Published : 22 Jul 2014 10:09 AM
Last Updated : 22 Jul 2014 10:09 AM

நமது மூளை, நமது எதிர்காலம்- முதல் உலக மூளை தினம்: ஜூலை 22

உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆய்வுப்படி சுமார் 4.5 முதல் 11 சதவீத உடல்நலப் பாதிப்புகள் மூளை நரம்பியல் நோய்களால் மட்டும் ஏற்படுகின்றன. உலக அளவில் ஏறத்தாழ 12 சதவீதத்துக்கும் மேலான இறப்புகள், நரம்பியல் நோய் காரணமாக ஏற்படுகின்றன.

வருங்காலத்தில் மூளை நரம்பியல் நோய்களின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக நடைமுறை பழக்கவழக்கங்கள், உணவுப் பழக்கம், சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், நம் வாழ்க்கை நடைமுறையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை மூளை பாதிப்பை அதிகமாக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

மூளை நாள்

இதைப் பொதுமக்களிடம் அறிவுறுத்தும் வகையில் உலக நரம்பியல் கழகம் ஜூலை 22-ம் தேதியை உலக மூளை தினமாக அறிவித்துள்ளது.

இந்த முதல் உலக மூளை தினத்தின் மையக் கருத்து ‘நமது மூளை; நமது எதிர்காலம்’. இதை வரைந்து மூளையைப் பாதுகாக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொருவரும் மூளையைப் பாதுகாக்கக்கூடிய சில நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

#தாயின் வயிற்றில் கருத்தரிக்கும் காலத்தில் இருந்து கருவுற்ற தாய்மார்கள் குழந்தைகளை நன்றாகப் பெற்றெடுப்பதற்குக் சரியான மருத்துவ உதவியைப் பெற வேண்டும்.

#பிரசவத்தை மருத்துவமனையில் வைத்துப் பார்ப்பதன் மூலம், மூளை குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க முடியும்.

#குழந்தைப் பருவத்தில் உரிய காலத்தில் உரிய தடுப்பூசிகள் போடுவதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு மூளை சார்ந்த நோய்களைத் தடுக்க முடியும்.

#இளமைப் பருவத்தில் அதிகமான செல்போன் பயன்பாடு, தலைக்கவசம் இல்லாத இருசக்கர வாகனப் பயணம், போதைப் பழக்கம், மதுப் பழக்கம் ஆகியவற்றைத் தடுப்பதன் மூலம் பெருமளவு மூளை நரம்பியல் நோய்களைத் தடுக்கலாம்.

#எல்லா வயதிலும் புகைப்பழக்கம், தகாத பழக்கவழக்கங்களைத் தடுப்பதுடன் உடலுக்குப் பாதுகாப்பு வழங்கக்கூடிய உணவைச் சாப்பிடுவது, கோபமற்ற தன்மை, கல்வித் திறன் வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் மூளை நரம்பியல் நோய்களைக் குறைக்கலாம்.

மேற்கண்ட பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் வயதான காலத்தில் ஏற்படும் பக்கவாதம், மூளைத் தேய்வு நோய் (டிமென்சியா), உடல் நடுக்க நோய் (பார்கின்சன்ஸ்) ஆகிய நோய்களையும் தடுக்க முடியும்.

டாக்டர் எம்.ஏ. அலீம்- தொடர்புக்கு: drmaaleem@hotmail.com

கட்டுரையாளர், திருச்சி கி.ஆ.பெ.வி. அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு மருத்துவமனை மூளை நரம்பியல் துறை பேராசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x