Published : 07 Oct 2017 11:47 AM
Last Updated : 07 Oct 2017 11:47 AM
அமெரிக்க ராணுவ மருத்துவமனையில் மிகப்பெரும் பிரச்சினை. போரில் ஈடுபட்டுத் தீக்காயங்களுடன் திரும்பும் ராணுவ வீரர்களுக்குப் பொதுவாக வலி அதிகமாக இருக்கும். அவர்கள் பல முறை அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டியிருக்கும். அவர்களுக்குத் தீக்காயங்களால் ஏற்படும் வலி, மரணத்தைவிட கொடுமையானது. வலி நிவாரணியாக ‘மார்ஃபின்’ கொடுப்பார்கள். இது போதை மருந்தை ஒத்த மருந்து வகை. அதைத் தொடர்ந்து உட்கொண்டுவர, சில நட்களில் அது தரும் போதைக்குப் பலரும் அடிமையாகிவிடுவார்கள்.
அப்படி ஈராக்கிலிருந்து தீக்காயங்களுடன் வந்த சாம் என்பவருக்கு மார்ஃபின் எடுத்துக்கொள்ள விருப்பமில்லை. போதைப் பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால், தன் எதிர்காலமே கேள்விக்குள்ளாகும் எனப் பயந்தார். மருத்துவரிடம் வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று கேட்டார். சிறிது நேரம் யோசித்த மருத்துவர் அவரை ‘வெர்சுவல் ரியாலிட்டி’ எனும் மெய்நிகர் வடிவிலான வீடியோ கேம் ஒன்றை விளையாடச் சொன்னார்.
வீடியோ கேம் நிவாரணி?
மெய்நிகர் என்பது நவீனத் தொழில்நுட்பம். கண்களுக்குக் கவசம்போல ஒரு கருவியை மாட்டிக்கொண்டால், நீங்கள் பார்க்கும் காட்சி முப்பரிமாணமாக, அதாவது 3டி வடிவத்தில் விரியும். சிறிது நேரத்தில் நீங்களே அந்த உலகுக்குள் சென்றுவிட்டதைப் போன்ற பிரமை உருவாகும்.
‘ஸ்னோ வேர்ல்ட்’ எனும் மெய்நிகர் வீடியோ கேமை விளையாட ஆரம்பித்தார் சாம். வலி எடுக்கும் போதெல்லாம் விளையாடினார். நம்புங்கள், சாமின் வலி பல மடங்கு குறைந்துவிட்டது. அன்றிலிருந்து சாமுவுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர், வீடியோ கேம்களை ‘டிஜிட்டல் மார்ஃபின்’ என்று அழைக்கத் தொடங்கினார். இதில் சுவாரசியமான விஷயம், அந்த மருத்துவரே சில மாதங்களுக்கு முன் வீடியோ கேம்களுக்கு அடிமையாகி இருந்தவர்தான்.
இன்று அமெரிக்காவில் பல வலி மேலாண்மை மையங்கள், ‘மெய்நிகர் வீடியோ கேம்’களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. இதைப் பற்றி ஆய்வுகளும் நடந்துவருகின்றன.
பக்கவிளைவுகள்
'ஸ்னோ வேர்ல்ட்' எனும் வீடியோ கேமை உளவியலாளர்களான டேவிட் பேட்டர்ஸன், ஹன்ட்டர் ஹாஃப்மேன் ஆகியோர் உருவாக்கினார்கள். வலியைப் பற்றிப் பல ஆய்வுகள் செய்துவந்த இவர்கள், முதலில் போதைப் பொருட்களுக்கு நிகரான மார்ஃபின் வகை மருந்துகள் உடலில் என்ன மாற்றங்களைச் செய்கின்றன என ஆராய்ந்தார்கள். வீடியோ கேம்களால் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி அறிந்த அவர்கள், மெதுவாக வீடியோ கேமை இந்த சிகிச்சைக்குப் பயன்படுத்த முடிவு செய்தார்கள்.
அந்த கேமை விளையாடும்போது மூளையை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள், அதன் விளைவைப் பார்த்து ஆச்சரியமடைந்தார்கள். மூளையில் வலி உணரும் பகுதிகளை மார்ஃபின் எப்படிச் செயலிழக்கச் செய்ததோ, அதேபோல் வீடியோ கேம் விளையாடும்போதும் வலியை உணரும் பகுதிகள் மந்தமாகச் செயல்படுவதைக் கண்டுபிடித்தார்கள்.
வீடியோ கேம் வலியை குறைப்பது நல்ல விஷயம்தானே என்று கேட்கலாம். நிச்சயம் நல்ல விஷயம்தான். வலிநிவாரணிகளால் வலி உள்ளவர்களுக்கு ஆயிரம் பக்கவிளைவுகள் வரும். வலி இல்லாதவர்கள் உண்டால், அந்தப் பக்கவிளைவுகள் இரண்டு மடங்காக இருக்கும். வலிக்கு வீடியோ கேம் சிகிச்சை சரி. நல்ல மூளை வளத்துடன் இருக்கும் நம் குழந்தைகள் வீடியோ கேம்களுக்கு அடிமையாக வேண்டுமா?
(அடுத்த வாரம்: மூளையில் ஏற்படுத்தும் பாதிப்பு)
கட்டுரையாளர், டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: write2vinod11@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT