Published : 20 Jan 2018 11:14 AM
Last Updated : 20 Jan 2018 11:14 AM

டிஜிட்டல் போதை 18: வீடியோ கேம்... நன்மைகளும் உண்டு!

 

வீ

டியோ கேம் விளையாடுவதால் ஏற்படும் தீமைகளைப் பற்றி இதுவரை விரிவாகப் பார்த்தோம். அதனால், வீடியோ கேம்களை நவயுக சாத்தானாகப் புரிந்துகொள்ள வேண்டாம். வீடியோ கேம் விளையாடுவதால் பல நன்மைகளும் இருக்கின்றன என்கிறது இன்னொரு தரப்பு. அதைப் பற்றியும் விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

அமெரிக்காவில் உள்ள உடா பல்கலைக்கழகத்தில் வீடியோ கேம் விளையாடுபவர்களைப் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர் மருத்துவர் ஜெஃப் ஆண்டர்ஸன். அவர், வீடியோ கேம் விளையாடுபவர்களை ஆய்வு செய்தபோது, அவர்கள் இயல்பாக வெளிப்படுத்தும் நன்மையான பண்புகளைக் கவனித்தார். அதைப் பற்றி ஆய்விதழ்களில் பல கட்டுரைகள் வெளியிட்டார்.

பார்வை, செவி கூர்மைக்கு…

அவர் சொல்லும் கருத்துகளில் மிகவும் முக்கியமானது, வீடியோ கேம் விளையாடுபவர்கள், தங்களுக்குப் புதிதாக வரும் தகவல்களை எளிதாகப் புரிந்துகொள்கிறார்கள் என்பதுதான். அதேபோல் புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்கள் மனநிலையை உடனே மாற்றிக்கொள்கிறார்கள். இது, சமகாலத்தில் தேவைப்படும் மிக முக்கியப் பண்பு.

அடுத்து, வீடியோ கேம் விளையாடுபவர்களின் கேட்கும் திறன், பார்வைத் திறன் நன்றாக மேம்படுகிறது என்கிறார் ஜெஃப். ஏனென்றால் வீடியோ கேம் விளையாடும்போது உங்கள் எதிரி கண் முன்னே வந்தால், அவரை எதிர்கொள்ள உங்களுக்குக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. நொடிக்கும் குறைவான நேரத்தில், நீங்கள் அவரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை முடிவுசெய்ய வேண்டும். அப்போது உங்கள் பார்வைத் திறன், கேட்கும் திறன், கவனிப்பு, வேகமாகச் செயல்படுதல், இவற்றை ஒருங்கிணைக்கும் மூளையின் பகுதிகள் என அனைத்தும் ஒன்று சேர்ந்து நிகழ்த்தும் அற்புதம், வீடியோ கேமில் எடுக்கும் ஒரு பாயிண்டாக மாறுகிறது.

வீடியோ கேம் விளையாடாதவர்களுடன் ஒப்பிடும்போது, நாம் மேலே பார்த்த திறன்கள், வீடியோ கேம் விளையாடுபவர்களுக்கு நன்றாக மேம்பட்டிருக்கிறது என்கிறார் அவர்.

பிரச்சினைகளைக் கையாளும் திறனுக்கு…

மேலும் வீடியோ கேம் விளையாடுபவர்கள், தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை வேறு கோணங்களிலிருந்து பார்ப்பதிலும் சிறப்பாக விளங்குகிறார்கள். இதனால் தீர்வுகளை அவர்களால் எளிமையாகக் கண்டடைய முடிகிறது. அதேபோல் திட்டமிடுதலில் மிகவும் சிறப்பாகச் செயல்படுவார்கள். உதாரணத்துக்கு, கொடுக்கப்பட்ட குறைந்த கச்சா பொருட்களைக்கொண்டு, குறைந்த நேரத்தில், தேவையான வேலையைச் செய்து முடித்துவிடுவார்கள். ஒரு வேலையைச் செய்ய ‘எனக்கு இதெல்லாம் வேண்டும். அப்போதுதான் என்னால் பணியாற்ற முடியும்’ என்று பிடிவாதம் பிடிக்கமாட்டார்கள்.

மருத்துவக் கல்வியில் இப்போதெல்லாம் அறுவைசிகிச்சையை முதலில் வீடியோ கேம்களின் உதவியுடன்தான் பழகுகிறார்கள். அப்படிப் பழகும் மருத்துவர்களின் கை, பார்வை ஒருங்கிணைப்பு அற்புதமாக இருப்பதும், விரைவாக முடிவெடுக்கும் பண்பும், கடினமான அறுவைசிகிச்சையின்போது குறைந்த நேரத்தில் நோயாளியைக் காப்பாற்ற உதவுகின்றன.

வீடியோ கேம் விளையாடுவதால் கிடைக்கும் இன்னொரு முக்கிய நன்மை, மிக வேகமாக ஒரு விஷயத்தைக் கற்கும் திறமை. கற்றல் திறன் பற்றி ஆய்வு செய்த பலர், வீடியோ கேம்களால் ஏற்படும் இந்த பாசிட்டிவ் தாக்கத்தை ஒப்புக்கொள்கிறார்கள்.

(அடுத்த வாரம்: வீடியோ கேமில் கல்வி!)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x