Last Updated : 17 Feb, 2018 11:01 AM

 

Published : 17 Feb 2018 11:01 AM
Last Updated : 17 Feb 2018 11:01 AM

நலம், நலமறிய ஆவல் 22: பக்கவாதத்திலிருந்து நிச்சயம் மீளலாம்!

எனக்கு வயது 66. கடந்த மாதம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று ஓரளவு குணமடைந்து வருகிறேன். வலது கை, கால் செயலிழந்துவிட்டன. பேச்சு குழறுகிறது. தசைப் பயிற்சி மேற்கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் உணவை விழுங்குவதில் சிரமம் இருக்கிறது. எனக்கு ரத்தக்கொதிப்பும் சர்க்கரை நோயும் உண்டு. மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன். புகைபிடிக்கும் வழக்கம் உண்டு. மலச்சிக்கலும் மன உளைச்சலும் உள்ளன. இனிமேல், எந்த மாதிரியான தற்காப்பு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்?

இரா. ராகவன், சென்னை - 16

முதுமையில் பலரையும் அதிகம் முடக்கிப்போடும் நோய், பக்கவாதம். இதன் பாதிப்பால் செயலிழந்த கை, கால்களை மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு மன உறுதி தேவை. தசைப் பயிற்சி உள்ளிட்ட தொடர் சிகிச்சைகள் தேவை. ஆனால், அதில்தான் பலரும் தவறு செய்கின்றனர். பெரும்பாலோர் அவற்றுக்கு வழி செய்யாமலும், அருகிலிருந்து கவனிக்க வசதிசெய்யாமலும் பாதிக்கப்பட்டவரைத் தனிமையில் விட்டு விடுகின்றனர். அந்தத் தனிமையே அவர்களுக்குப் பெரும் தண்டனையாகிவிடுகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பிறகு, வீட்டில் தசைப் பயிற்சிகள் மேற்கொள்ள ஓர் இயன்முறை மருத்துவரை ஏற்பாடுசெய்ய வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் இதற்கு ஒதுக்க வேண்டும். தோள், முழங்கை, மணிக்கட்டு, விரல்கள், தொடை, முழங்கால், பாதங்கள் என வரிசையாகத் தசைப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் சில வாரங்களுக்கு இயன்முறை மருத்துவரை வீட்டுக்கே வரச் சொல்லி, பயிற்சி பெறலாம். அதன் பிறகு, நீங்களே அவற்றைச் செய்ய முடியும். அல்லது வீட்டில் உள்ளவர்கள் இதற்கு உதவலாம்.

பக்கவாதம் வந்தவர்களுக்கு உடல் சமன்பாட்டில் பிரச்சினை ஏற்படுவது வழக்கம். உதாரணமாக, படுக்கையைவிட்டு எழுந்திருக்கும்போது, உடல் ஒரு திசையில் இழுப்பது போன்று இருக்கும். இந்த நிலைமையைத் தவிர்க்கவும் தனிப் பயிற்சிகள் உண்டு. இயன்முறை மருத்துவர் உதவியுடன் இவற்றையும் செய்ய வேண்டும். தொடர்ந்து இந்தப் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், சில வாரங்களில் ‘வாக்கர்’ கொண்டு நடக்கப் பழகிவிடலாம்.

படுக்கைப் புண்களைத் தடுக்க…

பக்கவாதம் வந்தவர்களுக்குப் படுக்கைப் புண்கள் வர வாய்ப்பிருக்கிறது. இதை முதலில் தவிர்க்க வேண்டும். அதற்குப் படுக்கும் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். மெலிதான தலையணையைத் தலைக்கு அடியில் வைத்துக்கொள்ளலாம். முழங்கைவரையிலும் கைக்குத் தலையணை வைத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் காலுக்கும் தலையணை வைத்துக்கொள்ளலாம். தோள்கள் தலையணைக்கு முன்புறம் இருக்க வேண்டும்.

ஒரே நிலையில் 2 மணி நேரத்துக்கு மேல் படுக்கக் கூடாது. படுக்கையைச் சுத்தமாகவும் சுருக்கங்கள் இல்லாமலும் வைத்துக்கொள்ள வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும். ‘தண்ணீர்ப் படுக்கை’ (Water bed) நல்லது.

சருமம் சிவப்பாகிறதா, சருமத்தில் புண் இருக்கிறதா எனத் தினமும் சோதித்துக்கொள்ள வேண்டும். எழுந்திருக்கும்போதும் உட்காரும்போதும் மற்றவர் உதவியுடன் செய்வதே நல்லது. அல்லது படுக்கைக்கு அருகில் சுவரில் கைப்பிடிகளைப் பொருத்திக்கொண்டு, அவற்றைப் பிடித்து எழுந்து உட்காரலாம்.

