Published : 26 Apr 2023 05:45 AM
Last Updated : 26 Apr 2023 05:45 AM
நிலா என்கிற துணைக்கோளால் நம் பூமிக்கு என்ன நன்மை? நிலா இல்லாவிட்டால் என்ன ஆகும், டிங்கு?
- ஜெப் ஈவான், 6-ம் வகுப்பு, புனித பாட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.
அருமையான கேள்வி. சூரியனின் ஒளியை நிலா பிரதிபலிப்பதால்தான் இரவில் நமக்கு வெளிச்சம் கிடைக்கிறது. நிலா இல்லாவிட்டால் இரவு நேரம் இருளில் மூழ்கிவிடும். நம் பூமிக்கு அருகில் இருக்கும் கோள் வெள்ளி. ஆனால், அதிலிருந்து கிடைக்கும் வெளிச்சம் நமக்குப் போதாது.
வெள்ளியைப் போன்று 2 ஆயிரம் மடங்கு வெளிச்சம் கொண்டது நம் நிலா. பூமி மீது நிலாவும் நிலா மீது பூமியும் ஈர்ப்பு விசையைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. நிலா இல்லாவிட்டால், பூமி வேகமாகச் சுற்ற ஆரம்பித்துவிடும். அதாவது ஒருநாள் என்பது 6 முதல் 12 மணி நேரத்துக்குள் முடிந்துவிடும்.
ஓர் ஆண்டு என்பது ஆயிரம் நாள்களுக்கு மேல் சென்றுவிடும். நிலாவின் ஈர்ப்பு விசையால் பூமியில் உள்ள கடல்களில் நீர் மட்டம் உயர்கிறது, குறைகிறது (ஓதம் - Tide). நிலா இல்லாவிட்டால் நீர் மட்டம் உயர்வதும் குறைவதும் அளவில் வெகுவாகக் குறைந்துவிடும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா வருவதால்தான் சூரியன் மறைக்கப்பட்டு, சூரிய, சந்திர கிரகணங்கள் உருவாகின்றன.
நிலா இல்லாவிட்டால் அற்புதமான கிரகணங்களைப் பார்க்க முடியாது. பூமியின் அச்சு இப்போது 23.5 டிகிரி சாய்ந்திருக்கிறது. நிலா இல்லாவிட்டால் சாய்வில் மாற்றங்கள் வரலாம். அதனால் வானிலையில் தாக்கம் ஏற்படலாம். பருவக் காலங்கள் இல்லாமலே போகலாம்.
அல்லது தீவிரமான பருவக் காலங்கள் உருவாகலாம். இவை எல்லாம் அறிவியல் காரணங்கள். மனிதர்களைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு நிலாவைக் காட்டி சோறு ஊட்ட முடியாது, ‘நிலா நிலா ஓடிவா’ என்று பாட முடியாது, நிலாவில் பாட்டி வடை சுடுவதாகக் கதைவிட முடியாது, நிலாவை விதவிதமாக வரைய முடியாது, கவிஞர்கள் நிலாவை வர்ணித்து கவிதை எழுத முடியாது, அமெரிக்கா அடுத்த ஆண்டு நிலாவுக்குப் பெண்களை அழைத்துச் செல்ல இயலாது, ஜெப் ஈவான்.
காய் இனிப்பாக இல்லாதபோது பழம் மட்டும் எப்படி இனிக்கிறது, டிங்கு?
- ர. ஷக்தி, 6-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏகாட்டூர், திருவள்ளூர்.
காய்களில் ஃபிரக்டோஸ் (fructose)எனப்படும் சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கிறது. காய்கள் பழுக்கும்போது ஃபிரக்டோஸின் அளவு அதிகமாகிறது. அதனால் பழங்கள் இனிக்கின்றன. பெரும்பாலான பழங்களில் விதைகள் கசப்புச் சுவையாக இருக்கும். உயிரினங்கள் பழங்களைத் தின்றுவிட்டு விதைகளைத் துப்பினால்தான், புதிய தாவரங்கள் உருவாகும் என்பதற்காக இயற்கை அளித்துள்ள தகவமைப்பு இது, ஷக்தி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT