Published : 06 Sep 2017 10:21 AM
Last Updated : 06 Sep 2017 10:21 AM

டிங்குவிடம் கேளுங்கள்! - சிலந்தி ஏன் தன் வலையில் சிக்கிக்கொள்வதில்லை?

சாக்ரடீஸ், பிளாட்டோ போன்று அந்தக் காலத்தில் பெண் அறிஞர்கள் யாராவது இருந்திருக்கிறார்களா டிங்கு?

– எம். சாய் லக்ஷ்மி, சாத்தூர்.

ஹைபேஷா என்ற அறிஞர் இருந்திருக்கிறார். சுமார் 1,600 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் வாழ்ந்தவர். சிந்தனையாளர், கணிதவியலாளர், வானியலாளர் என்று பல துறைகளில் சிறந்து விளங்கியவர். புகழ்பெற்ற அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தின் நிர்வாகியாகவும் ஆசிரியராகவும் இருந்தவர் தியோன். இவரது மகள்தான் ஹைபேஷா. கிரேக்கம், இத்தாலி போன்ற நாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயின்றார். திரும்பிவந்தவர், கணித ஆராய்ச்சியை மேற்கொண்டார். எளிய முறையில் விளக்க உரை எழுதினார். மாணவர்களுக்குப் பாடம் எடுத்தார்.

6chsuj_Tinku.png

தத்துவம், கணிதம், பகுத்தறிவு, இலக்கியம், அரசியல் போன்ற துறைகளில் அவர் பெற்றிருந்த ஞானத்தால் கல்விக்கூடங்களிலும் மக்கள் கூட்டத்திலும் உரையாற்றினார். இவரது புகழ் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. பல நாட்டு மன்னர்கள், அறிஞர்கள், செல்வந்தர்கள் தங்கள் குழந்தைகளை ஹைபேஷாவிடம் கல்வி கற்க அழைத்துவந்தனர்.

அறிஞர்கள் பலர் இவருடன் தர்க்கம் செய்வதற்குப் போட்டி போட்டனர். ஹைட்ரோமீட்டர், ஆஸ்ட்ரோலோப் போன்ற கருவிகளையும் கண்டுபிடித்தார். சூரியக் குடும்பத்தைச் சுற்றிவரும் கோள்களின் பாதை நீள்வட்டமானது என்பதையும் இவர் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள். 1,200 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோஹனஸ் கெப்ளர் இதை உறுதி செய்தார்.

பெண்களைப்போல் உடை அணியாமல் அறிஞர்களைப்போல் உடுத்தினார். தானே குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டிச் சென்றார். அறிவு, துணிவு, தன்னம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்ந்த பகுத்தறிவாளரான ஹைபேஷா, மதவெறியர்களால் கொலை செய்யப்பட்டார்.

அவரது எழுத்துகளும் கண்டுபிடிப்புகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. எஞ்சிய சிலவற்றை வைத்தும் அவரது சீடர்கள் மூலமாகவும்தான் ஹைபேஷாவை உலகம் அறிந்துகொண்டது சாய் லக்ஷ்மி.

பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் ஓடியாடி விளையாடுகிறேன். பிறகு பாடம் படிக்கிறேன். சாப்பிட்டவுடன் 9 மணிக்கெல்லாம் தூக்கம் வந்துவிடுகிறது. என் தூக்கத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது டிங்கு?

– ப்ராங்க் ஜோயல், 4-ம் வகுப்பு, ஜெயின் மேல்நிலைப் பள்ளி, மதுரை.

உங்களின் தூக்கத்தை ஏன் கட்டுப்படுத்த வேண்டும் ப்ராங்க் ஜோயல்? விளையாடி, படித்து, உணவருந்திய பிறகு தூங்குவதுதானே நியாயம்! அதுவும் நான்காம் வகுப்பில் படிக்கும்போதே இரவு கண்விழித்துப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது 8 மணி நேரமாவது நீங்கள் தூங்குவதுதான் நல்லது. சரியாகத்தான் இருக்கிறீர்கள், கவலை வேண்டாம்.

சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் பார்த்ததுண்டா டிங்கு?

– ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

நான் அதிகாலையிலேயே எழுந்துவிடுவதால் சூரிய உதயத்தை தினமுமே பார்த்துவிடுவேன் ராஜசிம்மன். சூரிய அஸ்தமனத்தை அரிதாகத்தான் பார்த்திருக்கிறேன். ஏனென்றால், அந்த நேரத்தில் நான் அறைக்குள் அமர்ந்து உங்களின் கேள்விகளுக்குப் பதில் எழுதிக்கொண்டிருப்பேன்.

சிலந்தி வலையில் பூச்சிகள் மாட்டிக்கொள்கின்றன. ஆனால் சிலந்தி ஏன் மாட்டிக்கொள்வதில்லை டிங்கு?

– ஆர். வர்ஷா, 9-ம் வகுப்பு,அரசினர் மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.

நல்ல கேள்வி வர்ஷா. தான் பின்னும் வலையில் தானே மாட்டிக்கொள்வதானால் வலை பின்ன வேண்டியதே இல்லை. ஒவ்வொரு சிலந்தியும் தனக்கே உரிய, பிரத்யேகமான வலையைப் பின்னுகிறது. இப்படிப் பின்னும்போது பூச்சிகளைச் சிக்க வைப்பதற்காக ஆங்காங்கே கண்ணி வைக்கும். தான் வைத்த கண்ணிகளைச் சிலந்திக்கு நன்றாகத் தெரியும் என்பதால் சிக்கிக்கொள்ளாது. ஆனால் பூச்சிகளுக்குத் தெரியாது என்பதால் அவை எளிதில் சிக்கிக்கொள்கின்றன. ஒரு சிலந்தி, இன்னொரு சிலந்தி பின்னிய வலையில் சிக்கிக்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x