Last Updated : 02 Jul, 2014 09:00 AM

 

Published : 02 Jul 2014 09:00 AM
Last Updated : 02 Jul 2014 09:00 AM

தூக்கம் கண்களைத் தழுவுமா?

கலர் கலராய் கனவு காண்பதற்கு முதலில் நாம் தூங்க வேண்டும். தவிர்க்க முடியாத, தள்ளிப்போட முடியாத விஷயங்களில் ஒன்று தூக்கம். தூக்கம் பற்றிய சுவாரசியமான விஷயங்களைப் பார்ப்போமா?

# தூக்கத்தை ஒத்திப்போடும் ஒரே பாலூட்டி மனித இனம் மட்டுமே.

# தூக்கத்துக்கு இடையில் சராசரியாக 6 முறை விழிக்கிறோம்.

# ஒரு நாளைக்கு 7 மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்கினால், ஆயுசு குறையும்.

# ஒரு வாரத்துக்கு சரியாகத் தூங்கவில்லை என்றால், 1 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கும். தூக்கமின்மை பசியைத் தூண்டும்.

# பொதுவாக மனிதர்கள் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பங்கு தூங்குகிறார்கள். அதாவது 25 ஆண்டுகள்.

# ஜப்பானில் வேலை நேரத்தில் தூங்குவது, கடுமையான உழைப்புக்கு ஓய்வு எடுப்பது என்று கருதப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

# சில திபெத்திய பௌத்தத் துறவிகள் உட்கார்ந்துகொண்டே தூங்குகிறார்கள்.

# தூங்கினால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

# தூங்கும்போது தும்ம முடியாது.

# 16-19 டிகிரி செல்சியஸ்தான் நன்றாகத் தூங்குவதற்கான வெப்ப நிலை என்று ஆய்வு சொல்கிறது. மேலே போர்த்தாமல் இருந்தால் 30-32 டிகிரி செல்சியஸில்கூட நன்றாகத் தூங்கலாம்.

# விளையாடிவிட்டுத் தூங்கச் சென்றவர்கள் அது பற்றி கனவு கண்டு தூங்கி எழுந்து, அடுத்த நாள் விளையாடியபோது சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள்.

# கனவில் ஏற்கெனவே பார்த்த முகங்களே வரும்.

# நம்மை பயமுறுத்தும் விஷயங்களைப் பற்றியே பெரும் பாலும் கனவு காண்கிறோம். வளர்ந்தவர்கள் மனிதர்களைப் பற்றியும், குழந்தைகள் விலங்குகளைப் பற்றியும் அதிக கனவுகளைக் காண்கிறார்கள்.

# சில பேர் 2 மாதம் வரை சாப்பிடாமல் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், 11 நாளுக்கு மேல் தூங்காமல் வாழ முடியாது. சாதாரணமாக 2 நாள்களுக்கு ஒருவரால் தூங்காமல் இருக்க முடியும்.

# 1964-ல் சாண்டியாகோவைச் சேர்ந்த ராண்டி கார்ட்னர் 17 வயதில் 11 நாட்களுக்கு (264 மணி நேரம்) தூங்காமல் இருந்தார். நேரம் ஆக ஆக அவருக்கு மாயத் தோற்றங்களும், மாய ஒலிகளும் காதில் கேட்டன. கடைசியில் அவர் தூங்கப் போனபோது 15 மணி நேரமே தூங்கினார்.

# அலாரம் கடிகாரங்கள் வருவதற்கு முன்பு இங்கிலாந்து, அயர்லாந்தில் தொழிற்சாலைகளில் வேலை பார்த்தவர்கள் ஒவ்வொரு நாளும் வீட்டின் கதவைத் தட்டி எழுப்புவதற்கு ஆட்களை வைத்திருந்தார்கள். வீட்டுக்காரர் எழுந்திருக்கும் வரை குச்சிகளை வைத்து அவர்கள் தட்டிக்கொண்டே இருப்பார்கள். 1920 வரை இந்த முறை இருந்தது.

# சில நத்தைகள் 3 ஆண்டுகள் வரை தூங்கும்.

# பூனைகள் தங்கள் வாழ்க்கையில் 70 சதவீத நேரம் தூங்குகின்றன.

# கடல் நீர் நாய்கள் தூங்கும்போது கைகளைப் பிணைத்துக்கொண்டு தூங்கும். அதன் மூலம் அலையில் அடித்துச் செல்லப்படாமல் இருக்கின்றன.

# சில உயிரினங்கள் தூங்கும் போது பாதி மூளையை மட்டுமே ஓய்வுக்கு அனுப்புகின்றன. ஓங்கில்கள், திமிங்கிலங்கள் இப்படிச் செய்வதால் தண்ணீரின் மேற்பரப்பில் இருந்து காற்றை சுவாசிக்கவும், எதிரிகள் வருவதை உணரவும் பயன்படுகிறது. வாத்துகள் ஒரு கண்ணை மூடிக்கொண்டு, பாதி மூளையை ஓய்வுக்கு அனுப்புகின்றன. ஒரு சில பறவைக் குழுக்களில் சில பறவைகள் விழித்திருக்கும்போது, மற்ற பறவைகள் தூங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x