Published : 31 May 2017 11:43 AM
Last Updated : 31 May 2017 11:43 AM
சில உயிரினங்களின் மூக்குகளைப் பார்த்தால் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அதுவேகூட அந்த உயிரினங்களின் அடையாளமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட சில உயிரினங்களைப் பார்ப்போமா?
நீள மூக்கு குரங்கு
குரங்கு இனங்களிலேயே நீளமான மூக்குள்ள குரங்கு இதுதான். சுமார் 18 செ.மீ. நீளத்தில் வாய் வரை வந்து இந்து மூக்கு தொங்கும். பார்ப்பதற்கே விசித்திரமாக இருக்கும். இந்தக் குரங்கு சாப்பிடும்போது மூக்கை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டுத்தான் சாப்பிட முடியும். ஆண் குரங்குகளுக்கு மட்டுமே இப்படி வித்தியாசமான மூக்கு உள்ளது. சத்தமாகக் கூச்சல் எழுப்பவும், எச்சரிக்கை ஒலி எழுப்பவும் இந்த மூக்கு உதவுகிறது. இந்தோனேஷியா, போர்னியோ தீவில் மட்டுமே இந்த நீள மூக்கு குரங்கு உள்ளது.
ரம்ப மீன்
மரங்களை அறுக்க உதவும் ரம்பம் போல காட்சியளிக்கும் வினோத மூக்குள்ள மீன்தான் ரம்ப மீன். மூக்கானது நீண்ட, தட்டையான, ஓரங்களில் பல் வரிசையுடன் இருக்கும். இதன் மூக்கு முழுவதும் துவாரங்கள் இருக்கும். இதன்மூலம் அருகில் இருக்கும் இரையை உணர்த்து அதை உணவாக்கிவிடும். ஆழ்கடலின் அடிமட்டத்தில் மண் மற்றும் சகதிக்குள் புதைந்து இரையைத் தேடிக் கண்டுபிடிக்கும். அதற்கு ரம்பம் போல் இருக்கும் மூக்கும் உதவுகிறது. அதோடு எதிரிகள் வந்தால் மூக்கைக் கொண்டு தற்காத்துக் கொள்ளவும் செய்யும். இதை‘தச்சர் சுறா’ என்றும் அழைக்கிறார்கள். அட்லாண்டிக் மற்றும் இந்தோ-பசிபிக் கடல்களில் இது அதிகம் காணப்படுகிறது.
டேபிர் பன்றி
பொதுவாகப் பன்றியின் முக அமைப்பில் மூக்கு நீண்டிருப்பது போலத் தெரியும். ஆனால், டேபிர் என்ற வகையைச் சேர்ந்த பன்றியின் மூக்குக் குட்டித் தும்பிக்கை போலவே இருக்கும். அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியாவில் உள்ள காடுகளில் இந்தப் பன்றி வாழ்கிறது. இதன் நீளமான மூக்கை எல்லாத் திசைகளிலும் அசைக்க முடியும். அதனால் கொஞ்சம் உயரத்திலிருக்கும் இலை தழைகளைக்கூடப் பற்றி பிடித்துவிடும். இந்தப் பன்றிகளில் ஏதாவது ஒன்று பிரிந்துவிட்டால், தன் கூட்டத்தோடு சேர இரு உத்தியைப் பின்பற்றும். மூக்கை வானத்தை நோக்கி உயர்த்திப் பிடித்து, பற்களைக் காட்டியபடி மற்ற டேபிர்கள் இருக்கும் இடத்தை மோப்பம் பிடித்துவிடும். அதற்கு அப்படிப்பட சிறப்பு உள்ளது.
தகவல் திரட்டியவர்: எஸ். ஜலாலுதீன், 9-ம் வகுப்பு,
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT