும் உங்களுக்கு எந்த உணவைச் சாப்பிட்டால் வாயு அதிகரிப்பதாகத் தோன்றுகிறதோ, அதையும் முடிந்தவரைக் குறைத்துக்கொள்ளுங்கள். எண்ணெய்யில் மிதக்கும் உணவையும், எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட, மசாலா மிகுந்த உணவையும் குறைத்துக்கொள்ளுங்கள்.
பீர்க்கங்காய், வெண்டைக்காய், கத்திரிக்காய், வெள்ளரி, சுரைக்காய், புடலை, பூசணி, முள்ளங்கி, தக்காளி, வாழைத்தண்டு போன்ற நீர்ச்சத்துள்ள நாட்டுக் காய்களை அதிகம் சாப்பிடுங்கள். ஆவியில் வேக வைத்த உணவு வகைகளை அதிகப்படுத்துங்கள். இஞ்சி, லவங்கம், கொத்துமல்லி, ஏலம், துளசி, மஞ்சள் கிழங்கு போன்றவற்றையும் அடிக்கடி சேர்த்துக்கொள்ளுங்கள். எப்போது சாப்பிட்டாலும் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள். பேசிக்கொண்டே சாப்பிடாதீர்கள். அவசர அவசரமாகவும் சாப்பிடாதீர்கள். இந்தப் பிரச்சினை சரியாகும்வரை தினமும் ஒரு காய் மட்டும் சாப்பிடுங்கள். அப்போதுதான் எந்தக் காய் உங்களுக்கு வாயுவை அதிகரிக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள். கிரீன் டீ குடியுங்கள். நாளொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். வெற்றிலைப் பாக்கு, பான்மசாலா வேண்டாம். மது, புகைப்பழக்கம் ஆகாது. இத்தனையும் சரியாக அமைந்தால், வாயு உங்களைத் தொந்தரவு செய்யாது.
‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம். மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.inமுகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT