Published : 14 Dec 2016 10:47 AM
Last Updated : 14 Dec 2016 10:47 AM
பொதுவாக என் போன்ற சிறுவர்களுக்குப் பபுள் கம் என்றால் ரொம்ப பிடிக்கும். அந்தப் பபுள் கம் எப்படி வந்தது?
முதலில் சூயிங்கம்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அது கண்டுபிடிக்கப்பட்டுக் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்துத்தான் பபுள் கம்மை தயாரித்தார்கள். ஃப்ராங்க் ஃப்ளீர் என்பவர் ‘ப்ளிப்பர்-ப்ளப்பர்’ என்ற பெயரில் 1906-ம் ஆண்டு முதன் முதலாகப் பபுள் கம்மை தயாரித்தார். அதை மென்ற பிறகு அதை ஊதினார். அப்போது அது முகத்தில் ஒட்டி கொண்டது. ஒட்டிய பபுள் கம்மை எடுக்க எண்ணெய் தேவைப்பட்டது. அதனால், அது விற்பனைக்கே வரவில்லை.
பின்னர் 22 ஆண்டுகள் கழிந்தது. 1928-ல் அவருடைய சிக்லெட் நிறுவனத்தில் வால்டர் டயாமெர் என்பவர் வேலை பார்த்துவந்தார். அவர்தான் சரியான பபுள் கம்மை உருவாக்கினார். வாயில் போட்டு மென்ற சில நிமிடங்களில் பெரிதாக ஊத முடிந்தது. விற்பனைக்கு வந்த பிறகு குழந்தைகள் அதிக ஆர்வத்தோடு பபுள் கம்மை வாங்கினார்கள். பபுள் கம் 1950-களுக்கு முன்பாகவே உலகெங்கும் விற்பனையாகத் தொடங்கியது. விண்வெளியிலும்கூடப் பபுள் கம் சுவைக்கப்பட்டிருக்கிறது. 1965-ம் ஆண்டில் அமெரிக்காவின் ‘ஜெமினி-5’ விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள், பபுள் கம்மை சுவைத்தார்கள். இது அதிகாரபூர்வமாகப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
பபுள் கம் ஒட்டும்தன்மை உள்ளதால், அதை மெல்லும்போதும், ஊதும்போதும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் அதை அப்படியே விழுங்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்போது தொண்டைப் பகுதியில் பபுள் கம் சிக்கிக் கொள்ளும் ஆபத்தும் உண்டு. அதனால்தான் பபுள் கம்மை சிறுகுழந்தைகள் சாப்பிட வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
தகவல் திரட்டியவர்: டி.வெங்கடேஷ், 8-ம் வகுப்பு,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
செக்காணூரனி, மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT