Last Updated : 03 Feb, 2018 10:33 AM

 

Published : 03 Feb 2018 10:33 AM
Last Updated : 03 Feb 2018 10:33 AM

நலம் நலமறிய ஆவல் 20: குரலில் திடீர் கரகரப்பு ஏன்?

எனக்கு வயது 40. நான் அவ்வப்போது மேடைகளில் பாடுவேன். சமீபகாலமாக என் குரலில் மாற்றம் தெரிகிறது. கரகரப்பாக இருக்கிறது. பேசும்போது சத்தம் குறைகிறது. பாடும்போது கீச்சுக் குரலாக வருகிறது. இயற்கை வைத்திய முறையைக் கையாண்டு பார்த்தேன். நிவாரணம் கிட்டவில்லை. அலோபதி டாக்டரிடம் போக பயமாக இருக்கிறது. பெரிய நோய் ஏதாவது இருக்கும் என்று சொல்லி விடுவாரோ என்று பயப்படுகிறேன். நீங்கள் ஒரு ஆலோசனை சொல்லுங்கள், டாக்டர்.

ச. சந்திரசேகரன், திருச்சி.

நம் தொண்டையில் ‘குரல்வளை’ (Larynx) எனும் பேச்சுப்பெட்டி இருக்கிறது. இதில் ஆங்கில எழுத்து ‘வி’ (V) வடிவத்தில் இரண்டு தசைப் பட்டைகள் இருக்கின்றன. அவற்றுக்குக் ‘குரல் நாண்கள்’ என்று பெயர். நாம் பேசும்போது, பாடும்போது, அழும்போது இவை திறந்து மூடி சில அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. அந்த அதிர்வுகளால்தான் நமக்குக் குரல் எழுகிறது.

இந்தக் குரல் நாண்களில் ஏற்படும் பாதிப்புதான் குரலில் மாற்றங்களை உண்டாக்குகிறது. அது சாதாரண பாதிப்பாகவும் இருக்கலாம், பெரிய பாதிப்பாகவும் இருக்கலாம். பொதுவாகக் குரல் நாண்களில் நோய்த்தொற்று தாக்கும்போது குரலில் மாற்றம் ஏற்படும். ஜலதோஷம் போன்ற தொற்றுநோய்கள் தொண்டையைப் பாதிக்கும்போது குரல்வளை வீங்கிவிடுவதால், இந்த நிலைமை ஏற்படுவதுண்டு. கடுமையான இருமல் ஏற்பட்டாலும் குரலில் மாற்றம் உண்டாகும்.

உங்களைப் போன்ற பாடகர்கள் குரல்வளையை அதிகமாகத் தவறாகவும் பயன்படுத்துவது வழக்கம். அப்போது குரலில் மாற்றம் ஏற்படும். நீங்கள் குடிக்கும் தண்ணீர், உண்ணும் உணவால் ஒவ்வாமை ஏற்பட்டாலும் குரலில் மாற்றம் உண்டாகலாம். தொண்டைக்கு எரிச்சல் தரக்கூடிய பானங்களை அடிக்கடி குடித்தாலும், குரல்வளையில் காயம் உண்டாகி, குரலில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

குரலில் மாற்றம் ஏற்படுவதற்குப் புகைபிடித்தல் ஒரு முக்கியக் காரணம். அடுத்து, இரைப்பையில் புண் ஏற்படுவது. இரைப்பையில் புண் இருந்து, உணவுக்குழாயின் கீழ்முனையில் உள்ள வால்வு பலவீனமாகிவிட்டால், இரைப்பையில் உள்ள அமிலம் மேல் எழுந்து வரும். இப்படி அடிக்கடி வந்தால், தொண்டையிலும் குரல்வளையிலும் புண்களை உண்டாக்கும். அப்போது குரலில் மாற்றம் தோன்றும்.

குரல்வளையில் சாதாரண முடிச்சுகள், நீர்க்கட்டிகள், சதை வளர்ச்சி போன்றவை ஏற்பட்டாலும் குரலில் மாற்றம் உண்டாவது வழக்கம். தைராய்டு பிரச்சினை, ரத்தசோகை காரணமாகவும் இந்த நிலைமை ஏற்படுகிறது. பார்க்கின்சன் நோய், பக்கவாதம் போன்ற நோய்களில் ஏற்படும் நரம்பு பாதிப்பாலும் குரலில் மாற்றம் ஏற்படும்.

குரலில் ஏற்பட்ட மாற்றம் சாதாரண சிகிச்சைகளுக்கு சரியாகாமல் அதிக நாட்களுக்கு நீடிக்குமானால், குரல்வளையில் புற்றுநோய் இருக்க வாய்ப்புண்டு. குரல்வளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அளவைப் பொறுத்து, குரல் தடிப்பது, குரலின் சுருதி குறைவது, கரகரப்பாவது, பேசும்போது வலிப்பது போன்ற அறிகுறிகள் தோன்றும்.

என்ன செய்யலாம்?

காது - மூக்கு - தொண்டை மருத்துவரிடம் ஆலோசித்தால், கழுத்து, தொண்டையின் உட்புறத்தைப் பரிசோதித்துப் பிரச்சினைக்கு அவர் காரணம் கண்டுபிடித்துவிடுவார். அந்தக் காரணத்துக்கு ஏற்ப சிகிச்சை எடுத்துக்கொண்டால், குரல் சரியாகிவிடும்.

ஆவிபிடித்தல் போன்ற சாதாரண சிகிச்சையால் ஜலதோஷம், இருமல் போன்றவை பெரும்பாலும் கட்டுப்பட்டுவிட்டால், குரலில் ஏற்பட்ட மாற்றமும் மறைந்துவிடும்.

வெந்நீரில் சிறிதளவு உப்பு கலந்து வாயைக் கொப்பளித்துத் தொண்டையைச் சுத்தப்படுத்தினாலும், குரல்வளை வீக்கம் குறைந்து குரல் சரியாகும்.

உங்களைப் போன்ற பாடகர்கள் பாடுவதையும் அதிகம் பேசுவதையும் குறைத்துக்கொண்டு, ஒரு சில வாரங்கள் குரல்வளைக்கு ஓய்வு கொடுத்தாலும் குரல் மாற்றப் பிரச்சினை சரியாகும்.

புகைபிடிப்பதை அறவே நிறுத்துவது பெரிதும் உதவும்.

இரைப்பையில் புண்ணும் அமில எதிரொழுக்கு நோயும் (GERD) உள்ளவர்கள் அவற்றுக்குத் தகுந்த சிகிச்சை பெற வேண்டும்.

குரல்வளையில் தோன்றும் சாதாரணக் கட்டிகளுக்கு சிறிய அறுவைசிகிச்சை மூலம் தீர்வு காணலாம்.

குரல்வளையில் புற்றுநோய் இருந்தாலும், அதை ஆரம்பக் கட்டத்தில் கவனித்துவிட்டால், கதிர்வீச்சு சிகிச்சையில் குணப்படுத்திவிடலாம்.

எந்த ஒரு நோயென்றாலும் அதற்குப் பயந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. எவ்வளவு விரைவில் நோயைக் கண்டுபிடித்து சிகிச்சையைத் தொடங்குகிறோமோ பின்னால் வரக்கூடிய பெரிய பிரச்சினைகளை அது தடுத்துவிடும். எனவே, நீங்கள் உடனடியாக ஒரு காது - மூக்கு - தொண்டை மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

குரல்வளையைக் காக்கப் பொதுவான வழிகள்

# அதிக சத்தம் போட்டு பேச வேண்டிய இடத்தில் மைக்ரோபோனை பயன்படுத்தலாம்.

# புகைப் பழக்கத்தை நிறுத்தினால், குரல்வளைப் புற்றுநோய் வருவது தடுக்கப்படும்.

# மதுப் பழக்கத்துக்கு விடை கொடுப்பது, காரம் மிகுந்த உணவுகளைத் தவிர்ப்பது போன்ற முறைகளைக் கடைப்பிடித்தால், அமில எதிரொழுக்கு நோயும் தடுக்கப்படும்.

# குரல் பயிற்சி மையங்களில் சில தேர்ந்த பயிற்களை மேற்கொண்டாலும் பலன் கிடைக்கும்.

# எப்போதும் சுத்தமான தண்ணீரைக் குடிக்க வேண்டும்.

# மிகவும் குளிர்ச்சியான பானங்களைக் குடிக்க வேண்டாம்.

# ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான உணவுப் பொருள்களைச் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்வது நல்லது.

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x