Published : 05 Apr 2023 06:07 AM
Last Updated : 05 Apr 2023 06:07 AM

டிங்குவிடம் கேளுங்கள்: செயற்கைக்கோள்கள் ஒன்றுடன் மற்றொன்று மோதுமா?

இந்தியாவே நூற்றுக்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியிருக்கிறது. இன்னும் செலுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. இந்தியாவைப் போன்று பல நாடுகளும் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திவருகின்றன. இதனால் விண்வெளியில் நெரிசல் ஏற்பட்டு, ஒன்றுடன் மற்றொன்று அவை மோதிக்கொள்ளாதா, டிங்கு?

- ஜெப் ஈவான், 6-ம் வகுப்பு, புனித பாட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.

நல்ல கேள்வி. கடந்த 50 ஆண்டுகளில் செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இன்று செயற்கைக்கோள்களை அனுப்புவது எளிதாகவும் செலவு குறைந்ததாகவும் இருக்கிறது. அதனால் அரசாங்கம், ராணுவம் மட்டுமின்றி வணிக நிறுவனங்களும் செயற்கைக்கோள்களை அனுப்பிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு செயற்கைக்கோளும் குறிப்பிட்ட வட்டப்பாதையில் சுற்றும்படிதான் அனுப்பப்படுகிறது.

அதனால் ஒரு செயற்கைக்கோள் இன்னொரு செயற்கைக் கோளுடன் மோதுவதில்லை. செயற்கைக்கோள்கள் இயங்கிக்கொண்டிருந்தாலும் இயக்கத்தை நிறுத்தினாலும் அவை பூமியைச் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி, உதிரிபாகங்களும் விண்வெளிக் குப்பைகளும்கூட பூமியைச் சுற்றி வந்துகொண்டுதான் இருக்கின்றன. இவை எல்லாம் பூமியின் ஈர்ப்பு விசைக்கு மேலே சுற்றி வரும்போது பிரச்சினை வராது. பூமியின் ஈர்ப்பு விசைக்குள் வரும்போது பலத்த சேதத்தை உருவாக்கலாம்.

அதனால்தான் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவும் ஜப்பானிய விண்வெளி மையமும் இணைந்து, செயல்படாத செயற்கைக்கோள்களை அப்புறப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இப்போதே விண்வெளிக்குச் செலுத்தப்படும் விண்கலங் களுக்குச் செயற்கைக்கோள்களால் இடையூறு இருக்கிறது, ஜெப் ஈவான்.

விளக்கு வைக்கும்போது பின்வாசல் கதவை அடைக்கச் சொல்கிறார்களே ஏன், டிங்கு?

- கே. ரேவதிஸ்ரீ, 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாரூர்.

மின்சார வசதி இல்லாத காலத்தில் அவசியமான இடங்களில் ஒன்றிரண்டு விளக்குகளை ஏற்றி வைப்பார்கள். வீட்டின் மற்ற பகுதிகள் இருளாக இருக்கும். பெரும்பாலும் வீட்டின் பின்பகுதியில்தான் சமையலறை இருக்கும். மாலை நேரத்தில் வேலைகள் முடிந்துவிடுவதால், எல்லாரும் முன் வாசலுக்கு வந்துவிடுவார்கள்.

அப்போது பின்பக்கக் கதவு திறந்திருந்தால் பாம்பு, விஷப்பூச்சிகள், திருடர் என நுழைந்துவிடக்கூடும். அதனால், இருட்டும்போது அதாவது விளக்கு வைக்கும்போது பின்பக்கக் கதவைத் தாழிடச் சொன்னார்கள். அது பின்னர் மின்சார வசதி வந்து, வீடே வெளிச்சமான பிறகும் பழக்கத்தால் சொல்லப்படுகிறது, ரேவதிஸ்ரீ.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x