Published : 02 Dec 2017 11:19 AM
Last Updated : 02 Dec 2017 11:19 AM

ஆனந்தம் விளையாடும் வீடு!

உலக எய்ட்ஸ் நாள் - டிசம்பர் 1

 

2001.

அந்த வீட்டின் முன் நின்று, அக்கம் பக்கத்துக் குடியிருப்புவாசிகள் கடும் வசைகளால் திட்டித் தீர்த்தனர். ‘இன்னும் 24 மணி நேரத்துக்குள் வீட்டைக் காலி செய்து, இங்குள்ள குழந்தைகளை அழைத்துச் செல்லாவிட்டால் நடப்பதே வேறு’ என்று மிரட்டிக் கூச்சலிட்டனர். வேறு வழியின்றி அந்த வீட்டைக் காலிசெய்து, அங்கிருந்த முப்பது குழந்தைகளை அன்றைக்குப் பரபரப்புக் குறைந்த புறநகர்ப் பகுதியாக இருந்த மதுரவாயலில் மற்றொரு வாடகை வீட்டில் தங்க வைத்தார் அதன் காப்பாளர்.

அந்தக் குழந்தைகள் அனைவரும் ஹெச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகியிருந்தவர்கள். அந்தக் குழந்தைகளைப் பராமரித்துவருபவர் டாக்டர் மனோரமா.

02chnvk_manorama.jpg டாக்டர் மனோரமாright

உறவுகளாலேயே உதறப்பட்ட ‘ஹெச்.ஐ.வி. பாசிட்டிவ்’ குழந்தைகளுக்காக டாக்டர் மனோரமா தொடங்கி நடத்திவந்த ‘செஸ்’ தொண்டு நிறுவனத்தின் இல்லமாக, அந்த வீடு செயல்பட்டுவந்தது.

இன்று கூட்டுமருந்து சிகிச்சையால் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளக்கூடிய ஒரு ‘மேனேஜபிள் டிசீஸ்’ என்ற இடத்துக்கு வந்து நிற்கிறது ஹெச்.ஐ.வி தொற்று. அதனால் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களும் மற்றவர்களைப் போல வாழ முடியும். ஆனால் அன்றைக்கு அவர்கள் சமூகத்தின் தீவிர புறக்கணிப்புக்கு உள்ளாகியிருந்தார்கள். சரி, இன்றைக்கு அந்தக் குழந்தைகளின் நிலை எப்படி இருக்கிறது?

முழுமையானதொரு இல்லம்!

2017, சென்னையிலிருந்து ஒரு மணிநேரப் பயணம். செங்குன்றத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில், சோழவரத்தையொட்டி இருக்கிறது பண்டிக்காவனூர் ஊராட்சி. அந்த ஊராட்சிக்கு உட்பட்ட எர்ணவாக்கம் கிராமத்தில் வயல்களுக்கு நடுவே பத்து ஏக்கர் பரப்பளவில் வரவேற்கிறது ‘செஸ்’ அமைப்பின் ‘ஆனந்த இல்லம்’.

சுற்றிலும் பாதுகாப்பான சுற்றுச்சுவர். உள்ளே நுழைந்ததுமே நீச்சல்குளம். நீச்சல்குளத்தை ஒட்டி, 10 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான நூலகம், நூலகக் கட்டிடத்திலேயே ‘பாசிட்டிவ்’ குழந்தைகளை எப்படிப் பராமரிப்பது என்பதை அறிந்துகொள்ள ஆர்வமுடன் வருகிற தன்னார்வத் தொண்டர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகுப்பறை.

அதே கட்டிடத்தில் ‘செஸ்’ குழந்தைகள் கீ போர்ட், கிட்டார், வயலின், தாள வாத்தியங்கள் கற்றுக்கொள்ளும் இசைப் பயிற்சிக்கான அறை. அந்தக் கட்டிடத்தை விட்டு வெளியே வந்ததும் இரண்டு வரிசைகளாக அழகாக வடிவமைக்கப்பட்ட கட்டிடங்கள்.

வலதுபுறம் 13 வயதுமுதல் 20 வயதுவரையிலான ஆண் பிள்ளைகளுக்கான விடுதி. இடதுபுறம் அதே வயதுவரம்பில் வரும் பெண் பிள்ளைகளுக்கான விடுதி. 8 முதல் 13 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்குத் தனி விடுதி. 7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு செவிலியர், தொடக்கக் கல்வி பயிற்றுவிக்கும் ஒரு ஆசிரியையுடன் இயங்கும் தனிக் கட்டிடம்.

அங்கே உடல்நலம் குன்றும் குழந்தைகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப் படுக்கைகள் கொண்ட வார்டு. சமையல், உணவுக்கூடத்துக்குப் பின்னால் கைப்பந்து விளையாட்டுத் திடல் என உண்மையாகவே ஆனந்த இல்லமாக இருக்கிறது!

2001-ல் நடைபெற்ற சம்பவத்தை நினைவுபடுத்தி அந்தக் குழந்தைகள் குறித்து அந்த இல்லத்தின் முதன்மை நிர்வாகியான முத்துப்பாண்டியனிடம் கேட்டபோது, ‘அவர்களில் ஒரு சிறுவன் மட்டும் இறந்துவிட்டான். மற்ற நால்வரில் இரண்டு பெண் பிள்ளைகளில் ஒருவர் பிளஸ் 2 படிக்கிறார். மற்றொருவர் பி.காம். படிக்கிறார். பையன்கள் இருவரும் இன்ஜினீயரிங் படிக்கிறார்கள்’ என்று கூறி ஆச்சரியப்படுத்தினார்.

02chnvk_muthupandi.jpg முத்துப்பாண்டி

“அவர்களைச் சந்திக்கும்முன், தேசிய அளவில் சிறப்புக் குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட கைப்பந்துப் போட்டியில் சூப்பர் சீனியர் பிரிவில் எங்கள் பிள்ளைகள் வெற்றிக்கோப்பையைத் தட்டி வந்திருக்கிறார்கள். எங்கள் அணியை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்” என்றவர் மைதானத்துக்கு அழைத்துப் போனார். உற்சாகமாகக் கைகுலுக்கிய 8 மாணவர்களும் படிப்பிலும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள்.

“எங்களுக்கு அம்மான்னா டாக்டர் மனோரமாதான். எங்களைக் கண்ணுங் கருத்துமா பார்த்துக்கிற முத்துப்பாண்டியன்தான் எங்க எல்லாருக்கும் அண்ணன். இங்க அக்கா, தம்பி, தங்கைகளா ஒரே குடும்பமா வாழ்கிறோம். பரிதாபத்தோட இங்க வர்ற யாரா இருந்தாலும் எங்க உற்சாகத்தையும் திறமைகளையும் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போவாங்க” எனும் சரவணன் ‘கீ போர்ட்’ வாசிப்பதில் கெட்டிக்காரர். இசையமைப்பாளராக வேண்டும் என்பது இவரது லட்சியம்.

மாறிய மனநிலை

மாநகருக்குள் தொடங்கப்பட்ட இந்த இல்லம் இன்று கிராமத்தில் இயங்க என்ன காரணம்? முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் இயங்கிவந்தாலும் ‘ஹெச்.ஐ.வி.’, ‘எய்ட்ஸ்’ என்றால் பெரும் பீதியுடன் எதிர்கொண்ட மக்களின் மனநிலை இன்று மாறியிருக்கிறதா?

பதில் சொன்னார் முத்துப்பாண்டியன், “மாநகருக்குள் இவ்வளவு பரந்த இடத்தில், இத்தனை அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளோடு ஒரு காப்பகத்தை உருவாக்குவது சாத்தியமே இல்லை. பாசிடிவ் குழந்தைகளுக்கான ‘செஸ்’ செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வந்த சமூகநலத் துறை, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, மாவட்ட நிர்வாகம் ஆகியவை எங்களுக்கு முழுமையான ஆதரவும் வழிகாட்டுதலும் வழங்கின. அது பெரும் ஊக்கமாக இருக்கிறது. எங்கோ இருக்கும் எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் இந்த இல்லத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, கட்டிடங்களை கட்டிக்கொடுத்திருக்கிறது.

எங்கள் இல்லத்தின் இரண்டு பக்கங்களிலும் நத்தம், பண்டிக்காவனூர் என்று இரண்டு பெரிய கிராமங்கள். அந்தக் கிராமங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளில்தான் எங்கள் பிள்ளைகள் படிக்கிறார்கள். இரண்டு கிராம மக்களும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை எங்கள் பிள்ளைகளோடு கொண்டாடும் அளவுக்கு நட்புடன் இருப்பது மட்டுமல்ல, ஹெச்.ஐ.வி. பற்றியும் நன்கு புரிந்துகொண்டு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுக்கு தன்னார்வத் தொண்டர்களாக வரும் அளவுக்கு மக்களின் மனநிலை மாறியிருக்கிறது.

இங்கே வளரும் பிள்ளைகளின் வளர்ச்சியை அவர்களின் உறவினர்கள் வந்து பார்த்து, ஒரு கட்டத்தில் அவர்களை ஏற்றுக்கொண்டு வீட்டுக்கே அழைத்துச் சென்று பராமரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்படிச் செல்லமுடியாத குழந்தைகளுக்கு இதுதான் வீடு. 20 வயதைக் கடக்கும்போது இவர்களுக்கான வேலை, சமூக வாழ்வு ஆகியவைதான் இவர்களுக்கு எதிர்காலத்தில் உள்ள சவால். அதற்கும் வழிமுறைகள் பிறக்கும்” என்கிறார் முத்துப்பாண்டியன், நம்பிக்கை குறையாமல்.

அங்கிருந்து புறப்படுகையில் 16 ஆண்டுகளுக்கு முன், சென்னையிலிருந்த வீட்டிலிருந்து வெளியேறிய குழந்தைகளில் ஒருத்தி இப்படிச் சொன்னாள்:

“நர்சிங் படிக்கணும் அங்கிள். என்னை மாதிரிக் குழந்தைகளுக்கு ‘கேர்’ கொடுக்கணும். அவங்களுக்கு நான் இருக்கேன்னு சொல்லணும்!” என்றாள்.

இந்தக் கனவுகள் பரவட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x