Published : 24 Feb 2018 11:10 AM
Last Updated : 24 Feb 2018 11:10 AM
உலக மேதைகளில் ஒருவரும், இயற்பியல் நிபுணருமான ரிச்சர்ட் பெயின்மென், கடினமான இயற்பியல் கோட்பாடுகளைப் படிப்பது, அதை எழுதுவது, மீண்டும் படிப்பது, மீண்டும் எழுதிப் பார்ப்பது என்ற மெய்நிகர் உலகை ஒத்த செயல்களின் மூலமே தான் கற்றதாகக் கூறுகிறார். இதனால்தான் எவ்வளவு கடினமான இயற்பியல் கோட்பாட்டையும் ஆழமாகக் கற்க முடிந்தது என்கிறார். இ-போர்டில் காட்டப்படும் வர்ணஜாலக் காட்சிகள் வெறும் பொம்மைகள்தாம். அதில் கற்பது அனைத்தும் உயிரற்ற கல்வியே.
பெற்றோர்கள்தான் இந்தப் பிரச்சினைக்குக் காரணம். அவர்கள் தங்கள் குழந்தைகளைப் பந்தயத்துக்குத் தயார்படுத்த நிறைய கல்வி கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதையே திணிக்கிறார்கள். போதாது என்று தொழில்நுட்பத்தையும் திணிக்கிறார்கள். இல்லையென்றால் போட்டி நிறைந்த இந்த உலகில் தங்கள் குழந்தைகள் பின்தங்கிவிடுவார்கள் என அஞ்சுகிறார்கள். அவர்கள் நினைத்தால் இதைப் போன்ற முட்டாள்தனங்களைக் கட்டுப்படுத்த முடியும்.
குமாஸ்தா மூளை
ஒரு குழந்தையின் வளர்ச்சி என்பது செயல் திறன், அறிவுத் திறன், உடல் திறன், உணர்வுகள், சமூக உறவு என அனைத்தின் வளர்ச்சியும்தான். சக்கை உணவு எப்படி ஊளைச் சதையை வளர்க்கிறதோ, அதேபோல் குப்பை போன்று குவிக்கப்படும் தொழில்நுட்பத்தாலும் ஆரோக்கியமற்ற மூளைதான் வளரும். அது குமாஸ்தா மூளை. சொன்ன வேலையைச் செய்யும். அதனால் சுதந்திரமாகச் சிந்திக்க முடியாது. புதிதாக ஒன்றை உருவாக்க முடியாது, கற்க முடியாது.
அப்படி என்றால், ஸ்மார்ட் வகுப்புகளே கூடாதா? நிச்சயம் இல்லை. ஸ்மார்ட் வகுப்புகளால் பல நன்மைகள் இருக்கின்றன. ஆபத்தான ரசாயனப் பரிசோதனைகள், சோதனைக் கூடத்தில் பயிலப்படும் உயிரினங்களின் உடற்கூறியல் போன்ற அறிவியல் கல்வி, கணிதத்தைப் படமாக விளக்கும் கல்வி எனச் சிலவற்றைக் காட்சிகளாகக் கற்கலாம். சிலவற்றைத்தான்… அனைத்தையும் அல்ல! அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது பெற்றோர்களுக்கு…
ஒருவேளை உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இ-வகுப்பறைகள் வந்துவிட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
1. பள்ளியில் டிஜிட்டல் வகுப்பறைகளில் குழந்தைகள் எவ்வளவு நேரம் செலவழிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
2. ஸ்மார்ட் வகுப்பறையில் அதிக நேரம் திரையின் முன் செலவிடப்படுவது தெரியவந்தால், பள்ளி நிர்வாகத்திடம் பேசி அதைக் குறைக்கச் சொல்லுங்கள்.
3. குழந்தைகள் நல மருத்துவர், மனநல மருத்துவர் கண்காணிப்பில் ஸ்மார்ட் வகுப்பறைகளைக் கொண்ட பள்ளியா என்று பாருங்கள்.
4. குழந்தைகள் நல மருத்துவர், உளவியலாளர், கல்வியாளர்கள் பரிந்துரைக்கும் அளவுக்குக் குழந்தைக்கு ஸ்மார்ட் வகுப்பு நடத்தப்பட்டால் போதும்.
5. வீட்டிலும் குழந்தைகள் கட்டுப்பாடாகப் பின்பற்றும்படி, டிஜிட்டல் ஸ்கிரீன் நேரத்தைக் குறையுங்கள்.
6. மதிப்பெண் பெறுவது மட்டும் உங்கள் குழந்தையின் நோக்கமாகக் கொள்ளாமல், பாடங்களைப் புரிந்து படிக்கிறார்களா எனத் தெரிந்துகொள்ளுங்கள்.
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: digitaldiet2017@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT