Published : 01 Jul 2014 10:00 AM
Last Updated : 01 Jul 2014 10:00 AM
இன்று யோகாவைப் பலரும் நாடுகிறார்கள். யோகாவும் காலத்துக்கு ஏற்ப வேகமாக நவீனமடைந்துவருகிறது. உடல் உபாதைகள் முதல் மனஅமைதிவரை பல்வேறு நோக்கங்களுக்காக யோகா இன்று பயிலப்படுகிறது. முதுகு வலி, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்காகவும் பலர் யோகாவை நாடும் நிலையில், நவீன அறிவியல் வெளிச்சத்திலும் யோகப் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதில் வியப்பில்லை. அப்படிப்பட்ட ஒரு மையமாக யோகாசனங்களை அன்றாடப் பயிற்சியாகவும் சிகிச்சை முறையாகவும் வழங்கிவருகிறது சென்னை அடையாறில் உள்ள கிருஷ்ண யோகா என்னும் அமைப்பு.
பண்டைய யோகா முறைகள், தற்போதைய மருத்துவம் இரண்டையும் இணைத்து யோகாசனப் பயிற்சிகளை வழங்கிவருகிறது கிருஷ்ண யோகா. சென்னையில் பல ஆண்டுகளாக இதை நடத்திவரும் டாக்டர் கிருஷ்ணராமன் பத்மஸ்ரீ பி.கே.எஸ். ஐயங்காரின் மாணவர். “யோகாவைச் செய்வது முக்கியமல்ல. அதை எப்படிச் செய்கிறோம் என்பதே முக்கியம். யோகாவில் அமரும் நிலை, நிற்பது, உடல் அமைப்பு என ஒவ்வொரு அசைவுகளையும் சரியாகச் செய்ய வேண்டும். அப்போதுதான் யோகாவின் பலனை முழுமையாகப் பெற முடியும்" என்கிறார் கிருஷ்ணராமன்.
குழந்தைகளும் யோகாவும்
சிறு வயதிலிருந்தே யோகாவைக் குழந்தைகளுக்கு ஒரு பழக்கமாக அறிமுகப்படுத்திவிட்டால், அது அவர்களுக்கு வாழ்க்கை முழுக்க உதவி செய்யும் என்பது கிருஷ்ண யோகாவின் அணுகுமுறை. "யோகாவின் ஒவ்வொரு நிலைக்கும், ஆசனத்துக்கும் ஒரு கதையை உருவாக்கி, அதன் மூலம் குழந்தைகளுக்கு யோகாவை அறிமுகப்படுத்துகிறோம். இந்த முறையைப் பின்பற்றுவதால் குழந்தைகளுக்கும் யோகா பிடித்துப்போகிறது. பிராணயாமா போன்றவற்றை சிறு வயதில் இருந்தே செய்துவருவது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்காற்றும்” என்கிறார் பயிற்றுநர்களில் ஒருவரான மருத்துவர் ஃபர்சானா.
யோகாவே மருந்து
நோய்களை ‘சிகிச்சை யோகா’ மூலம் குணப்படுத்துவதைப் பல ஆண்டுகளாக வெற்றிகரமாகச் செய்துவருவதாகச் சொல்கிறார் கிருஷ்ணராமன். "யோகா செய்வதால் சில சமயம் அறுவை சிகிச்சையைக்கூடத் தவிர்க்க முடியும். ஆனால், பலனை உடனடியாக எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். இந்த யோகா சிகிச்சையில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான அம்சம் பொறுமை. மருந்துகளோடு இணைந்து நோயை வேகமாக குணப்படுத்துவதை, இந்த யோகா சிகிச்சை சாத்தியப்படுத்துகிறது. லிகமென்ட் எனப்படும் எலும்புகளைப் பிணைக்கும் தசைநாரில் ஏற்படும் பிரச்சினைகளுக்குக்கூட யோகாவில் தீர்வு இருக்கிறது," என்கிறார் இவர்.
உடலே நம் வாகனம்
உடல்தான் மனித வாழ்வுக்குப் பிரதானம். அந்த உடலுடன் இணைப்பை ஏற்படுத்துவதற்குப் பெரும் உதவியாக யோகா இருக்கிறது. யோகாவைத் துல்லியமான அறிவியல் என்று வரையறுக்கும் கிருஷ்ணராமன், "உடலைப் புத்துணர்ச்சியாக உணர வைப்பதில் யோகாவுக்கு நிகர் எதுவும் இல்லை. பல மணி நேர ஜிம் பயிற்சியால் செய்ய முடியாததை, யோகாவால் எளிமையாக செய்துமுடித்துவிட முடியும். ஏரோபிக் பயிற்சிகள் ஏற்படுத்தும் விளைவைக்கூட யோகாவில் கொண்டுவர முடியும்," என்கிறார்.
உடல் பருமனுக்குத் தீர்வு
உடல் பருமனைச் சமாளிப்பதற்குப் பலரும் பல வகையான சோதனைகளை மேற்கொண்டுவருகிறார்கள். ஆனால் எளிமையான வழிகள் மூலம் உடல் பருமனை யோகாவால் கட்டுப்படுத்த முடியும் என்று சொல்லும் கிருஷ்ணராமன், "110 கிலோ எடையுடன் நாற்காலி உதவி இல்லாமல் அமர்வதற்குகூட சிரமப்பட்ட பெண்மணியை சிகிச்சை யோகாவின் உதவியோடு குணப்படுத்தியிருக்கிறோம்," என்கிறார்.
