Last Updated : 09 Dec, 2017 12:19 PM

 

Published : 09 Dec 2017 12:19 PM
Last Updated : 09 Dec 2017 12:19 PM

நலம், நலமறிய ஆவல் 12: வலிப்பிலிருந்து விடுதலை பெற...

எனது மாணவர் ஒருவர் (வயது 18) வகுப்பறையில் அடிக்கடி வலிப்பு நோயால் அவதிப்படுகிறார். வாயில் நுரையுடன் கை, கால் இழுத்துக்கொள்கிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு கிடையாதா?

பேராசிரியை எச். பாத்திமா,

மின்னஞ்சல்.

வலிப்பு நோயில் பல வகை உண்டு. அதற்கான காரணங்களும் பலவிதம். இந்த இரண்டையும் அடிப்படையாக வைத்தே ஒருவருக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளையில் வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமித்தொற்று, மூளையில் புழுத் தொல்லை, மூளைக் காய்ச்சல், மூளை உறை அழற்சிக் காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கான முக்கியக் காரணங்கள்.

சிலருக்குப் பரம்பரையாகவும் வலிப்பு வருகிறது. உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு போன்றவையும் வலிப்பு வருவதைத் தூண்டக்கூடியவையே. ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவது, சோடியம் அளவு குறைதல் போன்ற காரணங்களாலும் வலிப்பு வரலாம். சிலருக்கு மன உளைச்சல் காரணமாக வலிப்பு வருவதுண்டு. பல நேரம் எந்தக் காரணத்தையும் கண்டுபிடிக்க முடியாத வலிப்புகளே அதிகமாகக் காணப்படும். ஒருமுறை வலிப்பு வந்தவருக்கு மீண்டும் மீண்டும் வலிப்புவருவதற்கு அதிக சாத்தியம் உண்டு.

வலிப்பின் வகைகள்

மூளையில் எந்தப் பகுதி பாதிக்கப்படுகிறதோ, அதற்கேற்ப வலிப்பின் தன்மை வேறுபடும். மூளையின் ஒரு பகுதியில் மட்டும் ஏற்படும் பாதிப்பால் வருவது ‘பகுதி வலிப்பு’ (Partial seizure). நாம் அவ்வப்போது காண்கிற பொதுவான வலிப்புகள் உடல் முழுவதும் பரவியிருக்கும். இந்த வகைக்கு ‘முழுவீச்சு வலிப்பு’ (Generalized seizure) என்று பெயர்.

உங்கள் மாணவருக்கு இந்த வகை வலிப்பு உள்ளதாகத் தெரிகிறது. இவை தவிர இன்னும் பல துணை வகைகளும் உள்ளன. வலிப்பின் வகைக்கு ஏற்ப சிகிச்சைமுறை மாறுவது மருத்துவ நியதி.

என்ன செய்ய வேண்டும்?

உங்கள் மாணவருக்கு வலிப்பு வந்தால், அருகில் உள்ளவர்கள் இவ்வாறு செய்ய வேண்டும்:

அவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்கவையுங்கள்.

சட்டைப் பொத்தான், இடுப்பு பெல்ட், கழுத்து ‘டை’ போன்றவற்றைத் தளர்த்தி, நன்கு சுவாசிப்பதற்கு வழிவகை செய்யுங்கள்.

மின்விசிறி / கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யுங்கள்.

அருகில் காயத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்.

மூக்குக் கண்ணாடி அணிபவராக இருந்தால், அதை அகற்றிவிடுங்கள்.

வாயில் உமிழ்நீர் வழிந்தால் துடைத்துவிடுங்கள்.

வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் ஆபத்து அதிகம். உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சையைப் பெற அவருக்கு உதவுங்கள். பின்னர் சிறப்பு மருத்துவரிடமோ அல்லது ஏற்கெனவே பார்த்துக்கொண்டிருக்கும் மருத்துவரிடமோ அழைத்துச் செல்லுங்கள்.

என்ன பரிசோதனை?

வலிப்பு வந்தவர்கள் மூளை நரம்பியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். சில அடிப்படை ரத்தப் பரிசோதனைகளுடன், மூளையின் மின்னோட்டத்தை அளவிடும் இ.இ.ஜி., ‘வீடியோ இ.இ.ஜி.’, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன், பெட் (PET) ஸ்கேன், ஸ்பெக்ட் (SPECT) ஸ்கேன் முதலியவற்றை மேற்கொள்ள வேண்டி வரலாம்.

சிகிச்சை என்ன?

உங்கள் மாணவர் முறையாகப் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளாரா, காரணம் தெரிந்து சரியான சிகிச்சை பெறுகிறாரா என்பதைக் கவனியுங்கள்.

இன்றைய நவீன மருத்துவத்தில் வலிப்பைக் குறைக்கவும் மீண்டும் வராமல் தடுக்கவும் நிறைய மாத்திரைகள் உள்ளன. வலிப்பின் வகை, பாதிக்கப்பட்டவரின் வயது ஆகியவற்றைப் பொறுத்து மாத்திரை / மருந்து பரிந்துரை செய்யப்படும். வலிப்பை ஆரம்பநிலையில் கவனித்துவிட்டால் ஒன்று அல்லது இரண்டு வகை மாத்திரைகளே போதும். நல்ல பலன் கிடைத்துவிடும். மாத்திரைகளை ஒருநாள்கூட விடாமல் உட்கொண்டு முறையாகச் சிகிச்சை பெறுகிறவர்களில் 60 முதல் 70 சதவீதம் பேருக்கு வலிப்பு வருவதை முழுவதுமாகத் தடுத்துவிடலாம்.

2 முதல் 3 சதவீத நோயாளிகளுக்கு மட்டும் இந்த மருந்துகள் பலன் அளிப்பதில்லை. அவர்களுக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் / பெட் ஸ்கேன் மூலம் மூளையில் எந்த இடத்தில் வலிப்பு நோய் தொடங்குகிறது என்று கண்டுபிடித்து, அந்த இடத்தில் உள்ள திசுவை மட்டும் அகற்றும் ‘மைக்ரோ அறுவைசிகிச்சை’ தற்போது உள்ளது. இந்த சிகிச்சையைச் செய்துகொள்வதன் மூலம் வலிப்பு நோயிலிருந்து இவர்கள் முற்றிலும் விடுபடமுடியும். ஆனால், இந்த அறுவைசிகிச்சை வலிப்பு நோயாளிக்குத் தேவையா இல்லையா என்பதை மூளை நரம்பியல் மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும்.

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in

முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x