நிறைய தண்ணீர் அருந்துங்கள்

உணவை விழுங்குவதிலும் பேசுவதிலும் சிரமம் இருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். இவற்றுக்கும் தனிப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இயன்முறை மருத்துவர் தொண்டைத் தசைகள் வலிமை பெறப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுப்பார். சாப்பிடும்போது உணவு புரையேறிவிடாமல் இருக்கவும் கவனம் செலுத்த வேண்டும். அதற்கேற்ப உணவைத் தேர்வுசெய்ய வேண்டும். மெல்வதற்கு எளிதான உணவு வகைகளைச் சிறிதளவில் அடிக்கடி சாப்பிடுங்கள். இந்தப் பிரச்சினை எழாது.

பேச்சு - மொழிப் பயிற்றுநர் சுலபமாக உணவை விழுங்க வழி சொல்லுவார். உங்கள் பேச்சு தொடர்பான பிரச்சினைகளுக்கும் பயிற்சிகள் தருவார். உங்களுக்கு விழுங்குவதில் சிரமம் உள்ள காரணத்தால் முழு தானியக் கஞ்சி, பருப்புக் குழம்பு, அரைக்கப்பட்ட காய்கறி, கறி, பழம், நசுக்கப்பட்ட கிழங்கு, அரைவேக்காடு முட்டை, பிரக்கோலி, முட்டைக்கோஸ், சோயாபீன்ஸ், அவரை, பச்சைத் தேநீர், இலையுள்ள காய்கறிகள், ஓட்ஸ், தயிர், கிரில் செய்த மீன், பாலாடைக்கட்டி ஆகியவை சிறந்த உணவு வகைககள். இவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம்.

shutterstock_363873890 [Converted]_col

உங்களுக்கு மலச்சிக்கல் உள்ளதால், நிறைய தண்ணீர் அருந்துங்கள். நார்ச்சத்துள்ள முழுத் தானியங்கள், சிறுதானியங்கள், காய், பழம் தினமும் சாப்பிடுங்கள். மலச்சிக்கலை லகுவாக்கும் மாத்திரைகளையும் பயன்படுத்தலாம்.

மனச்சோர்வை வெல்ல

சிறுநீர் போக ரப்பர் குழாய் பொருத்தப்பட்டிருந்தால், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அதை மாற்றிவிட வேண்டும். இல்லையென்றால், தொற்று ஏற்பட்டு குளிர் காய்ச்சல் வர வாய்ப்பிருக்கிறது. ரப்பர் குழாய் இல்லாமல் இருந்தால், சிறுநீர்க் கசிவு ஏற்பட வழி உண்டு. இதற்குப் பெரியவர்களுக்கான டயபர், பேன்டி பேடுகளை அணிந்துகொள்ளலாம்.

மலம் கழிப்பதற்கு பெட்பேன் அல்லது கழிப்பறை நாற்காலியைப் பயன்படுத்துங்கள். சிறுநீர், மலம் கழிப்பதற்குக் கழிப்பறைக்குச் செல்வதாக இருந்தால், சுவரில் கைப்பிடிகளைப் பொருத்திக்கொள்வது நல்லது. மூலிகை மருந்துகள், மூலிகைத் தேநீர் வேண்டாம். இவை சில அலோபதி மருந்துகளைச் செயலிழக்க வைக்க வாய்ப்பிருக்கிறது.

பக்கவாதம் ஏற்பட்டவர்களுக்கு முக்கியப் பிரச்சினை மனச்சோர்வு. குளிப்பது, உடை உடுத்துவது, உணவு உண்பது போன்ற அன்றாடத் தேவைகளுக்குக்கூட மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறதே என்று நினைத்து வருத்தம் ஏற்படுவது இயல்புதான். இதையும் கடந்துவிடலாம். ‘நான் மறுபடியும் நடக்க ஆரம்பித்து விடுவேன்’ என்று மன உறுதிகொள்ளுங்கள். தினமும் தியானம் செய்வது மன உளைச்சலைக் குறைக்க உதவும். நண்பர்களுடன் அடிக்கடி பேசுங்கள். இசை கேளுங்கள். புத்தகம் படியுங்கள். முடிந்த பொழுதுபோக்குக் கலைகளில் ஈடுபட வேண்டியதும் முக்கியம்.

மீண்டும் பக்கவாதம் ஏற்படாமல் இருக்க...

# ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை, கொலஸ்ட்ரால் அளவுகளைக் கட்டுப்படுத்துங்கள்

# மருத்துவர் கூறும் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளுங்கள். அவற்றை சுயமாக நிறுத்துவதோ குறைப்பதோ கூடாது

# புகைபிடிக்க வேண்டாம். மது அருந்த வேண்டாம்

# உப்பு, இனிப்பு, கொழுப்பு குறைந்த உணவு வகைகளையே சாப்பிடுங்கள்

# உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ளுங்கள்

நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x