மதம் அவசியமில்லை
யோகாசனப் பயிற்சிகளைச் செய்வதில் பலருக்கு இருக்கக்கூடிய ஒரு சிக்கல் அது மதத்தை, இந்திய ஆன்மிகத்தை முன்னிறுத்தக்கூடியது என்பதுதான். "அப்படிப்பட்ட எண்ணத்துக்கு அவசியமே இல்லை" என்று சொல்லும் கிருஷ்ணராமன், யோகாவுக்கும் மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. யோகாவை எந்த மதச் சார்பும் இல்லாமல் அணுக முடியும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். "யோகாவை முழுமையான ஒரு அறிவியலாகப் பார்க்க முடியும். இதற்கு எந்த மதச் சாயமும் அவசியம் இல்லை", என்கிறார் ஃபர்சானா.
யோகாசனப் பயிற்சிகள் சிலவற்றில் ஸ்லோகங்கள் சொல்லித் தரப்படுகின்றனவே என்று கேட்டதற்கு, "ஸ்லோகங்கள் சொன்னால்தான் யோகா என்பதல்ல. இது அடிப்படையில் உடல், மனம், மூச்சு ஆகியவற்றின் ஒருங்கிணைவைச் சத்தியப்படுத்துகிறது. மன ஒருமைப்பாட்டுக்குப் பயிற்சி அளிக்கிறது. பக்தியோ, வழிபாடோ தேவைப்படுபவர்கள் அவற்றின் துணையோடு யோகாவை அணுகலாம். மற்றவர்கள், அவற்றின் துணை இல்லாமலேயே யோகாவைப் பயிற்சி செய்யலாம். இரண்டுக்கும் யோகாவில் இடம் உண்டு" என்கிறார் கிருஷ்ணராமன்.
பயிற்சியாளர் அவசியம்
வலிமை, நெகிழ்வுத்தன்மை, தாங்கும் திறன் இந்த மூன்றும் சமமாகக் கலந்திருக்கும்போது, அது ஒரு முழுமையான யோகாவாக இருக்கும் என்பதை கிருஷ்ணராமன் விளக்குகிறார். "ரத்தத்தின் திசைவேகத்தைக்கூட யோகாவால் கட்டுப்படுத்த முடியும். ஆனால் யோகாவைப் பயிற்சியாளர் இல்லாமல் செய்வதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும்" என்கிறார் ஃபர்சானா.
அறிவியல் கலை
யோகாசனப் பயிற்சிகள், யோகா சிகிச்சை என்றதும் தன்னால் முடியுமா, உடம்பு வளையுமா என்பது போன்ற கேள்விகள் சிலருக்கு எழலாம். அவரவர் உடல்நிலைக்கு ஏற்பப் பயிற்சிகளையும் சிகிச்சைகளையும் வழங்குவதால் இதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்கிறார் ஃபர்சானா. கயிறு, கரக்கட்டைகள், மேசை முதலான பல கருவிகள் மூலம் பயிற்சிகள் இங்கே எளிமையாக்கப்படுகின்றன. ஒவ்வொருவரது உடல்நிலை, அவரவர் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு ஏற்ப யோகா சிகிச்சையும் பொதுவான யோகப் பயிற்சிகளும் தரப்படுகின்றன. "அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத எதையும் இங்கே முன்னிறுத்துவதில்லை" என்கிறார் கிருஷ்ணராமன்.
சிகிச்சை என்பது யோகாவின் ஒரு பலன்தான் என்று சொல்லும் கிருஷ்ணராமன், நமது வாழ்க்கையைச் செறிவுபடுத்திக்கொள்ள உதவும் அறிவியல்பூர்வமான கலையாகவே யோகாவைப் பார்க்க வேண்டும் என்கிறார். "இது வெறும் சிகிச்சை மட்டுமல்ல. வளமான வாழ்வுக்கான வழி" என்று முத்தாய்ப்பாகக் கூறுகிறார்.
எம்.பி.பி.எஸ். பட்டமும் நெஞ்சக சிகிச்சைக்கான பயிற்சியும் பெற்ற டாக்டர் கிருஷ்ணராமன், பி.கே.எஸ். அய்யங்காரிடம் முறையாக யோகாசனங்களும் யோக சிகிச்சை முறையையும் கற்றவர். யோகா செய்யும்போது உடலில் ஏற்படும் மாற்றங்கள், உடலின் உள் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை நவீன மருத்துவக் கருவிகள் மூலம் ஆய்வுசெய்து யோகாவின் விளைவுகளை இவர் பரிசோதித்திருக்கிறார். யோகாசனத்தை முறையாகச் செய்யும்போது ரத்த ஓட்டத்திலும் இதயத் துடிப்பிலும் ஏற்படும் மாற்றங்களையும், அதே யோகாசனத்தைத் தவறாகச் செய்யும்போது விளைவுகள் மாறுவதையும் உரிய ஆய்வுகள் மூலம் இவர் நிறுவியிருக்கிறார். இந்த விளைவுகளை ஆதாரங்களுடன் விளக்கி யோகா அண்ட் மெடிக்கல் சயின்ஸ், ‘எ மேட்டர் ஆஃப் ஹெல்த்: இண்டராக்ஷன் ஆஃப் யோகா அண்ட் வெஸ்டர்ன் மெடிசின் ஃபார் பிரிவென்ஷன் அண்ட் கியூர்’ ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார்.
டாக்டர் கிருஷ்ணராமன் தொடர்புக்கு: 044-24900980 மின்னஞ்சல்: maildrkr@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT