Published : 12 Apr 2023 06:12 AM
Last Updated : 12 Apr 2023 06:12 AM
தொலைபேசி, அலைபேசிகளில் ஏன் தவறான (wrong calls) அழைப்புகள் வருகின்றன, டிங்கு?
- பி. லியோ விமல், சவுத் ரோட்டரி மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளி, திருப்பூர்.
யாராவது தவறாக எண்களை அழுத்தும்போது தவறான அழைப்பு வருகிறது. யாராவது நம் எண்ணைத் தவறாகச் சேமித்து வைத்து, தொடர்புகொள்ளும்போது அது தவறான அழைப்பாக நமக்கு மாறிவிடுகிறது. ஏமாற்றுக்காரர்கள், வியாபார நிறுவனங்கள் நம் எண்களைப் பெற்று, நம்மை அழைக்கும்போது அது நமக்குத் தவறான அழைப்பாகவே ஆகிவிடுகிறது, லியோ விமல்.
பூனைக்கு இனிப்பைக் கொடுத்தால் அது விஷமாக மாறிவிடுமா, டிங்கு?
- ர. யோகவர்ஷனா, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
பூனைக்கு இனிப்பைக் கொடுத்தால் அது விஷமாக மாறிவிடாது. ஆனால், பூனையின் உடல் நலத்துக்கு இனிப்பு நன்மை செய்யாது. பூனைகள் இறைச்சியைச் சாப்பிடக்கூடிய விலங்குகள். வெகு குறைவாக கார்போஹைட்ரேட்டை எடுத்துக்கொள்கின்றன. சர்க்கரையோ இனிப்புகளோ இயற்கையானவை அல்ல. இந்த இனிப்புகளைப் பூனைகளால் எளிதில் ஜீரணம் செய்ய இயலாது.
ஒருவேளை இனிப்பைச் சாப்பிட்டாலும் ஒவ்வாமையால் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பூனைகளுக்கு மட்டுமல்ல, எந்த விலங்குக்கும் நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களைக் கொடுக்காமல் இருப்பது நல்லது. நாம் விலங்குகளின் மீது உண்மையான அன்பு வைத்திருந்தால், நமக்குப் பிடித்ததைக் கொடுக்கக் கூடாது. அந்த விலங்குகள் சாப்பிடும் உணவைத்தான் வழங்க வேண்டும், யோகவர்ஷனா.
நிலா ஏன் என்னைப் பின்தொடர்ந்து வருகிறது, டிங்கு?
- வ. தீபேஷ், 7-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, ஏகாட்டூர், திருவள்ளூர்.
உங்களை மட்டுமல்ல, யார் நடந்தாலும் நிலா நம்மைப் பின்தொடர்ந்து வருவது போலத்தான் இருக்கும். நிலா வெகு தொலைவில் இருக்கிறது. நிலாவுக்கும் பூமிக்கும் இடையேயான தொலைவுடன் நாம் பயணித்த தொலைவை ஒப்பிட்டால் மிக மிகக் குறைவான தொலைவாக இருக்கும்.
எனவே, நாம் பயணித்த தொலைவு நிலாவைக் கவனிக்கும் கோணத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. நிலா அதே கோண நிலை, அளவுகளில் தோன்றுகிறது. எனவே, நாம் நகரும்போது அது நம்முடன் நகர்வதுபோல் தெரிகிறது, தீபேஷ். நிஜமாக நிலா உங்களையோ நம்மையோ பின்தொடர்வதில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT