Last Updated : 25 Jan, 2023 05:50 PM

 

Published : 25 Jan 2023 05:50 PM
Last Updated : 25 Jan 2023 05:50 PM

உலகின் ஆழமான கடல் பகுதி!

1960 ஜனவரி 23. ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் ஜாக்கஸ் பிக்கார்ட், அமெரிக்கக் கடற்படை அதிகாரி டான் வால்ஷ் ஆகிய இருவரும் உலக சாதனையை நிகழ்த்தினர். இவர்கள் இருவரும் உலகின் கடல்களிலேயே மிக ஆழமான இடத்துக்குச் சென்று திரும்பினார்கள்.

பசிபிக் கடலில் ‘மரியானா டிரெஞ்ச்’ என்னும் மிக ஆழமான பகுதி ஒன்று உள்ளது. அங்கு ‘சேலஞ்சர் மடு’ எனப்படும் இடத்தின் ஆழம் சுமார் 11 கிலோ மீட்டர். பிக்கார்ட், வால்ஷ் ஆகிய இருவரும் ‘டிரியெஸ்டி’ எனப்படும் மூழ்கு கலம் ஒன்றின் அடியில் பொருத்தப்பட்ட ஓர் இரும்புக் கோளத்துக்குள் உட்கார்ந்தபடி சேலஞ்சர் மடுவுக்குள் இறங்கினர்.

ஆழமான அந்தக் கடல் பகுதிக்குள் எங்கும் கும்மிருட்டு. கோளத்துடன் இணைந்த மின்விளக்கு வெளிச்சத்தில் சிறு மீன்கள் அங்குமிங்கும் நகர்வது தெரிந்தது. கடலின் ஆழத்தில் தண்ணீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும். மீன்களைப் போல் மனிதர்கள் அங்கே இறங்கினால், அழுத்தம் தாங்காமல் நசுங்கிவிடுவார்கள்.

காற்றுக்கு எடை உண்டு என்பது உங்களுக்கே தெரியும். அதே போல தண்ணீருக்கும் எடை உண்டு. ஆகவே கடலுக்குள் இறங்கினால் நீரின் எடை நம்மை அழுத்தும். நீருக்குள் சுமார் 10 மீட்டர் ஆழத்துக்கு இறங்கினால் கடல்மட்டத்தில் உள்ளதைவிட அழுத்தம் இரண்டு மடங்காகிவிடும். 20 மீட்டர் ஆழத்தில் மூன்று மடங்காகிவிடும். கடலுக்குள் மேலும் மேலும் ஆழத்துக்குச் செல்லும்போது அழுத்தம் இதே விகிதத்தில் அதிகரித்துக்கொண்டே போகும். ஆகவே மனிதர்கள் கடலுக்குள் ஒரு கிலோ மீட்டர், இரண்டு கிலோ மீட்டர் ஆழத்துக்கு ஒருபோதும் இறங்க முடியாது. அப்படி இறங்க முயன்றால் அழுத்தம் காரணமாக நசுங்கிவிடுவார்கள்.

குறிப்பிட்ட ஆழத்துக்கு இறங்கினால் அங்கு எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. பிக்கார்டும் வால்ஷும் ஒரு கோளத்துக்குள் அமர்ந்து சேலஞ்சர் மடுவுக்குள் இறங்கினார்கள். கடலின் அழுத்தத்தைத் தாங்கும் விதத்தில் அந்தக் கோளம் 12 செ.மீ. தடிமன் கொண்ட உருக்கினால் தயாரிக்கப்பட்டிருந்தது. அதன் எடை மட்டும்13டன்.

இவ்வளவு எடை கொண்ட கோளம் எளிதாக உள்ளே இறங்கிவிடும். ஆனால், மீண்டும் இது மேலே வர வேண்டும் அல்லவா? அதனால் கோளம் சுமார் 15 மீட்டர் நீளமுள்ள தொட்டிக்கு அடியில் இணைக்கப்பட்டது. தொட்டியில் பல ஆயிரம் லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டது. தொட்டியின் இரு புறங்களிலும் இருந்த தொட்டிகளில் தண்ணீர். இவை தவிர, கெட்டியாக மூடப்பட்ட இரு அண்டாக்களிலும் இரும்புக்குண்டுகள் இருந்தன. இவற்றின் எடை மட்டும் 9டன்.

பிக்கார்டும் வால்ஷும் சேலஞ்சர் மடுவில் வேலையை முடித்துக்கொண்டு, பொத்தானை அழுத்தினர். அண்டாக்களிலிருந்த இரும்புக்குண்டுகள் அனைத்தும் கடலில் விழுந்தன. எடை குறையக் குறைய டிரியெஸ்டி கலம் மேலே வர ஆரம்பித்தது. பிக்கார்டும் வால்ஷும் கோளத்திலிருந்து பத்திரமாக வெளியே வந்தனர்!

இவர்கள் சாதனை நிகழ்த்தி 50 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல ஹாலிவுட் டைரக்டரும் கடல் ஆர்வலருமான ஜேம்ஸ் கேமரான் 2012 ஆம் ஆண்டு நவீன நீர்மூழ்கு கலம் மூலம் அதே சேலஞ்சர் மடுவில் இறங்கினார்.

2020ஆம் ஆண்டு விண்வெளி வீராங்கனை கேத்தி சல்லிவன் சேலஞ்சர் மடுவுக்குச் சென்று திரும்பினார். இதன் மூலம் சேலஞ்சர் மடுவுக்குள் சென்ற முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தார்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x