Published : 18 May 2023 03:54 PM
Last Updated : 18 May 2023 03:54 PM
குழந்தைகளின் விருப்பத்துக்குரிய விஷயங்களில் வண்ண கிரேயானும் ஒன்று. கிரேயான் பயன்படுத்தாத குழந்தைகளே இல்லை எனலாம். இன்று பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான கிரேயான்கள் மென்மையான பாரஃபின் மெழுகு மூலம் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், பழங்காலத்தில் கிரேயான் எப்படித் தயாரிக்கப்பட்டது தெரியுமா?
கிரேயான்கள் எப்போது, யாரால், எங்கே உருவானது என்று உறுதியாகச் சொல்ல இயலவில்லை. பழங்காலத்தில் கரியும் எண்ணெய்யும் சேர்த்து கிரேயான் போன்ற ஒரு பொருளை உருவாக்கி, பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அது பயன்படுத்துவதற்கு அவ்வளவு எளிதாக இல்லை. அதனால் பின்னர் தேன் மெழுகில் வண்ணங்களைக் கலந்து, ஓவியங்களைத் தீட்ட ஆரம்பித்தனர். இந்த முறையை எகிப்தியர்கள், ரோமானியர்கள், கிரேக்கர்கள் இன்றும் பயன்படுத்தி வருகிறார்கள்.
நவீன கிரேயான்களை உருவாக்கியவர்கள் ஐரோப்பியர்கள். 18ஆம் நூற்றாண்டில் பலரும் ஓவியங்களில் கிரேயான்களைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். கிரேயான்களின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க, உருவாக்கும் விதத்திலும் மாற்றங்கள் வந்துகொண்டே இருந்தன. 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் மெழுகுடன் எண்ணெய் கலந்து, வண்ணங்களைச் சேர்த்து கிரேயான்கள் தயாரிக்கப்பட்டன.
அமெரிக்க சகோதரர்கள் எட்வின் பின்னி, ஹெரால்டு ஸ்மித் ஆகிய இருவரும் இரு வண்ண கிரேயான்களை உற்பத்தி செய்து வந்தனர். ஒருநாள் பள்ளிக்குச் சென்றபோது, குழந்தைகள் கிரேயான்கள் பயன்படுத்துவதைக் கண்டனர். கைகளில் ஒட்டாத, பயன்படுத்த எளிதான, நச்சுத்தன்மையற்ற கிரேயான்களை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். 1903ஆம் ஆண்டு தங்கள் எண்ணத்தைச் செயல்படுத்திக் காட்டினர்.
அமெரிக்காவைச் சேர்ந்த கிரேயோலா என்கிற கிரேயான் நிறுவனம் மிகவும் புகழ்பெற்றது. 120 ஆண்டுகளாக கிரேயான்களை உற்பத்தி செய்து வருகிறது. ஆண்டுக்கு 300 கோடி கிரேயன்களை விற்பனை செய்கிறது. இதே நிறுவனம் பென்சில்வேனியாவில் 1,23,000 கிரேயான்களைக் கொண்டு, 613 கிலோ எடையில், 15.6 அடி உயரத்தில், உலகின் மிகப்பெரிய நீல கிரேயானை வடிவமைத்துள்ளது.
- வினோதினி குமார், பயிற்சி இதழாளர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT